ஆன்மிகம்
Trending

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!

Story Highlights

  • “எல்லா காலங்களிலும் பெருமாளுக்கு வாகனமாக இருப்பதால் அவருக்குப் பெரிய திருவடி என்று பெயர். ஆனால் ராமாவதாரத்தில் மட்டும் அனுமார் தான் ராமரை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார் அதனால் அவரும் திருவடி தான்”

”சாமி! திருவடி என்றால் இரண்டு பேரைக் குறிக்கும்” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண். பெரிய திருவடி கருடனைக் குறிக்கும். திருவடி என்பது அனுமாரைக் குறிக்கும்.ராமானுஜர் “பெண்ணே ! ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது ?”

“பெருமாளைத் தாங்கிக்கொண்டு அவரை எல்லா இடத்துக்கு அழைத்துச் செல்வதால் இந்தப் பெயர். வைகுண்டத்தில் மட்டும் இல்லை இன்றும் கோயில்களில் வாகனமாக இருக்கிறார் கருடன்” என்றாள்.ராமானுஜர் “ஆம் குழந்தாய். எல்லா கோயில்களிலும் பெருமாள் சன்னதிக்கு முன் எப்போது தயாராக இருக்கிறார்!” என்றார்.“சாமி பெருமாள் கோயிலுக்கு முன் கோபுரம், அதன் இரண்டு பக்கமும் உள்ள மதில்களைப் பார்த்தால் அதுவே கருடன் மாதிரி தான் இருக்கிறது!” என்றாள்

ராமானுஜர் ”எப்படிச் சொல்லுகிறாய் ?” என்று கேட்க அதற்கு அந்தப் பெண் “கோபுரம் கருடனின் முகம் மாதிரி, இரண்டு பக்கமும் விரிந்த மதில்கள் அதன் இறக்கை மாதிரி!” என்றாள்.ராமானுஜர் “அடடே இப்படியும் அதைப் பார்க்கலாமா ? அதனால் தான் ஆண்டாள் ‘புள்ளரையன் கோயில்’ என்கிறாள் போலும்! குழந்தாய்! பெருமாள் கொடியில் கூடக் கருடன் இருக்கிறாரே ?” என்றபோது அந்தப் பெண்“சாமி அதற்கு ஒரு கதை இருக்கிறது!” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

முன்பு ஒரு காலத்தில் காசியப முனிவர் இருந்தார். அவருக்குக் கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள். வினதைக்கு அருணன் கருடன் என்று இரண்டு மகன்கள் பிறந்தார்கள். கத்ருவுக்கு ஆயிரம் பாம்புகள் மகன்களாகப் பிறந்தனர்.வினதைக்கும் கத்ருவுக்கும் இடையே பொறாமை. அதனால் அவர்களுக்குள் எப்போதும் சண்டை.. ஒரு நாள் குதிரையில் வந்து இந்திரன் சற்று தூரத்தில் நின்றான்.

வினதை “ஆஹா ! மிக அழகிய வெள்ளைக் குதிரை” என்றாள். பக்கத்திலிருந்த கத்ரு “வெள்ளைக் குதிரை ஆனால் வால் மட்டும் கருப்பு” என்றாள். வினதை “குதிரை முழுவதும் வெண்மை தான், சரியாகப் பார்” என்றாள். “நாளைக்கு நாம் அருகில் சென்று பார்க்கலாம் அப்போது யார் சொல்லுவது உண்மை என்று புரியும்” என்றாள் கத்ரு. வினதை விடவில்லை “என்னப் பந்தயம்?” என்றாள். ”நீ ஜெயித்தால் நான் உனக்கு அடிமை, இல்லை நீ எனக்கு அடிமை” என்றாள் கத்ரு.

அன்று இரவு கத்ருவின் மகன்களான கார்க்கோடகனும் மற்ற கறுத்த பாம்புகளும் குதிரையின் வாலை சுற்றிக்கொண்டன. அதனால் மறுநாள் குதிரையின் வால் கறுத்த நிறமாக இருந்தது. வினதை கத்ருவிற்கு அடிமையானாள். கத்ருவின் குழந்தைகளான பாம்புகள் ”எங்களுக்கு அமுதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், நீ அடிமையாக இருக்கத் தேவையில்லை” என்று நிபந்தனை விதித்தார்கள். வினதையின் மகனான கருடன் தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும் வழியில் திருமாலைக் கண்டார். ”என்ன கருடா இந்தப் பக்கம் ?” என்று பெருமாள் கேட்க. கருடன் தன் கதையைச் சொல்லியது.

கருடனின் கதையைக் கேட்ட திருமால், ”கருடா உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்றார் அதற்குக் கருடன் “நான் எப்போதும் உங்களுக்கு மேலே இருக்க வேண்டும்” என்றது. திருமாலும் அந்த வரத்தைக் கொடுத்தார்.

அதனால் தான் கோயில்களில் கருடன் கருடக் கொடியாக எப்போதும் உயரத்தில் இருக்கிறார்.”அருமையாகச் சொன்னாய் பிள்ளாய்!” என்றார் ராமானுஜர்“சாமி! கருடன் பெருமாளிடம் வரம் வாங்கிக்கொண்டு “பெருமாளே ! நானும் ஒரு வரம் தருகிறேன் கேளுங்கள்” என்றார்

பெருமாள் “நீ எனக்குக் கீழே இருக்க வேண்டும் என் வாகனமாக !” என்றார். கருடனும் சந்தோஷமாக “சரி” என்றார்.

