பகவத்கீதை – பதினாறாவது அத்யாயம் – தேவாசுர சம்பத் விபாக யோகம்
யோக விளக்கம்:
பரமேஸ்வரனான தெய்வத்தை அடைவதற்குரிய செயல்களைச் செய்து நற்பண்புகளையும் அதற்கான நன்னடத்தைகளையும் கடைப்பிடிப்பதற்கு தெய்வ சம்பத் எனப்படுகிறது. தீய பழக்கங்களும் குணங்களும் அசுரர்களுக்கு உரியது. அந்த அசுர சம்பத்துகளை நாம் களைய வேண்டும். இவைகளைப் பற்றிப் பேசுகிறது இந்த அத்யாயம்.
“அர்ஜுனா! இந்த உலகத்தில் உயிரினங்கள் தெய்வத் தன்மை மற்றும் அசுரத் தன்மை என்ற இருவிதமாக பிரிக்கப்படுள்ளன. இதில் தெய்வப்பண்பு உடையவர்களின் லக்ஷணங்களைக் கூறுகிறேன் கேள்.
பயமின்மை, மனத்தின் நான்கு நிலைகளான அந்தகரணத்தில் சுத்தி, ஞானயோகத்தில் எப்போதும் நிலைபெற்றிருத்தல், தாராளமாகத் தானம் செய்தல், மனதை அடக்குதல், யக்ஞாதி கர்மங்களை விடாமல் அனுஷ்டித்தல், வேதத்தைக் கற்றுக்கொடுத்தல் மற்றும் கற்றுக்கொள்ளுதல், தவத்தோடிருத்த்ல, நேர்மை, எவர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல், உண்மையே பேசுதல், கோபமின்மை, நான் செய்கிறேன் என்ற அகம்பாவத்தை விடுதல், புலன்களைக் கட்டுப்படுத்துதல், ஒருவரையும் பழியோ குறையோ சொல்லாமை, எல்லா பிராணிகளிடத்திலும் தயையுடன் இருத்தல், விஷயங்களில் பற்றற்ற தன்மை, மென்மை, செய்யக்கூடாத காரியத்தை செய்வதில் வெட்கம், ஆசை ஊட்டக்கூடியவைகள் எட்டக்கூடிய தூரத்தில் இருந்தாலும் மனநிலை தவறாதிருத்தல், பொறுமை, தைர்யம், பிறருக்கு துரோகம் செய்யாமை, அதிகமான கர்வமில்லாதிருத்தல் ஆகியவை தெய்வசம்பத்துடன் அதாவது தெய்வ மனப்பாங்குடன் இருப்பவர்களின் இலக்கணங்கள்.
இதற்கு மாறாக அசுரத்தன்மையுடையவர்கள் பிறர் தன்னை தர்மவான் என்று நினைக்கவேண்டும் என்பதற்காக தர்மம் செய்தல், தன்னிடமிருக்கும் ஐஸ்வரியத்தாலும் கல்வியினாலும் கர்வத்தோடு இருத்தல், அகங்காரம், கோபம், சாதுக்களை பழித்து அவர்களுக்கு வருத்தம் உண்டாக்கும் சுபாவம், அக்ஞானம் ஆகியவைகளோடு இருப்பார்கள்.
தேவசம்பத்தானது பந்தங்களை விட்ட மோட்சத்திற்கும் அசுரசம்பத்தானது பந்தத்திற்கும் காரணமாகச் சொல்லப்படுகிறது. பாண்டவ! நீ தெய்வசம்பத்தை பெறுவதற்காக பிறந்திருக்கிறாய். நீ துயரப்படாதே! தெய்வசிருஷ்டியைப் பற்றி நான் இதுவரை விஸ்தாரமாகக் கூறினேன். அசுரசிருஷ்டியைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறேன் கேள்!
