ஏழை தேசத்து அதிபரின் கொரோனா போர் குறித்த அபாரமான உரை – ராமலிங்கம்
கட்டுரை எழுத்தாளர் ராமலிங்கம் சிங்கப்பூரில் மின்னியல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
உகாண்டாவின் அதிபர் யோவரி முசவேனி (Yoweri Museveni), COVID-19 தற்காப்பு நடவடிக்கை பற்றி மக்களிடம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.
ஒரு போர் நடைபெறும் சூழலில், யாரும் யாரையும் வீட்டுக்குள் இருக்கச் சொல்வதில்லை. அந்த நேரத்தில் வீட்டுக்குள் இருப்பது உங்கள் தேர்வுக்கு உட்பட்டது. உண்மையில் உங்களிடம் பதுங்கு குழி இருந்தால் கண்டிப்பாக போர் முடிந்து நிலைமை சரியாகும் வரை உங்கள் சாகச மன நிலையில் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, அந்த பதுங்குக் குழியில் மறைந்தே இருப்பீர்கள். சுதந்திரத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்போவதில்லை, உயிர் பிழைக்க வேண்டி கட்டற்ற சுதந்திரத்தைத் தன்னிலையாக கைவிட்டு, அரசின் வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கிறீர்கள். பசியைப் பற்றி புகார் செய்துகொண்டிருப்பதில்லை, மாறாக கையில் கிடைத்த உணவை உயிர் வாழ மட்டுமே தேவையான அளவு சிக்கனமாக உண்டு தன் இருப்பை நிலைநாட்டிக் கொள்கிறீர்கள். பிழைத்துக்கிடந்தால் பின் மொத்தமாக உண்டுகொள்ளலாம் என்ற மனநிலைக்கு தானாக வந்து விடுகிறீர்கள்.
ஒரு போர் நடந்துகொண்டிருக்கும் போது, உங்கள் கடைகளைத் திறப்பது பற்றியோ , வணிகத்தை நடத்துவது பற்றியோ நீங்கள் வாதிடுவதில்லை. மாறாக தன்னிச்சையாக வணிக வளாகங்களை மூடி விட்டு மறைந்துகொள்கிறீர்கள். வணிக வளாகங்களை திறப்பதற்கு முன், போர் முற்றிலுமாக முடிவுற்றதா என உறுதிப்படுத்திக் கொள்கிறீர்கள். போர் நடந்துகொண்டிருக்கும் போது, அடுத்த நாள் நாம் கண்விழிக்க வேண்டும் என்பதே கடவுளிடம் உங்கள் வேண்டுதலாக இருக்கிறது. உங்கள் குழந்தைகள் பள்ளி செல்லாதது பற்றி கவலைப்படுவதில்லை. உயிர் பறிக்க ஆயத்தமாகும் போரில் உங்கள் குழந்தைகளை அரசு ஈடுபடுத்தி விடக்கூடாது என இறைவனிடம் வேண்டுகிறீர்கள்.
போலவே, உலகம் தற்போது ஒரு போரை, கண்ணுக்குத் தெரியாத, வலிமையான ஒரு எதிரியிடம் நடத்திக்கொண்டிருகிறது. இது ஒரு வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இல்லாத போர்! இராணுவ வீரர்கள் அல்லாத போர்! இதற்கு எல்லைகள் என்ற ஒன்றே இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தங்கள், சர்வேதேச கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. கட்டுப்பாட்டு அறை இல்லாத, சமாதான அல்லது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற வரையறை அற்ற எங்கும் நீக்கமற தனது தாக்குதலை நடத்திகொண்டிருக்கும் போர் தான். போரில் ஈடுபட்டுள்ள எதிரி மனிதாபிமானம் மற்றும் கருணை அற்ற வகையில் நடந்து கொள்கிறது. இது குழந்தைகள், பெண்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள், மதம், இனம், பணக்காரன், ஏழை என்ற எந்த பாகுபாடும் பார்ப்பது இல்லை.
இந்த எதிரியின் ஒரே நோக்கம் மனித உயிரை எடுத்தல், கொல்லுதல், செயலற்று போகச் செய்தல் மட்டுமே. உலகை ஒரு பெரிய மரண களமாக மாற்றிய பின்னரே இது தன்னை அமைதிப்படுத்திக்கொள்ளும். இந்த அதன் நோக்கத்தை அடைவதற்கான திறன் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதனிடம் உண்டு என்பதையே கடந்த இரண்டு மாதமாக உலகின் பல நாடுகளிலும் காண்கிறோம். ஒரு இடத்தில் மட்டுமே இருந்த இதன் தாக்குதல் தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலும் விரிவுபடுத்திவிட்டது. அதன் இயக்கம் எந்தவொரு போர் நெறிமுறையாலும் நிர்வகிக்கப்படுவதில்லை. சுலபமாக சொல்வதானால், இது தனக்குத்தானே ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டுள்ளது. மனித இனம் இதற்கு வைத்த பெயர் “கொரோனா வைரஸ். போருக்குப் பெயர் COVID-19”.
அதிர்ஷ்டவசமாக, மனிதனால் இந்த எதிரியைத் தோற்கடிக்க முடியும். இந்த கொரோனா வைரஸ் என்ற ராணுவம் தனக்குள் வைத்துக்கொண்ட சட்டத்தில் ஒரு பலவீனம் உள்ளது. அதற்குத் தேவை நம் அனைவரின் கூட்டு முயற்சியும், ஒழுக்கம் மற்றும் சகிப்புத்தன்மையுமே. மனிதர்கள் தங்களுக்குள் கடைபிடிக்கும் குறிப்பிட்ட இடைவெளி (Social Distancing) மூலம் வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாமல் தடுத்து விட முடியும். அதன் மூலம் எதிரியைச் சரணடைய வைக்க முடியும். மேலும் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதன் மூலம் இது அடிபணிகிறது. அடிக்கடி கையைக் கழுவுவது, சனிடைசர் பயன்படுத்துவதன் மூலம் வெளியில் சுற்றும் எதிரி அழிக்கப்படுகிறான்.
இது அழ வேண்டிய நேரமல்ல! எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதன் உணவு கிடைப்பதால் மட்டுமே வாழ்ந்துவிட முடியாது என நமது புனித நூல் நமக்கு அறிவுறுத்துகிறது. அதை மனதில் வைத்து அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு மதிப்பளித்து சமூக இடைவெளியைப் பின்பற்றுவோம். சுத்தம் மற்றும் பொறுமையைக் கடைப்பிடிப்போம். அதன் மூலம் COVID-19 வளர்ச்சியை தடுப்போம்.
போர் முடிவுக்கு வரும் எந்த தருணத்திலும், நாம் நம் சுதந்திரம், நிறுவனம் மற்றும் சமூகமயமாக்கலை மீண்டும் பெறுவோம்.