அதனால் தான் கருடக் கொடியாகப் பெருமாள் மேல் பறந்துகொண்டும், கருட வாகனமாகப் பெருமாளைத் தாங்கிக்கொண்டும் இருக்கிறார் கருடாழ்வான்!”.

ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார்.அந்தப் பெண்”சாமி என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள்.

ராமானுஜர் “ஆளவந்தார் கருடனைப் பற்றிக் கூறியதை நினைத்தேன்” என்றார்.

“ஓ! அதை எங்களுக்கும் சொல்லுங்களேன்” என்றாள்.

எப்படி ஆதிசேஷன் எல்லாமாக இருக்கிறாரோ அதே போலக் கருடன் பெருமாளுக்குத் தொண்டன், தோழனாக, வாகனமாக,, ஆசனமாக, கொடியாக, வெய்யில் மழையிலிருந்து காக்கும் மேற்கூரையாக, விசிறியாக ( இறக்கைக்கொண்டு) என்று அவனுடைய தொண்டுகளை அடுக்குகிறார்” என்றார்.

அந்தப் பெண் “சாமி அடடா என்ன ஒரு விளக்கம்! “ என்று சொல்லிவிட்டு பெருமாள் யானையைக் காக்கக் கருடனில் வந்தார்; பெரியாழ்வாருக்குக் காட்சி தந்த போதும் கருடனின் வந்தார். நரகாசுரனை வதம் செய்யக் கண்ணன் கருடனில் சென்றார். இப்படி எப்போதும் கருடன் தான் பெருமாளின் வாகனம். அதனால் தான் கோயில்களில் கருட வாகனம் விசேஷம்” என்றாள்.

“பெண்ணே ! உண்மை தான் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் எல்லோரும் கருட வானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

அந்தப் பெண் தொடர்ந்தாள் “எல்லா காலங்களிலும் பெருமாளுக்கு வாகனமாக இருப்பதால் அவருக்குப் பெரிய திருவடி என்று பெயர். ஆனால் ராமாவதாரத்தில் மட்டும் அனுமார் தான் ராமரை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார் அதனால் அவரும் திருவடி தான்” என்றாள்.

“பெண்ணே எங்கு எல்லாம் என்று சொல்லு கேட்கிறோம்” என்றார் ராமானுஜர்.

“அனுமார் சுக்ரீவன் மலை உச்சியில் ஒளிந்துகொண்டு இருக்கிறான் என் தோளில் ஏறிக்கொள்ளுங்கள் என்று ராம, லக்ஷ்மணர்களை தோளிலேற்றிக்கொண்டு குதித்தெழுந்து, நொடிப்பொழுதில் மலை உச்சியில் சுக்ரீவன் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.

அதற்குப் பிறகு ராமரிடம் கணையாழி பெற்றுக்கொண்டு மலையில் ஏறிச் சமுத்திரத்தைத் தாண்டினார், சீதையைக் கண்டார். நல்ல செய்தி சொல்லிவிட்டு சீதையின் சூடாமணியை பெற்றுக்கொண்டு அதை ராமரிடம் கொடுத்தார். அணை கட்டிய பிறகு அதில் ராமர் நடக்கவில்லை. அனுமார் ராம லக்ஷ்மனர்களை தன் தோள்களில் ஏற்றிப் பாலத்தில் நடந்தார்.

போரில் மூலிகை மலையைக் கொண்டு வந்தார். யுத்தம் செய்யும்போது ராம லக்ஷ்மணர்களை தோளில் தூக்கிக்கொண்டார். யுத்தம் முடிந்த பின் சீதையைப் பார்த்து ராமர் வென்ற விஷயத்தைச் சொன்னார்.

பரதனிடம் சென்று ராமர் வரும் விஷயத்தைச் சொல்லிப் பரதனைக் காப்பாற்றினார்” என்று அந்தப் பெண் படப் பட என்று சொல்ல.

பெண்ணே ! ஒரு பெரிய பட்டியலே சொல்லிவிட்டாயே!” என்றார் உடையவர்.”சாமி நான் திருவடிகள் போலப் பெருமாளைச் சுமக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே ! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்

ராமானுஜர் “பிள்ளாய் எனக்குத் திருப்பாணாழ்வார் தான் நினைவுக்கு வருகிறார்” என்றார்.“ஏன் சாமி ?” என்றாள் அந்தப் பெண் ஆர்வமாக“ கருட வாகனன் – பெருமாள் அதுபோல முனி வாகனன் – திருப்பாணாழ்வார் சரிதானே ?” என்றார் ராமானுஜர்.

“ஆம் சாமி ! திருப்பாணாழ்வார் குலம் முக்கியமில்லை பக்தி முக்கியம் என்று காட்டியவர் பக்தியால் உயர்ந்தார்!” என்றாள் அந்த பெண் பக்கத்திலிருந்த சிஷ்யர் “நம்பாடுவான்போலே!” என்று கூற உடனே அந்தப் பெண்“இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!” என்றாள்.

(Visited 120 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close