பகவத்கீதை – ஒன்பதாவது அத்யாயம் – ராஜவித்யாராஜகுஹ்யயோகம்
யோக விளக்கம்:
அர்ஜுனனுக்கு தான் அளித்த உபதேசங்கள் எல்லா வித்யைகளிலும் சிறந்தது என்கிறார் பகவான். இது மறைத்துப் போற்றப்படவேண்டிய ரகசியங்களில் தலை சிறந்தது என்றும் சொல்வதால் இது ராஜவித்யா ராஜகுஹ்யயோகம் என்று பெயர் பெறுகிறது. இதில்தான் எதைச் செய்தாலும் தனக்கே அர்ப்பணம் செய்துவிடு என்று அர்ஜுனன் மூலமாக நமக்குச் சொல்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
அர்ஜுனன் நிமிரவேயில்லை. தலை குனிந்து பகவான் கிருஷ்ண பரமாத்மா சொன்னவகைகளை அசைபோட்டபடியே அமர்ந்திருந்தான். அவன் மனதில் இருந்த சஞ்சலம் இன்னும் நீங்கியபாடில்லை. பகவான் இன்னும் அவனுக்கு ஞானம் புகட்டுகிறான்.
“அர்ஜுனா! இப்போது உனக்கு நான் சம்சார பந்தத்திலிருந்து விடுபடும் அதிரஹஸ்யமான வித்தையைச் சொல்லித்தரப்போகிறேன். விஞ்ஞானத்துடன் கூடிய பிரம்மஞானம் ராஜவித்யா! அதுவே ராஜகுஹ்யம் எனப்படும் ரகசியங்களில் அரசன் போன்றது. இது மிகவும் பரிசுத்தமானது. தர்மத்தில் இருந்து விலகாமல் இருப்பது. இதை அனுஷ்டிக்காதவர்கள் என்னிடம் வந்து சேராமல் மிருத்யுவின் வசத்தை அடைந்து மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள்.
இன்ன உருவம் என்றில்லாத அவ்யக்த மூர்த்தியான என்னால் இந்த மொத்த உலகமும் பனிக்கட்டியினுள் இருக்கும் நீர் போல கட்டிவைக்கப்பட்டுள்ளன. எல்லா உயிரினங்களும் என்னுடைய சங்கல்பத்தினால் என் பலத்தினால் நிலைபெற்றுள்ளன. ஆனால் அவைகளில் நான் இருப்பதில்லை. [மேகங்கள் ஆகாயத்தில் நின்றாலும், மேகங்கள் கலைந்துவிட்ட போதிலும், ஆகாயம் கலையாது. அது அப்படியே இருக்கும். பகவான் ஆகாயம் போன்றவர்]
சர்வேஸ்வரனான என்னுடைய யோகமகிமை இத்தகையது. பூதங்களை நான் வகித்தாலும் அவைகளை நான் ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. இன்னும் சொல்கிறேன் கேள். வாயு எப்படி ஆகாயத்தை ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருக்கிறதோ அதுபோல எல்லா பூதங்களும் என்னில் நிலைபெற்றிருக்கின்றன.
கௌந்தேயா! மஹாபிரளயம் ஏற்பட்டு கல்பங்களின் முடிவில் எல்லா உயிரினங்களும் என்னுள்ளே அடங்குகின்றன. மீண்டும் அடுத்த கல்பத்தின் ஆரம்பத்தில் எல்லாவற்றிற்கும் நான் உயிரூட்டுகிறேன். இவ்விதம் நான் உலகப்படைப்பு தொழிலில் ஈடுபட்டாலும் அந்தக் கர்மங்களில் கட்டுப்படுவதில்லை. என்னால் இந்தப் பிரகிருதியில் அசைவன அசையாதன ஆகியவற்றோடு உலகம் தோற்றுவிக்கப்படுகிறது. இதனாலேயே சம்சாரச் சக்கரம் சுழல்கிறது.
