இந்தியாவில் சில நடிகர்களைத் தான் எந்த கதாபாத்திரத்திலும் பொருத்திப்பார்க்கக் கூடிய நடிகர்களாக பார்க்க முடிகிறது. தமிழில் தனுஷ், மலையாளத்தில் பகத் பாசில், இந்தியில் இர்பான் கான் போன்றோர்கள் எந்தப் படத்தில் , எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அக்கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில் நடித்திருப்பார்கள். சில நடிகர்கள் ஓவர் ஆக்டிங் பண்ணியே கொன்று எடுப்பார்கள். எனக்கு கமலைக் காட்டிலும் ரஜினியின் நடிப்புதான் பிடிக்கும். வணிகம் என்ற இடத்தில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக் கொண்ட பிறகு ரஜினி ஜனரஞ்சகமான வணிகப் படங்களில் சுருங்கி விட்டார். ஆனாலும் நடிப்பில் கமலைக் காட்டிலும் ரஜினியே ஆகச் சிறந்த நடிகர். கமல் நடிப்பது நடிப்பல்ல. கமல் பல படங்களில் ஓவர் ஆக்டிங் செய்து இருப்பார். காமெடி என்றால் எதையாவது பொருட்களைத் தட்டி விடுவது அல்லது கிரேசியின் வசனத்தை வைத்து கதையை ஓட்டுவது தான் கமலின் அதிகபட்ச காமெடி ஸ்டைலாக இருக்கும். அழுகை என்றால் கமலின் நடிப்பில் மூக்கைச் சிந்தாமல் பார்ப்பது அரிது.
இந்தப்படத்தில் இர்பான் கான் ஒரு சராசரி அப்பாவாக வருகிறார். ஒரு குழப்பவாதியான அவர் தன் மகளுக்காக மட்டுமே வாழ்வைச் செலுத்துபவர். ஒரு சிறிய நகரத்தில் “கசிடிராம்” என்ற பெயரில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இர்பானின் மகளுக்கோ மிகப்பெரிய கனவு. இங்கிலாந்தில் உள்ள பெயர் வாங்கிய பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்பதே அது. மகளின் கனவை நிறைவேற்ற இர்பான் எடுக்கும் முயற்சிகளும், இங்கிலாந்தில் மகள் வெளிநாட்டு பழக்க வழக்கங்களை மட்டுமே ஆகச் சிறந்த நல்ல பழக்கமாக கருதுவதைஒரு கட்டத்தில் தனது செயல்கள் மூலம் தவிடு பொடியாக்குகிறார் இர்பான். அவரது நடவடிக்கைகளில் திருந்திய மகள் , மீண்டும் இந்தியாவிலுள்ள தனது கடையை உலக பிராண்டாக மாற்றுவேன் என்பதுதான் கதை. மகளைப் படிக்க வைக்க இர்பானுக்கு உதவியாக அவரது உடன்பிறவா சகோதரர் தீபக் தோப்ரியால் என்ற நடிகர் உதவி செய்கிறார். ஆனால் இவர்களுக்குள்ளேயே கசிடிராம் என்ற பெயர் தங்களுக்கு வேண்டுமென கோர்ட்டில் கேஸ் போட்டு அப்பெயரை வாங்க எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெயரையே இன்னொருவருக்கு விற்று அதில் வரும் பணத்திலிருந்தே மகளின் படிப்புக்கான பணத்தைத் திரட்டுகின்றனர். இந்தியாவில் குடும்பப் பெயருக்கான கவுரவத்தை கடைசிக் கட்டத்தில் உணரும் மகள் ,அப்பா பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. “கசிடிராம்” என்பதை உலக பிராண்டாக மாற்றிக்காட்டுவேன் என்பதாக கதை முடிகிறது. பெயரில் என்ன இருக்கிறது என்ற விவாதத்தைக் கூட பலரும் கேட்கலாம். இந்தியாவில் அதற்கு ஒரு கௌரவம் இருக்கிறது என்பதைத் தான் இயக்குனர் சொல்ல வருகிறார்.
ஓர் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்புதான் கதை. மகளாக நடித்திருக்கும் ராதிகா மதன் தன்னுடைய பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இந்தப்படம் செண்டிமெண்டை விரும்பும் நபர்களுக்கு மட்டுமே பிடிக்கும். ஆங்காங்கே சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் கதாபாத்திரங்கள் தங்களது நடிப்பு மூலமாக படத்தின் ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். நிறைய இடங்களில் சினிமாத்தனம் தென்பட்டாலும், நடிப்பில் ஒருவர்கூட இயல்பை மிஞ்சவில்லை. இயக்குனர் சொன்ன திரைக்கதையில் பலருக்கும் விவாதக் கருத்துகள் நிறைய இருக்கும். ஆனால் ஒரு இயக்குனர் தனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைத் தான் தருவார். அதைத் தெளிவாக முன்வைத்துள்ளார் இயக்குனர்.

வெளிநாட்டு வாழ்க்கையில் பதினெட்டு வயது ஆனவுடன் பிரைவசி முக்கியம் என்பதாகப் பார்க்கப்படுகிறது. எனக்கான வேலையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்பது வரைக்கும் அது சரிதான். ஆனால் உங்களைப் பெற்ற அப்பாவை உங்களுடன் தங்க வைக்க விருப்பமில்லை என்பது பிரைவசி அல்ல. அது சுயநலம் என்பதைத் தான் இயக்குனர் விவாதப் பொருளாக்கி உள்ளார். அதை நமக்கு உணர்த்தவே கரீனா கபூர் மற்றும் டிம்பிள் கபோதியா என்ற இரு அனுபவ சாலிகளைப் படத்தில் நடிக்க வைத்துள்ளார். கரீனா கபூர் இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்த பெண். அவருக்கு, தன் வயதான தாய்க்கு பிறந்த நாள் சொல்வது கூட கடமையாகத் தான் இருக்கிறது. அதில் அன்பு இல்லை. அப்படியான ஒரு இடத்தைத் தான் வெளிநாட்டு வாழ்க்கை தந்து இருக்கிறது. இந்தியாவில் பிறந்த நாள் வாழ்த்தை ஓர் அப்பா சொல்கிறாரோ இல்லையோ, ஆனால் தன் உடம்பில் தெம்பு இருக்கும் வரை , தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யத் துணிவார் என்பதைத் தான் படம் சொல்ல வருகிறது. அதைப் போலவே இந்திய பெற்றோர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. மகள் செய்யும் அத்தனைத் தவறுகளையும் இறுதியில் இந்திய பெற்றோர்கள் மன்னிப்பார்கள் என்பதையும் காட்டுகிறது.
திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். அப்பா மகள் பாசத்தை உணர்ச்சிக் குவியலாக நம்முன் காட்டுகிறது படம். படத்தில் காமெடி சில இடங்களில் வருகிறது. நடிகர்களின் நடிப்பையும் செண்டிமென்டையும் விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம்.