அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே !
- இந்திராதி தேவர்களை வென்று சிறையில் வைத்த நீங்கள் ஒரு மனிதன் கையால் கொல்லப்பட்டு கீழே கிடக்கிறீர்களே!” என்று புலம்பியவள் ராமரைப் பார்க்கிறாள்.
இதுவும் ராமாயண கதை தான் என்று அந்தச் சின்னப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். ராவணனுடைய மனைவி மண்டோதரி. பட்டத்து ராணி. அழகி. ராவணன் இவளிடம் அதிக அன்பு வைத்திருந்தான். சீதை அசோக வனத்தில் ராவணன் சிறை வைத்து அரக்கிகளைக் காவல் வைத்துப் பயமுறுத்தினான் என்று முன்பு சொன்னேன் அல்லவா ? இது மண்டோதரிக்குத் துளியும் பிடிக்கவில்லை.
தன் கணவன் ராவணன் இப்படி எல்லாம் செய்கிறானே என்று அவளுக்கு மன வருத்தம். ராவணனிடம் ”சீதையை ராமரிடம் திரும்ப அனுப்பிவிடுங்கள். ராமரும் உங்களை மன்னித்துவிடுவார். இலங்கையில் சண்டை இருக்காது. அமைதி நிலவும்” என்று புத்தி கூறினாள். ஆனால் ராவணன் அதை எல்லாம் கேட்கவில்லை. கடைசியில் போர் மூண்டது.
போரில் ராவணன் தம்பி கும்பகர்ணனை, இழந்தான். பிறகுத் தன் மகன் இந்திரஜித்தை., அவனுடைய எல்லா படையும் அழிந்தது. கடைசியில் தானும் மடிந்தான்.
ராவணன் போர்க்களத்தில் இறந்து கிடக்கிறான் என்ற செய்தி கேட்டு மண்டோதரி போர்க்களத்துக்கு அழுதுகொண்டு ஓடி வருகிறாள். கீழே விழுந்து கிடக்கும் ராவணனைப் பார்த்துப் புலம்புகிறாள்.
“நான் அன்றே சொன்னேன், சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று நீங்கள் கேட்கவில்லையே!”
“இந்திராதி தேவர்களை வென்று சிறையில் வைத்த நீங்கள் ஒரு மனிதன் கையால் கொல்லப்பட்டு கீழே கிடக்கிறீர்களே!” என்று புலம்பியவள் ராமரைப் பார்க்கிறாள். ஆனால் ராமர் சாதாரண மனிதன் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு தன் காரணங்களை அடுக்குகிறாள்.
“தேவர்களாலும் நுழைய முடியாத இந்த இலங்கையில் ராமனால் அனுப்பட்ட ஒரு சாதாரண குரங்கு நுழைந்தது நாசப்படுத்தியது. அதனால் ராமன் மனிதன் அல்ல என்று நினைத்தேன்”. குரங்குகள் சமுத்திரத்தில் அணைக்கட்ட முடியுமா ? அப்படியே காட்டினாலும் இலங்கைக்கு வர முடியுமா ? அதனால் ராமன் மானிடனாக இருக்க வாய்ப்பே இல்லை”.
“பதினான்காயிரம் அரக்கர்களையும், உங்களையும் ராமன் ஒருவனே கொன்றான் என்றால் அந்த ராமன் எப்படி மானிடனாக இருக்க முடியும் ? அவனே முழுமுதற் கடவுள்!” என்றாள் என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் ராமானுஜரிடம்,
சாமி, நாம் இந்த மர நிழலில் நின்று கொண்டு இருக்கிறோமே இந்த மரமும் ராமரும் ஒன்று!” என்றார்.
”எப்படிச் சொல்லுகிறாய் பிள்ளாய்!” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தப் பெண்
“சாமி, நாம இந்த மரத்துக்குக் கீழே நின்றுகொண்டு இருக்கிறோம். இந்த மரம் வெய்யிலின் சூட்டை அது வாங்கிக்கொண்டு, நமக்கு நிழலைக் கொடுக்கிறது. இந்த மரத்தின் பூ, பழங்களை உதவுகிறது. மனிதனுக்கு மட்டும் இல்லை, மேலே அணிகள் ஓடுகிறது, பறவைகள் கூடு கட்டுகிறது. மரத்தின் மீது சின்ன சின்ன எறும்புகள் ஏறுகிறது.. எல்லாவற்றிருக்கும் மரம் உதவுகிறது. இந்த மரத்தை வெட்டினால் வெட்டியவனிடம் கோபம் கொள்ளாமல் வெட்டியவனுக்கு விறகாகிறது. தன்னை அண்டி யார் வந்தாலும் உதவி செய்யும் மரத்துக்கும் ராமருக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே!” என்றபோது உடையவர் கைகூப்பினார்.
“இப்ப சொல்லுங்கள் சாமி, நான் மண்டோதரி போல ராமரை அடையாளம் கண்டுகொண்டேனா ? இல்லையே, அதனால் தான் இந்த ஊரை வீட்டு போகிறேன்” என்றாள். அப்போது ராமானுஜருடன் கூட இருந்த சிஷ்யர்களில் ஒருவர் “மண்டோதரிக்கு மட்டும் இல்லை பெண்ணே , தாரையும் ராமர் சாதாரண மனிதன் இல்லை என்று வாலிக்கு அறிவுரை கூறினாள்”
ராமானுஜர் “தவம் செய்து பரந்தாமனைக் கண்ட முனிவர்களைப் போல மண்டோதரியும், தாரையும் ராமரே பரந்தாமன் என்று அறிந்திருக்கிறார்கள்!” என்ற போது அந்தப் பெண்
“அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!” என்றார்.
ராமானுஜர் இந்தப் பெண் இப்படியொரு வாக்கியம் சொல்லுவாள் என்று அறிந்திருக்கவில்லை.