ஆன்மிகம்

ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!

திருமழிசை என்ற ஊரில் பார்க்கவ முனிவரும் கனகாங்கி என்ற அவரது மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை கை, கால்கள் இன்றி இருந்தது.அந்த குழந்தையை ஒரு பிரம்புப்புதரின் கீழ் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

பெருமாளின் அருளால் அந்த குழந்தைக்கு உறுப்புகள் வளர்ந்தன. பசித்து அழத் தொடங்கியது. பெருமாள் தாயாருடன் வந்து அந்தக் குழந்தைக்குப் பால் ஊட்டினார். திருமழிசை என்ற ஊரில் பிறந்ததால் திருமழிசை ஆழ்வார் என்று பெயர் ஏற்பட்டது.

ஒரு நாள், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க வந்த போது புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்தக் குழந்தையை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு தன் மனைவி பங்கயச் செல்வியிடம் கொடுத்தான். அவள் அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள்.

திருவாளன், பங்கயச் செல்விக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டார்கள். திருமழிசை ஆழ்வாரும் கணிகண்ணனும் மிகுந்த அன்புடன் பழகினார்கள்.

திருமழிசை ஆழ்வார் பல சாஸ்திரங்கள் கற்றார். உலகில் பல மதங்கள் இருக்கிறன, இந்த உலகத்தைப் படைத்த கடவுள் யார் என்று குழப்பம் ஏற்பட்டது. கடும் தவம் புரிந்தார். பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். சிலர் சாக்கிய(பௌத்த) மதம் தான் கடவுளை அடைய வழி என்றார்கள். உடனே ஆழ்வார் சாக்கிய மதத்தில் சேர்ந்து அவர்களின் தத்துவ நூல்களைப் படித்தார். அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. குழப்பம் இன்னும் அதிகமாகியது. அந்த மதத்தை விட்டுவிட்டு சமண மதத்துக்குச் சென்றார். அங்கேயும் அதே போல அவருக்குத் தெளிவு ஏற்படவில்லை. அலைந்தார். பிறகு சைவ மதத்தைத் தழுவினார். சிவவாக்கியர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, சைவ தத்துவ விளக்கங்களை ஆராயத் தொடங்கினார்.

இவர் ஆராய்வதை ஒருவர் கவனித்து வந்தார். அவர் பேயாழ்வார். இவரின் ஆராய்ச்சி குணத்தைக் கண்ட அவர் இவருக்கு முழுமுதற் கடவுளைப் பற்றிப் புரியவைக்க ஒரு திட்டம் போட்டார். ஒரு நாள் காலை திருமழிசை ஆழ்வார் வரும் வழியில் பேயாழ்வார் செடிகளைத் தலை கீழாக நட்டார்.

இலைகள் கீழ் பக்கமாகவும், வேர்ப் பகுதி ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்தது. ஒரு குடத்தை எடுத்தார் அதில் நிறைய ஓட்டைகளைப் போட்டு, கிணற்றிலிருந்து அதில் நீர் ஒழுக செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முயன்றார். தண்ணீர் இல்லாததால் அவர் மீண்டும் கிணற்றிலிந்து எடுத்தார் மறுபடியும் ஒழுகியது. இந்த விசித்திரமான செயலைப் பார்த்தார் திருமழிசை ஆழ்வார்.

பேயாழ்வார் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ந்து கற்றுக்கொள்ளும் குணமுடைய திருமழிசை ஆழ்வாருக்குத் தலைகீழ் செடியும், ஒழுகும் ஒட்டை குடமும் சிரிப்பு வந்தது.

பேயாழ்வார் இதைக் கவனித்து ”உங்களைப் பார்த்தால் மிகுந்த படித்தவராகத் தெரிகிறது. ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்.
“பித்துப் பிடித்தவர் போலத் தலை கீழ் செடிகள்.. ஓட்டை குடம்… ” என்றார் சிரித்துக்கொண்டே.

“பித்துப் பிடித்தவன் நீர் அன்றோ ! பரம்பொருள் யார் அவனை எப்படி அடைய முடியும் என்று தேடித் தேடி பித்துப் பிடித்து அலைந்துகொண்டு இருப்பவர் நீர் தானே !”

திருமழிசை ஆழ்வார் துணுக்குற்று “என்ன சொல்லுகிறீர்கள் ?” என்றார்.

