சிறுகதை

வலைப்பின்னல்

அந்த சனிக்கிழமை வழக்கம் போல் லேப்டாப்பில் மூழ்கி யூடியூபில் பரிதாபங்கள் காணொளியைப் பார்த்து அட்டகாசமாக சிரித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை அம்மாவின் பேச்சு திசை திருப்பியது.

“அப்பார்ட்மெண்ட்ல எது நடந்தாலும் கண்டுக்க மாட்டியா? மோட்டர்ல ப்ராப்ளம்னு தண்ணி வரல, கீழ மோட்டரை சரி பண்ணிட்டு தண்ணி ஏறலன்னு மேல தொட்டியை பார்க்க ஆளுங்க போயிருக்காங்க. இருப்பத்தஞ்சு வயசாச்சு. ஆம்பளை பிள்ளை நீ போய் என்னன்னு பாக்க மாட்டியா?”

இனி பத்து வினாடிகள் நகராது இருந்தால் முடிந்தது கதை. அடுத்தடுத்து அம்மா ஏவும் அஸ்திரங்கள் பலமாக இருக்கும். தாங்காது என்று உணர்ந்தவன் மொபைல் டேட்டா இணைப்பை துண்டித்து ஹாட் ஸ்பாட்டை முடக்கி லேப்டாப்பை ஷட் டவுன் செய்து விட்டு லிஃப்டை நோக்கி நகர்ந்தான்.

அந்த ஃப்ளாட்டுக்கு குடி வந்த ஆறு மாதங்களில் லிஃப்டில் ஏறி மேல் தளங்களுக்கு முதல் முறையாக செல்கிறான். மொட்டை மாடியில் நடக்கும் ப்ளம்பிங் வேலைகளைப் பார்ப்பதற்கு முன்பாக அந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்து விடுவோம்.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம். லிஃப்ட் வசதியே பத்து வருடங்களுக்கு முன்பாகத் தான் நிறுவப்பட்டது. தரைத் தளத்தில் வீடுகள் உண்டு. பார்க்கிங் வசதியிலும் குறை இல்லை. தரைத்தளம், ஒன்று, இரண்டு , மூன்று என நான்கு தளங்கள். ஒவ்வொன்றிலும் நான்கு வீடுகள். ஆக ஒரு ப்ளாக்கில் பதினாறு வீடுகள். இது போல பதினைந்து ப்ளாக்குகள். மொத்தம் எண்பது வீடுகள். ஒவ்வொரு ப்ளாக் மொட்டை மாடியிலும் நீர் நிரப்ப இரு பெரும் ராட்சசத் தொட்டிகள். மாநகராட்சி குடிநீருக்கு ஒன்று. நிலத்தடி நீருக்கு மற்றொன்று. மாநகராட்சி குடிநீர் நிரந்தரமில்லை என்பதால் எண்பது வீடுகளின் நீராதாரமாக இருப்பது நிலத்தடி நீர் மட்டுமே!

பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் சந்தோஷின் தந்தை முனுசாமி அந்த ஃபிளாட்டை ஹோம்லோன் துணையுடன் வாங்கினாலும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வங்கி குடியிருப்பின் முதல் தளத்தில் தான் குடித்தனம் நடத்தி வந்தார். இந்த கெல்லீஸ் ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிருந்தார். பணி ஓய்வுக்கு ஐந்து வருடங்கள் இருக்கையில் தரைத் தளத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு குடி வந்து விட்டார். 

இனி மாடிக்குப் போகலாம். சந்தோஷ் சென்ற போது நான்கு அப்பார்ட்மென்ட் வாசிகள் ப்ளம்பர்களிடம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கீழே மோட்டார் பழுது பார்க்கப்பட்டு தண்ணீர் போகும் பைப்பில் இருந்த அடைப்பும் சரி செய்யப்பட்டுவிட்டது. மேலே இரு தொட்டிகளையும் சுத்தம் செய்ய வந்திருக்கிறார்கள். க்ளோரினேட் செய்ய நீர் நிரம்பிய வாளிகள், கலக்க பவுடர் பாக்கெட் என தயாராக இருந்தார்கள். மோட்டர் போட்டு கொஞ்சம் நீர் ஏற்றி மாடியில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்து… திட்டமிடல் நேர்த்தியாக இருந்தது.

வேடிக்கை பார்க்க ஒரு யுவதி மேலே வந்தார். சந்தோஷ் அந்தப் பெண்ணை கவனிக்கத் துவங்கினான். அடர் பச்சை நிற சுடிதார், வெள்ளை துப்பட்டா, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு அதன் மேல் குங்குமம், சற்று நீளமான கேசம். திருத்தமான ஒற்றைப் பின்னல் சிகை அழகை மேலும் அதிகமாக்கியது. அசையும் ஜிமிக்கி, சற்று உப்பலான கன்னம், பாந்தமான தோல் நிறம் அவளின் வசீகரத்தை மேலும் கூட்டின. அவள் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசினாள்.