அசுர சுபாவமுள்ள ஜனங்கள் இம்மையில் எது நன்மை தரும் என்ற விஷயங்களைப் பற்றியும் மறுமையில் மோக்ஷத்திற்கான சாதனங்களான வைதிகதர்மங்களையும் அறியமாட்டார்கள். உள்ளும் புறமும் ஆசாரமும் சுத்தமும் சத்தியமும் அவர்களிடம் இருக்காது. அந்த அசுர சுபாவமுள்ளவர்கள் இவ்வுலகம் பிரம்மத்தில் நிலைபெறாத அசத்யம் என்கிறார்கள். ஈஸ்வரன் ஒருவன் இல்லை என்று நாஸ்திகம் பேசுகிறார்கள். ஆண் பெண் உறவிலேதான் இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் காமத்தை காரணமாகக் கொள்ளவில்லையென்றால் வேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று பேசுகிறார்கள். இவர்களுடைய ஞானம் இவ்வளவுதான். தேகத்தையே பற்றிக்கொண்டு ஆத்மாவை அறிய அவர்கள் முற்படுவதில்லை. அல்ப புத்தியுடன் குரூர வேலைகளில் ஈடுபட்டு உலகத்தின் நாசத்துக்காகவே இவர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் காமத்தைத் தழுவி டம்பம், தற்பெருமை, திமிர் இவற்றுடன் எந்த விதத்தினாலும் பூர்த்தி செய்யமுடியாத ஆசையைப் பற்றிக்கொண்டு அஞ்ஞானத்தினால் பொய்யான கருத்துக்களோடு தூய்மையற்ற வாழ்வு வாழ்கிறார்கள்.
இவர்கள் போகங்கள் அனுபவிப்பதில் அதிக நாட்டம் கொண்டு சுகமெல்லாம் இதுதான் என்ற தீர்மானத்தோடு மரண காலம் வரை எண்ணற்ற கவலைகள் தொடர இருக்கிறார்கள். இவர்கள் ஆசைக் கயிற்றைப் பற்றிக்கொண்டு நீதிக்குப்புறம்பாக செல்வம் பொருள் திரட்டுவதிலேயே முழுமுயற்சியுடன் ஈடுபடுகிறார்கள்.
இவை என்னால் இன்று அடையப்பட்டது. இவைகள் நான் மேலும் பெறுவேன். என்னிடத்தில் இவ்வளவு செல்வம் உள்ளது. இது மேலும் எனக்கு விருத்தியடையும். என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
இந்தப் பகைவனை நான் கொன்றேன். இதுபோல மேலும் நான் பிற பகைவர்களையும் கொல்வேன். நானே எல்லாவற்றிற்கும் ஈஸ்வரன். நானே செல்வத்தை அனுபவிப்பவன். எனக்கு எல்லா திறமைகளும் உள்ளது. வலிமையுடையவன். சுகமுள்ளவன். நானே செல்வந்தன். நற்குடியில் பிறந்தவன். எனக்கு நிகர் எவன்? யாகம் செய்யப்போகிறேன். தானம் அளிக்கப்போகிறேன். இன்பத்தில் திளைக்கப்போகிறேன். என்று அஞ்ஞானத்தினால் மயக்கமுற்றிருக்கிறார்கள். இவர்கள் மோக வலையில் சிக்கி அசுத்தமான பாழ் நரகத்தில் வீழ்கிறார்கள்.
செல்வத்தினால் உண்டான செருக்கும் திமிர் படைத்தவர்களுமான அவர்கள் டம்பத்தினாலே பிரசித்தி பெறுவதற்காக யாகத்தை செய்யும் முறைகளை மீறி செய்து என்னை ஆராதிக்கிறார்கள். இவர்கள் தம்மைத் தாம் புகழ்ந்துகொள்பவர்கள். பிறத்தியாரை வணங்காதவர்கள். இவர்கள் அகங்காரத்தையே பிரதானமாக உடையவர்கள். உடல்வலிமையும் கர்வமும் ஆசையும் கோபமும் இவர்களுடன் இருக்கும் குணங்கள். பிறரை இகழும் இவர்கள் தங்களுடைய உடலிலும் பிறர் உடலிலும் அந்தர்யாமியாக இருக்கும் என்னை வெறுத்து ஒதுக்குபவர்களாக இருக்கிறார்கள்.