பேயாழ்வார் “என் செயல் கண்டு சிரித்தீர் ஆனால் அதன் உட்பொருளை ஆராய உம்மால் முடியவில்லையே! நீர் எப்படி பரம்பொருளைக் கண்டுபிடிக்க போறீர் ?” என்று கேட்க திருமழிசை ஆழ்வார் திகைத்து நின்றார்.

“நீரே உம் செயலுக்கு விளக்கத்தையும் சொல்லும்” என்றார்.

”நீ ஆராய்ந்த மதம், தத்துவம் எல்லாம் இந்த செடிகளைத் தலை கீழாக நடுவதற்குச் சமம். ஓட்டை குடத்தில் தண்ணீர் ஊற்றுவது அந்த மதம் உமக்கு மோட்சம் அளிக்கும் என்று நம்புவதற்குச் சமம்!” என்று கூறிவிட்டு பேயாழ்வார் வேத கருத்துக்களையும் பரம்பொருளைப் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்.

இதைக் கேட்டுக்கொண்டு இருந்த திருமழிசை ஆழ்வார் “இவ்வளவு பேசுகிறீரே அந்த பரம்பொருளை நீர் கண்டீரோ ? “ என்றார்
“கண்டேன், என்னுள் கண்டேன், என் வெளியில் கண்டேன். நிலத்திலும் கண்டேன், நீரிலும் கண்டேன், காற்றிலும் கண்டேன், நெருப்பிலும் கண்டேன், ஆகாசத்திலும் கண்டேன், கோவிந்தா என்ற நாமத்தில் கண்டேன் ஏன் உன் உள்ளும் கண்டேன்!” என்றார்.

“அவன் உருவம் அற்றவன். அவனை எப்படிக் காண முடியும் ? அவனை எனக்குக் காட்டுங்கள்” என்று திருமழிசை ஆழ்வார் கேட்க அதற்குப் பேயாழ்வார் ”அவன் உருவமற்றவன் என்றாலும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாருடன் நானும் சேர்ந்து திருக்கோவிலூரில் அவன் திருமேனி அழகைக் கண்டு ரசித்தோம். திருவரங்கத்தில் கிடக்கிறான், என்னுள் நிற்கிறான்” என்று பேயாழ்வார் திருக்கோவிலூரில் நடந்த கதையைச் சொன்னார்.

இவ்வளவு நாள் உண்மை அறியாது தவித்த திருமழிசை ஆழ்வார் மனம் உருகி பேயாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு திருமாலே பரம்பொருள். அவரே மோட்சம் கொடுக்க வல்லவர் என்ற உண்மையை அறிந்துகொண்டார் என்று அந்தப் பெண் சொன்ன போது ராமானுஜர் பக்கத்திலிருந்த கோவிந்தனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

குட்டிப்பெண் இவர்கள் சிரிப்பதைக் கவனித்து “என்ன சாமி நீங்களும் பேயாழ்வார் மாதிரி சிரிக்கிறீர்கள்? நான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா ?” என்றாள்.

“பிள்ளாய்! நீ தப்பாகச் சொல்லவில்லை. இதோ பக்கத்தில் இருக்கிறாரே கோவிந்தன் ஒரு காலத்தில் திருமழிசை ஆழ்வார் போல காளஹஸ்தி உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக இருந்தான். திருமலை நம்பி இவரை ஆளவந்தாரின் ஸ்லோகத்தைக் கொண்டு திருத்தினார்! அதை நினைத்தேன் சிரிப்பு வந்தது” என்றார்.

கோவிந்தன் “உடையவரும் அதே ஸ்தோத்திரத்தால் ஈர்க்கப்பட்டார் என்பதையும் நீ அறிய வேண்டும் பெண்ணே” என்றார்.

அந்தப் பெண்ணுக்கு இவர்கள் பேசிக்கொள்வது புரியாமல் ஆவலுடன் “சாமி, நீங்கள் பேசிக்கொள்வது முழுவதும் புரியவில்லை சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா ?”

”சொல்கிறேன் பெண்ணே! ஆளவந்தார் ஸ்தோத்திர ரத்தினத்தில் திருமாலின் மகிமையாகிற கடலில் சிவன், பிரம்மா, இந்திரன் ஒரு சிறு துளி. திருமாலே எல்லாவற்றிருக்கும், எல்லா காலங்களிலும் தலைவன் அவனே! என்று திருமழைசை ஆழ்வாரின் பாடல்களைக் கொண்டு ஆளவந்தார் இந்த ஸ்லோகத்தை இயற்றினார்” என்றார்.

“மிகுந்த மகிழ்ச்சி இந்த தகவலைச் சொன்னதற்கு என்றாள் அந்த பெண்.