“சரி ஆகிடுச்சு மா, நம்ம செகண்ட் ஃப்ளோர்ல மட்டுமா தண்ணி வரல, எல்லாருக்கும் தான் வரல, தொட்டியை கிளீன் பண்ணி ஒன் ஹவர் கழிச்சு தண்ணி நிரப்புவாங்க” பதிலுக்கு அவள் அம்மா ஏதோ பேசியிருப்பார் போல! தொடர்ந்து தெலுங்கில் மாட்லாடத் துவங்கினாள்.

அவனுக்குப் பிடித்தமான நடிகையின் முகம், உடல் மொழி, வாய்ஸ் மாடுலேஷன் அப்படியே அச்சு அசலாக வெளிப்பட்டதால் எங்கேயோ எப்போதோ அவளைப் பார்த்திருக்கிறோமே என்ற யோசனை சந்தோஷுக்குள் நுழையவில்லை. அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்தான். அவளிடம் நாலு வார்த்தை கதைக்கப் பிரியப்பட்டான். பிரியம் வெளி வந்தது.

“அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா பூர்ணிமா?”

அவள் ஆச்சரய்ப்பட்டாள். பட்டென “என் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்” என்றாள்.

“சிலரைப் பார்த்த உடனே அவங்க பெயர் என்னன்னு கண்டு பிடிச்சுருவேன் அந்த திறமை என்கிட்ட இருக்கு”

“மாடிப் பக்கம் வரும் போது அம்மா என் கிட்ட பேசுறதை கேட்ருப்பீங்க அதை வைச்சு…”

“நோ இன்னிக்கு தான் மாடிக்கே வரேன் அதுவும் லிஃப்ட்ல, நான் தான் சொல்றேனே சிலரைப் பார்த்த உடனே…”

“அப்படியா, பிளம்பிங் வொர்க் செய்யற ஆட்கள்ல ஒருத்தர் பேரை சொல்லுங்க பார்ப்போம்”

“சிலர்னு தான் சொன்னேன், எல்லாரும்னு சொல்லல”

ஆழமாக ஒரு பார்வை வீசியவள் துப்பட்டாவை தட்டி உதறி புறப்பட்டாள்… வடிவான மேனரிஸமும் வசீகரமாக இருந்தது… இசையமைப்பாளர் சத்யாவின் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் பாடலின் இன்டர்லூட் சந்தோஷ் செவிகளில் தானாக ஒலிக்க ஆரம்பித்தன…    

வீட்டுக்குள் நுழைந்து நீர் சிக்கல்கள் பற்றி பத்து நிமிடத்திற்கு விரிவாகப் பேசினான். “மணி ஒன்னாகப் போவுது நேரத்துக்கு சாப்பிட வா” அம்மா தயாரானார்.

சாப்பிட்டு முடித்து அரை மணி நேரத்தில் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தான். ஃபேஸ்புக், யூ டியூப், வெப் வாட்ஸ் அப், ரிபப்ளிக் டிவி… வெளியே சென்றிருந்த அப்பா வீடு திரும்பியது அவர் பேச்சுக் குரலில் பிடிபட கம்ப்யூட்டரைத் தொடரலாமா என யோசித்தபோது அப்பா பேச ஆரம்பித்தார்.

“எம்பிஏ முடிச்ச, இப்போ ஐசிடபிள்யூஏ ஆறு மாசத்துல கோர்ஸ் முடியப்போகுது அடுத்து என்ன டா செய்யப் போற, மேற்கொண்டு படிப்பு…”

“படிப்பெல்லாம் அவ்ளோ தான் பா, அடுத்து ஜாப் தான், பேங்கிங் செக்டார், உடனே நேஷ்னலைஸ் பேங்க் பத்தி யோசிக்காதிங்க, ப்ரைவேட் பேங்க் தான், அதுவும் நியூ ஜெனரேஷன் தான்”

அப்பா நகர்ந்தார். முகத்தில் யோசனைக்களை. சனிக்கிழமை சாயங்காலம் அப்பா திடீர்னு எதுக்கு இப்படி விசாரிக்கிறார்? யோசித்தான்.