இப்படி என்னை வெறுப்பவர்களும் பாவம் செய்யும் கொடியவர்களும் மனிதர்களில் கடையர்களானவர்களை நான் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன். அர்ஜுனா! இப்படிப் பட்ட அறிவிலிகள் எல்லாப் பிறவிகளிலும் என்னை அடையாமல் அசுரப்பிறவியில் பிறக்கிறார்கள்.
த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஸநமாத்மந:
காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யேஜேத்||
அர்ஜுனா! காமம், கோபம், பேராசை ஆகிய இவை மூன்றும் நரகத்தின் நுழைவாயில்கள் ஆகும். இவை ஆத்மாவை சர்வநாசம் செய்துவிடுகின்றன. இவை ஒருவனை இழிநிலைக்கு இட்டுச்செல்லும். ஆகையால் இம்மூன்றையும் ஒருவன் கட்டாயம் விடவேண்டும். இம்மூன்றையும் விட்டவன் மேன்மைக்குரிய செயல்களைப் புரிந்து என்னையே அடைகிறான்.
சாஸ்திரங்களை விட்டு தன் மனம் போன போக்கில் செல்பவன் அவன் வெற்றி அடைவதில்லை. பெரும்பேற்றையும் மேலான நிலையையும் சுகத்தையும் என்னையும் அடைவதில்லை. இவ்வுலகில் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பது சாஸ்திரங்கள்தான் சான்று. இவையெல்லாம் தெரிந்துகொண்டு சாஸ்திர முறைப்படு கர்மங்களைச் செய்!”
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன்னை தெய்வகுணத்தோடு பிறந்தவன் என்று கூறியதை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்ட அர்ஜுனன் தன்னெதிரே பெரும் யுத்தம் தயாராக நிற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். பரமாத்மா இன்னமும் கீதையைத் தொடர்ந்தார்.
ஒரு பாசுரம்:
உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம் ஆகியுன் தனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே. என்னுடை ஆருயி ரேயோ
-திருவாய்மொழி 8 – 1 – 4 – ஸ்ரீநம்மாழ்வார்
பொருள்
பக்தர்கள் விரும்பும் உருவம் உன்னுடையது. அவர்கள் உன் அன்பர்கள் ஆனார்கள். உன்னுடைய மாயையினால் செய்பவை எல்லாமே அவர்களுக்கு உகந்தவைதான். பெரும் போர் செய்து இருபக்க படைகளுக்கும் நடுவில் நின்று கௌரவப் படையை அழித்தவனே அமரர்களுக்கு அமுதாகவும் அசுரர்களுக்கு நஞ்சாகவும் இருப்பவனே என் ஆருயிரே உன் அன்பர்களுக்கு வேண்டியதை அருள்பவனான உன்னை அறிவில்லாதவனாகிய நான் சந்தேகிக்கிறேனே!
ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – தேவாசுர சம்பத் விபாக யோக சாரப் பாசுரம்:
ஆணை மறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோனை மாராத குணச் செல்வா நீ குறிக்கொள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா என்று கண்ணன் இயம்பினனே
பொருள்:
விசயா! என்னுடைய கட்டளையை ஆணையை மீறாதவர்கள் தேவர்கள் அப்படியில்லாமல் அதை மீறும் நடையுடையவர்கள் அசுரர்கள். வக்கிரத்தன்மையில்லாமல் நற்குணங்களைச் செல்வமாக உடையவனே நீ வேதத்தையே அடிப்படையாக் கொள். பரதத்துவமும் தீங்கில்லாத கர்மங்களையும் இந்த வேதங்களின் மூலம் அறிந்துகொள் என்று கண்ணன் இயம்பினான்.
====== தேவாசுர சம்பத் விபாக யோகம் நிறைவடைந்தது ======