ராமானுஜர் ”என் சிரிப்பால் உன் கதை நின்றுவிட்டது, நீ கதையைத் தொடர்ந்து சொல்லு” என்று சொன்னதுடன் அந்த பெண் தொடர்ந்தாள்.

திருமழிசை ஆழ்வார் காஞ்சியில் சில காலம் தங்கியிருந்தார். கணிகண்ணன் ஆழ்வாரையே தன் குருவாகக் கொண்டு ஆசிரமத்தில் ஆழ்வாருக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்துகொண்டு இருந்தான்.

ஆசிரமத்தில் தினமும் ஒரு வயதான மூதாட்டி பெருக்கி மொழுகி, கோலம் போட்டு சுத்தம் செய்யும் பணி செய்து வந்தாள். ஒரு நாள் ஆழ்வார் தியானத்தில் இருக்கும் போது இவள் பெருக்கிய சத்தம் கேட்டு கண் திறந்து மூதாட்டி பெருக்குவதைப் பார்த்தார்.

“தினமும் சுத்தம் செய்வது நீங்களா ?” உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்கு அந்த மூதாட்டி “வயதாகிவிட்டது முன்பு போல இப்போது வேலை செய்ய முடிவதில்லை. உங்களுக்கு என்றும் பணி செய்ய வேண்டும் என்பது என் ஆசை” என்றாள்.

ஆழ்வார் “என்றும் இளமை மாறாமல் இருப்பாயாக” என்று ஆசிர்வதித்தார். உடனே அந்த மூதாட்டி இளம் பெண்ணாக மாறினாள். அந்த நாட்டுப் பல்லவ மன்னன் அவள் மீது ஆசைப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொண்டான். வருடங்கள் கடந்தது, அந்தப் பெண் ஆழ்வார் ஆசீர்வாதத்தால் இளமையாக இருக்க மன்னனுக்கு வயோதிகனாகிப் போனான். ஒரு நாள் அரசியிடம் எப்படி இளமை மாறாமல் இருக்கிறாய் என்று கேட்க தன் கதையைக் கூறினாள்.

மன்னன் கணிகண்ணனை அழைத்து ஆழ்வாரை அழைத்து வரச் சொன்னான். கணிகண்ணன் எதற்கு என்று கேட்க அதற்கு மன்னன் “ஆழ்வாரை அழைத்து என்னைப் பற்றிப் பாடினால் எனக்கு இளமை திரும்பும்” என்று காரணத்தைக் கூறினான்.

கணிகண்ணன் ஆழ்வார் மானிடர்களைப் பாட மாட்டார் என்று கூற, அப்படி என்றால் நீ பாடு என்று மன்னன் வற்புறுத்தினான். அதற்கு கணிகண்ணன் நானும் என் குருநாதர் மாதிரி மானிடர்களை பாட மாட்டேன் என்று கூற மன்னனுக்குக் கோபம் வந்து என் நாட்டில் உனக்கு இடம் இல்லை கிளம்பு என்றான்.

கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறினார். என் சீடன் இல்லாத நாடு எனக்கும் தேவை இல்லை என்று புறப்பட்டார். போகும் வழியில் திருவெஃகா திவ்ய தேசம் வர பெருமாளைப் பார்த்து, கணிகண்ணன் போகிறான், நானும் அவனைத் தொடர்ந்து போகிறேன், நீயும் கிளம்பு என்று சொல்ல உடனே பெருமாள் தன் ஆதிசேஷனாகிய பாம்பைச் சுருட்டி கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். காஞ்சி மாநகரமே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

மன்னன் மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, ஆழ்வார் பெருமாளுடன் ஊர் திரும்பினார்.

“சாமி, திருமழிசை ஆழ்வார் போல நான் எல்லா மதங்களையும் ஆராய்ந்து திருமாலே முழுமுதற் கடவுள் என்ற உண்மைப் பொருளைக் கூறவில்லை, அதனால் நான் கிளம்புகிறேன்” என்றாள்.

“பெண்ணே நீ வயதில் சிறியவளாக இருந்தாலும், சொல்லும் கதைகளில் ஆழ்ந்த உட்பொருளை உடையதாக இருக்கிறது, திரும்ப ஊருக்குப் போகலாம் வா” என்றார்.

அந்தப் பெண் சற்றும் யோசிக்காமல் “நான் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப்போலே!” என்றாள்.

ராமானுஜர் திகைத்து நின்றார், அடுத்த கதை கேட்க!

(Visited 270 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close