என்னுடைய யோக மாயைய அறியாத மூடர்கள் நான் இவ்விதம் மனித உருத்தாங்கி நிற்பதால் என்னைச் சாதாரண மனிதனாக நினைக்கிறார்கள். ஆனால் ஒன்று சொல்கிறேன் கேள்! பெரியோர்கள் நான் தான் எல்லா உயிரினங்களும் நிலைப்பதற்கு காரணமானவன் என்று என்னையே வணங்குகிறார்கள். இடைவிடாது வழிபடுகிறார்கள். பக்தர்கள் என்னை கீர்த்தனம் செய்துகொண்டும் திரும்பத் திரும்ப வணங்கிக்கொண்டும் என்னையே வழிபடுகிறார்கள். இதில் ஞானயோகிகள் அவரிலிருந்து நான் வேறுபட்டவன் அல்ல என்பதாக நிர்குண பரப்பிரம்மமாகவும் மற்றவர்கள் பல ரூபங்களில் தோற்றமளிக்கும் விராட் ஸ்வரூபனாகவும் வழிபடுகிறார்கள்.
அர்ஜுனா! வேத ஸ்ரௌத கர்மாக்கள் க்ரதுவும் நானே! ஸ்மிருதியில் சொல்லப்படும் ஐந்து மஹா யக்ஞங்களும் நானே! பித்ருயக்ஞமான சிராத்தமும் நானே! ஹோமாதி திரவியங்களும் நானே! அந்த ஹோம கர்மங்களில் ஓதப்படும் மந்திரமும் நானே! அதில் ஊற்றும் நெய்யும் நானே! நெய்யால் வளரும் அக்னியும் நானே! அந்த ஹோமமே நானேதான்!
இவ்வுலகத்தைக் காத்து ரட்சித்துத் தாங்குபவன் நானே! நீ செய்யும் கர்மங்களுக்கு பலன் கொடுப்பவனும் நானே! உன் தந்தை, தாய், பிதாமஹனும் நானே! அறியத்தக்கவனும் புனிதம் நிரம்பியவனும் “ஓம்” என்ற பிரணவத்தில் ஒடுங்கிய ஓங்காரமும் ரிக்கும் ஸாமம் மற்றும் யஜுஸும் நானே! அடையத்தக்க பரமபதம் நானே! எல்லோரையும் ஆள்பவனும் நானே! நல்லன – தீயன ஆகியவற்றை நானே பார்க்கிறேன். எல்லோரும் சரணமடையும் போது அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கிறேன். யாரிடமும் கைம்மாறு எதிர்பாராமல் உதவிபுரியும் ஸ்நேகிதன் நான்.
பார்த்த! நானே சூரியனாக இவ்வுலகிற்கு வெப்பம் அளிக்கிறேன். மழையைத் தடுத்து நிறுத்துகிறேன். மாரியாயும் பொழிகிறேன். நானே அமரத்துவம் நிறைந்தவன். படைத்தவைகளை அழிக்கும் மகாகாலன் நானே. அழியாதது அழியக்கூடியது என்று எல்லாமே என் ஸ்வரூபம்தான்! மூன்று வேதங்களினால் கூறியபடி பயன்களை நல்கக்கூடிய யாகங்கள் செய்து அதில் ஸோமம் என்ற ரசத்தைப் பருகி பாவங்கள் அகன்று சுவர்க்கலோகத்தில் என்னை வந்து அடைகிறார்கள்.
யாரார் என்னையே சிந்தித்து வேறு எந்தப் பிரயோஜனத்தையும் கருதாமல் இருக்கிறார்களோ அவர்களின் யோகக்ஷேமங்களை நான் கவனித்துக்கொள்கிறேன். எந்த தேவதைகளை அவர்கள் உபாசித்தாலும் என்னையே வழிபடுகிறார்கள் என்றறி. நானே சர்வயக்ஞனாகவும் பிரபுவாகவும் இருப்பவன். விவேகமில்லாதவர்கள் எனை அறிவதில்லை. தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள். பித்ருகளைக் குறித்து விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் பித்ருகளையே அடைகிறார்கள். பூதங்களை அனுஷ்டிப்பவர்கள் பூதங்களையே அடைகிறார்கள். ஆனால் என்னை வழிபடுபவர்கள் என்னையே வந்தடைகிறார்கள். ஆகையால் என் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா பரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருமதஸ்நாமி பரயதாத்மந:
எவன் எனக்குப் பக்தியோடும் பிரியத்தோடும் ஒரு இலையோ, மலரோ, பழமோ அல்லது வெறும் நீரோ அர்ப்பணம் செய்கிறானோ அதை நான் சகுண ஸ்வரூபமாக வெளிப்பட்டு பிரியத்துடன் அருந்துகிறேன். இவையெல்லாம் சாதாரண மனிதர்களுக்குக்கூட எளிதில் கிடைப்பவை.