சண்டே சோம்பலாக எழுந்து பல் துலக்கி டீ குடித்து முடித்த போது மணி பத்து. அம்மாவின் டிபன் அழைப்பை மறுத்து மதியம் சாப்பாடா சாப்பிட்டுக்கறேன் என்று சொல்லியபடி குளிக்கப் போனான். குளித்து வந்தவுடன் மீண்டும் லேப் டாப். வெப் வாட்ஸ் அப்பில் ஃப்ரெண்ட் அனுப்பிய குறுஞ்செய்தி.

“A1 + ரத்தம் அவசரமாகத் தேவைப்படுகிறது. வடபழனி விஜயா மருத்துவமனை. நோயாளியின் மகனைத் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண் : 90XXXXXXXX”

உடனே தொடர்பு கொண்டு பேசி ப்ளட் டொனேட் செய்ய புறப்பட்டான். “அம்மா, எனக்கு நாலு இட்லி மல்லிச் சட்னி வெச்சு தாங்க, வெளிய போகணும்”   

“எங்க டா?”      

“ரத்தம் தர வடபழனிக்கு”

சாப்பிட்டு வேகமாக கிளம்பினான். பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போது வீட்டிலிருந்து வெளியே வந்த அம்மா “ வரதுக்கு எவ்வளவு நேரம் டா ஆவும்?” விசாரித்தாள். 

“ரெண்டு மணி நேரத்துல வந்துருவேன்”

அம்மா போய் விட்டார். மொபைலை கையில் எடுத்து, ஹெட் போன் மாட்டி, ப்ளே லிஸ்டை ஆன் செய்யப் போன போது அனைத்தையும் பார்த்த படி, கேட்ட படி  படியிறங்கி வந்த பூர்ணிமா, “எங்க சண்டே வெளிய சுத்த கிளம்பியாச்சா சந்தோஷ்” என்றாள்.

“ப்ளட் டொனேட் செய்ய போறேங்க, நான் ரெகுலரா செய்யறவன், என் க்ரூப் பசங்களும்…”

“நானும் தான், உங்க நம்பர் தாங்க, எதாவது ப்ளட் தேவைன்னா டெக்ஸ்ட் செய்யறேன்”

தந்தான்.

“என் பேர் எப்படித் தெரியும்?”  

“சிலரைப் பார்த்த உடனே அவங்க பெயர் என்னன்னு கண்டு பிடிச்சுருவேன் அந்த திறமை என்கிட்ட இருக்கு”

சிரித்தபடி மொபைலைப் பார்த்தான் ப்ளே லிஸ்டை ஆன் செய்து, “வரேங்க” என்று கிளம்பினான்.

ப்ளேட்லெட்ஸ் மட்டும் எடுத்ததால் நேரமானது. முடித்து பேஷண்ட் மகனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய போது மணி மதியம் ரெண்டரை. மொபைலில் பூர்ணிமா, ஹாய் இது பூர்ணிமா என வாட்ஸ் அப் செய்திருந்தாள். பெயரை தன் விருப்பப்படி அலைபேசியில் சேமித்தான். பதிலளிக்கவில்லை.

வீடு திரும்பி மதிய சாப்பாடு முடித்து தூங்கிப் போனான். விழித்த போது மணி மாலை ஐந்து இருபது என அலைபேசி காட்டியது. முகம் கழுவி, வாய் கொப்பளித்து அம்மா தந்த டீயைக் குடித்துவிட்டு மொபைல் டேட்டாவுக்கு உயிர் கொடுத்தான். ஹாட் ஸ்பாட்டை இணைத்து கம்ப்யூட்டரின் வலது ஓரத்தில் சின்னதாக ஆரம்பித்து பெரிதாக முடியும் கோடு வரிசையை அழுத்தி மொபைல் நெட்டை கம்ப்யூட்டருடன் சேர்த்தான். கனெக்ஷன்ஸ் ஆர் அவைலபிள் என்று காட்டிய பட்டியலைக் கண்டு சிரித்தான். பேஸ்புக்கில் நுழைய, வட்டம் சுற்றி முடித்த பின் மூன்று ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் என்று காட்டியதை க்ளிக்க சென்றவனுக்கு வாட்ஸ் அப் நோட்டிஃபிகேஷன் சத்தம் கவனத்தை திருப்ப தன் Asus Zenfone Max Pro M2 அலைபேசியை கையிலெடுத்தான்.

Poornima Honor 8x – contact நம்பரிலிருந்து வாட்ஸ் அப் குறுஞ்செய்தி.

“AB – urgently required. plz contact : …”  

நண்பன் ஒருவனுக்கு அதே க்ரூப். அவன் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை டைப்பி ரத்தம் தேவைப்படும் நபரின் குடும்பத்தாருக்கு அனுப்பவும் என்று பூர்ணிமாவுக்கு ரிப்ளை செய்தான்.

(Visited 145 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close