அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரைப் போலே !
இன்னொரு ராமாயண கதை என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண். தசரதன் பெரிய ராஜா, ஆனால் அவனுக்குக் குழந்தை இல்லை. குழந்தை வேண்டும் என்று புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். யாகத்தின் பயனாக அவனுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. ராமர், லக்ஷ்மணன், பரதன், சத்துருக்கன் என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் வாலிப பருவம் அடைந்தார்கள். தசரதனுக்கு ராமரைப் பார்த்தாலே ஆனந்தம் பொங்கும்.
ஒரு நாள் விஸ்வாமித்திரர் தசரதனைப் பார்க்க அரண்மனைக்கு வந்தார். தசரதன் அவரை வரவேற்று உபசரித்தான். பிறகு அவரிடம் “வந்த காரியம் என்னவோ? உங்களின் கட்டளையை நிறைவேற்றக் காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்றான்.
முனிவர் மகிழ்ச்சியுடன் “நான் யாகம் ஒன்று செய்யலாம் என்று இருக்கிறேன்” என்றார். உடனே தசரதன் “நன்றாக நடத்துங்கள் அதற்கு வேண்டிய உதவிகளுக்கு ஏற்பாடு செய்கிறேன் ” என்றான்.
முனிவர் சொன்னார் “முன்பு ஒரு யாகம் செய்தேன். ஆனால் பாதியில் நின்றுவிட்டது.” என்றார். தசரதன் “அப்படியா ? என்ன ஆயிற்று ?” என்று கேட்டான். முனிவர் தொடர்ந்தார் “யாகம் பாதி நடந்துகொண்டு இருக்கும் போது, அரக்கர்கள் வந்து யாகத்தை நடத்தவிடாமல் கெடுத்துவிட்டார்கள்”.
உடனே தசரதன் “நீங்களோ பெரிய முனிவர் யாகம் செய்யும் போது அவர்களைச் சபித்திருக்கலாமே ?” என்றார். அதற்கு முனிவர் “செய்திருக்கலாம் ஆனால் யாகம் செய்யும் போது கோபம் கொள்ளக்கூடாது, சபிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பலன் இருக்காது” என்றார்.

தலையை ஆட்டிக்கொண்டே தசரதன் ”என் படையை அனுப்புகிறேன் கவலைப் படாதீர்கள” என்று சொல்ல முனிவர் சொன்னார் “படை எல்லாம் வேண்டாம் உன் ராமனை என்னுடன் அனுப்பிவையும்” என்றார்.
தசரதன் நடுங்கி அப்படியே அரியாசனத்தில் உட்கார்ந்தான். முனிவர் ”தசரதா ! ராமனை என்னுடன் அனுப்பிவை, கவலைப்படாதே. அவன் சிறுவன் என்று நீ நினைத்துக்கொண்டு இருக்கிறாய். அவன் வீரன், திறமை மிக்கவன். உனக்கு அவன் யார் என்று தெரியாது ஆனால் நான் முக்காலமும் அறிந்த முனிவன்.
அதனால் ராமன் யான் என்று நான் அறிவேன் (அஹம் வேத்மி என்றால் நான் அறிவேன் என்று பொருள்.) அவன் திறமை, வீரம் உடையவன் மட்டும் இல்லை, அவனே சத்தியத்தின் வடிவம்” என்றார்.
தசரதன் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை. முனிவர் மேலும் சொன்னார் “தசரதா!, என் வார்த்தையின் மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உம்முடைய குல குருவான வசிஷ்டரைக் கேளும். நல்லவையே நடக்கும்” என்றார்.
வசிஷ்டரும் தசரதனிடம் “விஸ்வாமித்திரர் சொல்லுவது சரி தான். ராமரை அனுப்பிவை. நல்லவையே நடக்கும்” என்றார்.
“சாமி, விஸ்வாமித்திரர் ராமர் தான் கடவுள் என்று அறிந்திருந்தார் அது போல நான் அறிந்திருக்கவில்லையே! அதனால் தான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.
”பெண்ணே! ஊரைவிட்டுப் போகலாம் ஆனால் விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் ஏன் ராமர் தான் பரமாத்மா என்று தசரதனிடம் சொல்லவில்லை?” என்றார்
அந்தப் பெண் “விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற முனிவர்களுக்கு உண்மை தெரிந்திருந்தாலும், ராமரின் அவதார ரகசியத்தை எப்படிச் சொல்ல முடியும் ? அதனால் மறைமுகமாகச் சொன்னார்கள்” என்றாள்.
“சரி பெண்ணே ! விஸ்வாமித்திரர் நல்லது நடக்கும் என்றார் என்ன நல்லது நடந்தது ?” என்றார் ராமானுஜர்.
அதற்கு அந்தப் பெண் “விஸ்வாமித்திரருடன் சென்றபோது தான் அகல்யை சாபத்திலிருந்து விடுபட்டாள். ராமர் சிவனுடைய வில்லை உடைத்து சீதையைத் திருமணம் செய்துகொண்டார். பரசுராமரை வென்று அவருடைய வில்லை பெற்றார். அதனால் தான் ராவணனை அழித்தார்..” என்றாள்.
“அடடே ! மிக அருமை. இந்தக் கதையிலிருந்து இன்னொரு விஷயம் தெரிகிறது” என்றார்.
“என்ன சாமி அது?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
“வசிஷ்டர் என்ற குரு சொன்னவுடன் தசரதன் கேட்டான். ஆசாரியன் எப்போதும் நல்லவற்றையே சொல்லுவார். ஆசாரியன் சொன்னால் உடனே கேட்டுவிட வேண்டும். ஆசாரியனே எல்லாம்” என்றார்.
அந்தப் பெண் “தேவுமற்றறியேனோ மதுர கவியார் போலே!” என்றாள்.
“உங்கள் ஊர் ஆழ்வார் கதையா ?” என்று மதுரகவி ஆழ்வார் கதையைக் கேட்க ஆவலுடன் இருந்தார்கள்.