குந்தியின் மைந்தனே! எந்த வேலையைச் செய்தாலும், எதை உண்டாலும், எதை ஹோமம் செய்தாலும், எதை தானம் அளித்தாலும், எந்தத் தவம் செய்தாலும், எல்லாவற்றையும் எனக்கே அர்ப்பணம் செய்துவிடு. இவ்வாறு பகவானுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால் உன்னுடைய மனமானது சந்நியாச யோகத்தில் நிலைபெற்று கர்மங்களின் நல்லது தீயதுகளிலிருந்து விடுபடுகிறாய்.
பார்த்தா! நான் எல்லா உயிரினங்களிலும் சமமாகக் குடியிருக்கிறேன். எனக்கென்று யாரும் வேண்டியவர்களோ வேண்டாதவர்களோ கிடையாது. எவர்கள் பிரியத்துடனும் பிரேமையுடனும் பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்களோ அவர்களில் நானும் என்னிடத்தில் அவர்களும் நிலைபெறுகிறார்கள். தீய நடத்தைகள் உள்ளவர்களும் என் பக்தனாகி என்னையே பூஜித்து வழிபடும் போது அவர்களும் சாதுவாகிவிடுகிறார்கள். அவன் தர்மாத்மா ஆகிவிடுகிறான். நிரந்தர அமைதியை அடைகிறான். என்னுடைய பக்தன் அழிவதில்லை என்ற சத்தியத்தை நீ இப்போது அறிந்து கொள்!
அர்ஜுனா! பெண்கள், வைசியர்கள், நான்காம் வர்ணத்தவர்கள் சண்டாளர்கள் முதலிய இழிந்த பிறவிகளை அடைந்தவர்கள் எவர்களாக இருந்தாலும் என்னையே தஞ்சமடைந்து மேலான பெரும் பேறான மோட்சத்தை அடைகிறார்கள். அவ்வாறே ராஜரிஷிகளும், பிராம்மணர்களும் புண்ணியசாலிகளும் பக்தியுள்ளவர்களும் புண்ணியகதியை அடைகிறார்கள். நிலையில்லாததும் சுகமற்றதுமான இவ்வுலகத்தை அடைந்திருக்கும் நீ என்னை அடையக்கடவாய்.
என்னிடத்தில் மனமும் பக்தியும் உள்ளவனாகி என்னையே ஆராதிக்கக்கடவாய். என்னையே வந்தனம் செய்வாய்! என்னையே கதியென்று அடைந்து மனதை என்னிடத்தில் சேர்த்து என்னையே அடைவாய்!!”
ஒரு பாசுரம்:
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே
– திருவாய்மொழி – 5 – 3 – 6 –ஸ்ரீநம்மாழ்வார்
பொருள்
என் அன்னை என்ன சொன்னால் என்ன இல்லை இந்த ஊர்தான் என்ன சொன்னால் என்ன தோழிகளே அமரர்களின் முதல்வனான வண் துவராபதி மன்னன் மணி வண்ணனாகிய வாசுதேவனின் வலையுள்ளே அகப்பட்டு அவனையே சரணாகதி அடைந்து நான் செய்பவை எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுகிறேன்.
ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – ராஜவித்யா ராஜகுஹ்ய யோக சாரப் பாசுரம்:
தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையும்
பன் மேனி நண்ணினன் பால் பிரியா அன்பர் ஆசைகளும்
புண் மேனி விண்ணவர் பால் புரியாத தன் புத்தியையும்
நன் மேனி நாரணன் தான் நரனுக்கு நவின்றனனே
பொருள்
சிறந்த திருமேனியை உடைய நாராயணன் நரனாகிய அர்ஜுனனுக்கு தன்னுடைய மேன்மையான நிலை பற்றியும் தனது அவதாரங்களில் குறையாத விசேஷங்களையும் தேவர் அசுரர் நரர்கள் என்று பலவகையான மேனிகளில் அந்தர்யாமியாக உள்ள தன் மீது ஆசையாக இருக்கும் அன்பர்களும் அற்பமான மானுடன் ஜென்மம் எடுத்து வந்த என்னை வெறும் மனுஷ்யனாக நினைப்பவர்கள் பற்றியும் உபதேசித்தான்.
====== ராஜவித்யா ராஜ குஹ்ய யோகம் நிறைவடைந்தது =======
இவருடைய முகநூல் லிங்க் https://www.facebook.com/mannairvs