சேஷாத்ரி ஸ்வாமிகள் – இறுதி பகுதி
வேறொரு சமயம் வள்ளிமலை ஸ்வாமிகளிடம் வயதானவர் உருவில் வந்து பசிக்கு உணவு கேட்டார் சேஷாத்ரி ஸ்வாமிகள். வள்ளிமலை ஸ்வாமிகள் உணவும் அளித்தார். பசியால் வாடிய வயதானவர் ஒரே மூச்சில் மூன்றுபடிக் கஞ்சியையும் குடித்துவிட்டார். அன்று முதல் தினமும் பெரியவருக்காக உணவு காத்திருக்கும். ஆனால் அந்த உணவை ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும். சில நாட்களில் கீரிப்பிள்ளையாக வருவதும் பெரியவர் உருவில் வந்ததும் சேஷாத்ரி ஸ்வாமிகள் எனப் புரிந்து கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள்.
திருவண்ணாமலையில் இருந்தபோது மயானத்திலேயே பொழுதைக் கழிக்கும் வழக்கம் உள்ள சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு அங்கு இருந்த வெட்டியான் ஒருவன் பழக்கம் ஆனான். அவன் ஸ்வாமிகளிடம் மிகவும் மரியாதை காட்டுவான். ஸ்வாமிகளும் அவனிடம் அன்போடு இருப்பார். தனக்கு அடியார்கள் கொடுக்கும் புதுத்துணிகளை வெட்டியானுக்குக் கொடுத்துவிட்டு அவனுடைய கந்தல் துணிகளைத் தான் அணிந்து செல்வார். ஸ்வாமிகள் மஹாசமாதி அடைந்தபோது பிரிவு தாங்காமல் துயரம் அடைந்தான் வெட்டியான். எப்போதும் வருத்தமாகவே இருந்தான்.
அவன் கனவில் ஒருநாள் ஸ்வாமிகள் தோன்றி அவனை வள்ளிமலைக்குச் செல்லுமாறும் தான் அங்கே அவனுக்கு தரிசனம் தருவதாகவும் கூறினார். வெட்டியானும் வள்ளிமலை கிளம்பிச் சென்று வள்ளிமலை ஸ்வாமிகளிடம் தான் வந்த காரியத்தைச் சொன்னான். சேஷாத்ரி ஸ்வாமிகளுக்காகக் காத்திருந்தான். மாலையில் பாறையின் மீது பெரியவருக்காக உணவு வைப்பதைப் பார்த்தான். அப்போது அங்கே வந்த கீரிப்பிள்ளை ஒன்று உணவை மிகவும் ரசித்துச் சாப்பிட்டது. அடுத்த கணம் வெட்டியான் கண்களில் கீரிப்பிள்ளை மறைந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் காட்சி அளித்தார். வெட்டியான் பக்திப் பரவசத்தில் உடல் நடுங்க அவரை வழிபட்டுத் தனக்காக அவர் தரிசனம் கொடுத்ததை நினைத்து நினைத்து பூரித்துப் போனான்.
சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவண்ணாமலை வந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிவிட்டன. சுவாமிகளுக்குத் தான் வந்த வேலை முடிந்துவிட்டது எனத் தோன்றியது போலும். 1928 ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒரு நாள் தன் பக்தை ஆன சுப்புலக்ஷ்மியிடம் , “இந்த வீட்டை விட்டுவிட்டுப் புதியதோர் வீட்டிற்குப் போக நினைக்கிறேன்.” என்று கூறினாராம். அந்த அம்மாவோ முதலில் மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய்ப் பேசுவதாக நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப ஸ்வாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், “ஆம்! புதியதோர் வீடு கட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம்.” என்றாராம். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வார்த்தைகளை சேஷாத்ரி ஸ்வாமிகள் பராசக்தியின் கட்டளையாக ஏற்றார். “சரி! அப்படியே செய்வோம்!” என்றார். சில நாட்களில் அவரின் சில பக்தர்களுக்கு சேஷாத்ரி ஸ்வாமிகளைப் புகைப்படமாகப் பிடித்து வைக்கவேண்டும் என்று தோன்றியது. ஆகவே துணி மாற்றாமல், குளிக்காமல் அழுக்கோடு இருந்த ஸ்வாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுக்க வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டினார்கள்.
ஸ்வாமிகள் வேண்டாம் என மறுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிப் புதுத்துணி அணிவித்து மாலைகள் அணிவித்துப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சலும் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41ஆம் நாள் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கச் சென்றார் ஸ்வாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்லமெல்ல உடல்நிலை மேலும் மோசமாகி 1929 ஆம் வருஷம் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சேஷாத்ரி ஸ்வாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்து சென்றது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்க முடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கப்பட்டு எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூரில் இருந்தெல்லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்துக்குக் குவிந்தார்கள்.
அனைவரும் ஸ்லோகங்களைப் பாடிக்கொண்டும் பஜனைப்பாடல்களைப் பாடிக்கொண்டும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அக்னிதீர்த்தக்கரையில் ஸ்ரீரமணரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். சிறிது தூரத்தில் ஒரு சமாதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதிக்கோயிலும் கட்டப்பட்டு திருவண்ணாமலை செங்கம் ரோடில் தற்போது சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆசிரமமாக நிலவி வருகிறது. அருணாசல மலையை அவர் எவ்வளவு ஆழமாக நேசித்தார் என்பதும், அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தார் என்பதும் கீழ்க்கண்ட வரிகளின் மூலம் தெரிய வருகிறது.
“ஏ ஜீவன்களே! இந்த மலையின் காந்த சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள். இது இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த மலையை நினைக்கும் அந்தக் கணத்திலேயே நம்முடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, காம, க்ரோத, மத மாற்சரியங்களை வெல்லும் வலிமை ஒருவனுக்கு வருகிறது. இந்த மலையை நோக்கி அவன் இழுக்கப்படுகிறான். இது மனிதனைத் தன் பக்கம் இழுப்பது மட்டுமில்லை, அவனை நிர்க்குணம் படைத்தவனாகவும் ஆக்குகிறது. இதனுடைய சக்தி அளப்பரியது. இது யுகம் யுகமாக இங்கே நின்றுகொண்டு பலருடைய ஒப்பற்ற தியாகங்களையும் பார்த்துக்கொண்டு ஒரு மௌன சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது இந்த மலை. ஏ! மானுடர்களே!இதன் உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு இதனோடு ஐக்கியமாகி விடுதலை பெறுங்கள்!”
நிறைவு.