யோக விளக்கம்:
அக்ஷரம் என்றால் ஸகுணம், ப்ரம்மம் என்றால் நிர்குணம். பகவானின் இந்த இரண்டு ஸ்வரூபங்களைப் பற்றியும் ஓங்காரம் பற்றிய வர்ணனையும் இந்த அத்யாயத்தில் இடம்பெறுவதால் இது அக்ஷரப்ரம்ம யோகம் என்ற பெயர் பெறுகிறது.
“புருஷோத்தமரே! பிரம்மம், அத்யாத்மம், கர்மம், அதிபூதம், அதிதைவம், அதியக்ஞம் என்றெல்லாம் சொன்னீர்!! இந்த அறியாதவனுக்குப் புரியும்படியாகச் சொல்லுங்கள்”
“அர்ஜுனா! அழிவற்ற உத்தமமான ஆத்மஸ்வரூபம் பிரம்மம் எனப்படும். அந்த பிரம்மத்தின் ஸ்வரூபமான ஜீவாத்மா அத்யாத்மம் என்று சொல்லப்படுகிறது. மனிதர் முதலிய பிராணிகளுடைய உற்பத்தியை உண்டுபண்ணுவது கர்மமாகிறது. தோன்றி அழியும் நியதியுள்ளவையெல்லாம் அதிபூதமாகும். உலகம் முழுவதற்கும் பிராணனான புருஷனும் எல்லா தேவதைகளும் எவருடைய உறுப்புகளாக இருக்கின்றனவோ எவர் எல்லாவற்றிலும் ஊன்றி தலைவராக உண்டாக்குபவராக இருக்கிறாரோ அவரே அதிதைவம். அந்த அதிதைவமும் அந்தர்யாமியாக எங்கும் எவருள்ளும் நிறைந்திருக்கும் நானே அதியக்ஞன்.
எவனொருவன் தனது சரீரத்தை விடும் தருவாயில் என்னை நினைத்துக்கொள்கிறானோ அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை. அதாவது தனது மரணகாலத்தில் ஒருவன் எந்த ரூபத்தை மனதில் கொண்டு உயிரை விடுகிறானோ அவன் அதே ரூபத்தை மறுபடியும் அடைகிறான். ஆகையால் நீ என்னையே நினைத்துக்கொண்டிரு. யுத்தமும் செய். மனதையும் புத்தியையும் என்னிடத்தில் வைப்பதினால் நீ என்னையே அடைகிறாய். புருவத்தின் மத்தியில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி அசையாத மனதுடன் “ஓம்” என்று யோக நிலையில் இருப்பவன் திவ்ய ரூபத்தோடு கூடிய பரமாத்மாவையே அடைகிறான். ப்ரம்மலோகத்திலிருந்து எல்லா உலகங்களும் தோன்றி அழிபவை. அதிலிருக்கும் ஜீவராசிகளும் அவ்வண்ணமே உற்பத்தியாகி மறைகின்றன.
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸய:
எப்போதும் என்னைத் தியானித்து மரணிக்கும் தருவாயிலும் என்னையே நினைப்பவன் முக்தியடைந்து இந்த பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து தப்பித்து என்னையே வந்தடைகிறான்.
பிரம்மதேவனின் பகல் ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்டது. இரவும் ஆயிரம் சதுர்யுகங்கள். அப்படிப்பட்ட பிரம்மதேவனின் பகலில் தோன்றும் உயிரினங்கள் இரவு வரும்போது அழிகின்றன. இப்படி உயிரினங்கள் தோன்றி மறைவது அவ்யக்தம் என்றும் சொல்லப்படும் ஸுக்ஷும பிரகிருதியிலிருந்து உண்டாகின்றன. இதற்கு மேலே இருக்கும் அவ்யக்த பிருகிதியே என் இருப்பிடம். அக்ஷரப்ரம்மம். அதுதான் நிலையானது. அதை அடைந்தவர்கள் மீண்டும் சம்சாரச் சூழலில் சிக்குவதில்லை.
தனது தேகத்தை விட்ட ஜீவன்கள் இரண்டு மார்க்கங்களில் இவ்வுலகிலிருந்து செல்கின்றன. ஒரு வழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாகவும், பகல் அபிமான தேவதையாகவும், சுக்லபக்ஷம் அபிமான தேவதையாகவும், உத்தராயணம் அபிமான தேவதையாகவும் இருக்கிறார்கள். அவ்வழியில் யோகிகள் தேவதைகளால் அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மத்தை அடைகிறார்கள். இப்படி பிரம்மத்தை அடைந்தவர்கள் திரும்பிவருவதில்லை.
இன்னொரு மார்க்கத்தில் புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், தக்ஷிணாயனம் ஆகியவைகள் அதிஷ்டான தேவதைகள். இந்த தேவதைகள் ஜீவன்களை சந்திரலோகத்தின் வழியாக பித்ருலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் அவரர்களின் புண்ணியபலன்களுக்குத் தகுந்தவாறு அங்கே அனுபவித்துவிட்டு பின்னர் மீண்டும் பூலோகத்தில் பிறக்கிறார்கள்.
இப்படியாக உத்தராயண மார்க்கத்தில் செல்பவன் அவனது புண்ணியங்களக்குத் தக்கவாறு மீண்டும் சம்சாரத்திற்கு திருப்புவதில்லை, அதே போல தக்ஷிணாயன மார்க்கத்தில் சென்ற ஜீவன்கள் அவரவர் புண்ணிய பலன்களுக்குத் தக்கவாறு மீண்டும் திரும்பி வந்து சம்சாரத்தில் புகுகிறார்கள்.
இதை அறிந்த யோகிகள் மோகத்தை அடையாமல் எது உன்னத மார்க்கமோ அதில் இறங்குகிறார்கள். அர்ஜுனா! ஆகையால் யோகினானவன் வேதங்களிலும் யக்ஞங்களிலும் தவதானங்களிலும் எந்தப் புண்ணியபலன் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அனுஷ்டித்து பிரம்மத்தை அடைகிறான்.”
அர்ஜுனன் மெய்மறந்து ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஒரு பாசுரம்:
நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,
மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே.
– திருவாய்மொழி – 6 – 4 – 10 – ஸ்ரீநம்மாழ்வார்
பொருள்:
நிழலாகவும் வெய்யிலாகவும் சிறுமைகளும் பெருமைகளும், குறுகி இருத்தல் நீளமாயிருத்தல், அசையும் பொருள்கள், அசையாப்பொருள்கள், மற்றவைகள் இவைகள் எதுவும் இல்லாதவை என்று அனைத்துமே எம்பெருமானாகவே இனிய வண்டுகள் பாடும் திருவிண்ணகர் பிரானின் திருவடிகளைத் தவிர நமக்கு வேறு பற்றுக்கோடு கிடையாது.
ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – அக்ஷர ப்ரம்ம யோகச் சாரப் பாசுரம்:
ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பேரு வாழ்ச்சிகளும்
சோராதுகந்தவர் தூ மதி கொள்வதுவும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே
இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs