இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
”சாமி ! இது தொண்டரடிப்பொடி ஆழ்வார் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
திருக்குடந்தை அருகே திருமண்டங்குடி என்ற சின்ன ஊரில் இந்த ஆழ்வார் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு ‘விப்ரநாராயணன்’ என்று பெயர் சூட்டினர். சிறுவயதிலேயே வேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு கற்றார். ஒருமுறை திருவரங்கம் சென்று அரங்கனைச் சேவித்தார். அவன் அழகில் மயங்கினார். திரும்ப ஊருக்கே வரவில்லை. திருவரங்கத்திலேயே தங்கிவிட்டார்.
திருவரங்க கோவிலுக்குப் பக்கம் ஒரு அழகிய பூந்தோட்டம் ஒன்று அமைத்தார். அதில் அழகிய வண்ண வண்ணப் பூச்செடிகள், துளசிச் செடிகளை வளர்த்து. நறுமணம் மிக்க பூக்களைக் கொண்டு பெரியாழ்வார் போல் அழகிய மாலைகளைக் கட்டி அரங்கனுக்குச் சூட்டினார்.
ஒரு நாள் தேவதேவி என்ற பேரழகி தன் தோழிகளுடன் உறையூரிலிருந்து திருவரங்கம் வழியாக வரும்போது ஆழ்வாரின் தோட்டத்தைக் கடந்தபோது அதன் அழகில் மயங்கினாள் “என்ன அழகு! என்ன அழகு! வண்ணமயமான, நறுமணம் மிக்க மலர்கள் !” என்று பிரமித்து நின்றாள். “இந்த அழகிய தோட்டத்தைப் பராமரிப்பவர் யாரோ ? என்று தேடினாள். அப்போது முனிவர்போல ஒருவர் தாடி மீசையுடன் கையில் ஒரு கூடையுடன் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். தோட்டத்தைப் பராமரிப்பவர் இவராகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அவர் அருகில் சென்றாள்.

தேவதேவியைக் கவனிக்காமல் விப்ரநாராயணன் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அரங்கனின் தொண்டு தான் முக்கியம்.. தேவதேவிக்கு மிகுந்த கோபம் வந்தது. “என் அழகைக் கவனிக்காத இவர் என்ன பித்துப் பிடித்தவரா ?” என்று கேட்டாள். “தேவதேவி உன் அழகையும் கவனிக்காத இவர் திருவரங்கனாதனின் தொண்டன். உன் அழகெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டல்ல” என்றாள் கூட இருந்த தோழி.
இது தேவதேவிக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது “இவரை என் அழகில் மயங்க வைக்கிறேன்” என்றாள். பக்கத்திலிருந்த தோழி ”முடியவே முடியாது. நீ அப்படிச் செய்தால் நான் உனக்கு அடிமையாகிவிடுகிறேன்” என்றாள் தோழி.சவாலை ஏற்றத் தேவதேவி, தன் அலங்காரங்களைக் களைந்தாள்.
எளிய உடை அணிந்து விப்ரநாராயணன் காலில் விழுந்து “ஸ்வாமி ! நான் இத்தனை நாட்களாக என் வாழ்கையை வீணாக்கிவிட்டேன் .இனி பெருமாளுக்குத் தொண்டு செய்து என் பாவத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும். இந்தத் தோட்டத்தில் தொண்டு புரிய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றாள். விப்ரநாராயணனும் இரக்கப்பட்டு அனுமதித்தார்.
ஆசிரமத்துக்கு வெளியே தோட்டத்திலேயே தங்குவதற்கு இடமும் கொடுத்தார்.சில மாதங்கள் கழித்து மழைக்காலம் வந்தது. ஒரு நாள் நல்ல இடியுடன் கூடிய பலத்த மழை. தேவதேவி ஆசிரமத்துக்கு வெளியே குளிரில் உடைகள் நனைந்து நடுங்கிக்கொண்டு இருந்தாள். விப்ரநாராயணன் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவளை ஆசிரமத்துக்கு உள்ளே அழைத்து. உடுக்க தன் உடைகளைக் கொடுத்தார். அப்போது அவள் அழகில் மயங்கினார். அதற்குப் பிறகு அரங்கனின் தொண்டை மறந்தார்.
தேவதேவி ஆழ்வாரை மயக்கினாள். ஆசிரமத்துக்குள்ளேயே நிரந்தரமாகத் தங்கினாள். ஆழ்வாரின் செல்வத்தை அபகரித்தாள். சில காலம் கழித்து அவரை வீட்டை விட்டுத் துரத்தினாள். ஆழ்வார் அவளை மறக்க முடியாமல் வீட்டுத் திண்ணையிலேயே கிடந்தார்.
ஒரு நாள், நம்பெருமாளும் நாச்சியாரும் அந்த வழியே விப்ரநாராயணன் திண்ணையில் கிடக்கும் காட்சியைப் பார்த்தார்கள். நாச்சியார் ஆழ்வார்மீது கருணைக்கொண்டு “நம் பக்தனைத் திருத்தி மீண்டும். மீண்டும் அவரைப் பூமாலை கட்டும் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும்” என்று சொல்லப் பெருமாளும் சரி என்று ஒரு சிறுவனின் வடிவத்தை எடுத்துக்கொண்டார்.
தன் தங்க வட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு தேவதேவி சென்றார். “யாரப்பா நீ?” என்று தேவதேவி கேட்கச் சிறுவன் “நான் விப்ரநாராயணனின் சிஷ்யன். அவர் இதை உங்களுக்குக் கொடுத்து அனுப்பினார் என்று பளபளக்கும் தங்க வட்டிலை அவளிடம் கொடுத்தான். தேவதேவி அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டாள். விப்ரநாராயணனை திண்ணையிலிருந்து உள்ளே அழைத்துக்கொண்டாள்.
மறுநாள் கோவிலைத் திறந்தபோது வட்டில் ஒன்றைக் காணவில்லை என்று அர்ச்சகர்களுக்கு அதிர்ச்சி. கோவில் வட்டில் களவு போனது என்ற செய்தி அரசனுக்கு எட்டியது. அரசன் காவலாளிகளை அனுப்பித் தேடச் சொன்னான். தேவதேவி தோழி ஒருத்தி “தங்க வட்டில் ஒன்று தேவதேவியை வீட்டில் இருக்கிறது” என்று துப்பு கொடுக்க அரசன் விசாரித்தான்.
தேவதேவி விப்ரநாராயணன் சிஷ்யன் என்ற சிறுவன் வந்து கொடுத்தான் என்றாள். விப்ரநாராயணனை கூப்பிட்டு விசாரித்தார் அரசன். எனக்குச் சிஷ்யனே கிடையாது என்றார் விப்ரநாராயணன். அரசன் வட்டிலை கோவிலில் சேர்த்துவிட்டு தேவதேவிக்கு அபராதம் விதித்தான். விப்ரநாராயணனை சிறையில் அடைத்தான்.
அன்று இரவு திருவரங்கன், அரசனின் கனவில் தோன்றினார். விப்ரநாராயணன் கதையைக் கூறினார். அரசன் முழித்துக்கொண்டு விப்ரநாராயணனை உடனே விடுவித்தான். பூமாலை கட்டிக்கொண்டு தொண்டனாக இருந்து சம்சாரத்தில் மூழ்கித் தாழ்ச்சியையும், பெருமாளின் கருணையையும் உணர்ந்தார்.
இதற்குப் பிராயச்சித்தமாகத் திருமால் அடியார்களின் பாத தூசியையும், அவர்களின் திருவடி தீர்த்ததையும் எடுத்துக்கொண்டார். அதனால் இவருக்கு ’தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்’ என்று பெயர். தேவதேவியும் திருந்தி ஆழ்வாருடன் சேர்ந்து திருவரங்கனுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார்கள். ”தொண்டரடிப்பொடியாவார் திருமாலை என்ற பாமாலையும்(பாசுரம்) பூமாலையும் சம்ர்பித்தார். அரங்கனுக்கு இரு மாலை சமர்ப்பித்தவர். இவரைப் போல நான் எதுவும் சமர்ப்பிக்கவில்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
ராமானுஜர் “பிள்ளாய் ! திருமாலை அறியாதவர் திருமாலையே அறியாதவர் என்று கூறுவர். இரு மாலை என்பதற்கு இன்னொரு அர்த்தம் இருக்கிறது” என்றார்.“அப்படியா சாமி ! அதைச் சொல்லுங்களேன்!” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
“இரு மாலை என்றால் நீ கூறியபடி இரண்டு மாலை என்பது ஒரு பொருள். இன்னொன்று இரு என்றால் பெருமை என்று பொருள். தொண்டரடிப்பொடி ஆழ்வாருடைய இயற்பெயர் எது என்றால் சட்டென்று விப்ரநாராயணர் என்று சொல்லச் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவருடைய அடையாளம் அது கிடையாது. இதை அவரே கூறுகிறார் திருப்பள்ளியெழுச்சியை முடிக்கும்போது” என்று பக்கத்தில் இருக்கும் சிஷ்யரைப் பார்த்தார். அந்தச் சிஷ்யர் “தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை” என்று கூற ராமானுஜர் “இதன் பொருள் – ஒழுங்காகத் தொடுக்கப்பட்ட துளசி மாலையும், பூக்கூடையும் தொண்டரடிப்பொடி என்ற பெயர் கொண்ட அடியனை” என்கிறார் ஆழ்வார். இந்த மாதிரி அடையாளம் கொண்டவர் சமர்ப்பித்த மாலை அதனால் அது பெருமை வாய்ந்தது அல்லவா ? ” என்றார்.”அரங்கன் கொடுத்து வைத்தவர் சாமி ! இந்த ஆழ்வார் அரங்கனை மட்டுமே பாடினார் அல்லவா ?” என்றாள்.
“குழந்தாய்! தொண்டரடிப்பொடி ஆழ்வாருக்குப் பிறகு அவதரித்த திருப்பாணாழ்வார் ‘வேங்கடவன் தான் அரங்கன்’ என்று ”அமலன் ஆதி பிரான்” பாசுரத்தில் சொல்லுகிறார். அதனால் திருமலையோ, திருவரங்கமோ ஆழ்வார்களுக்கு எல்லோரும் திருமால் தான் ! ” என்றார்.“அருமையான விளக்கம் சாமி! திருமாலை முழுவதும் திருமாலின் தொண்டர்களின் பெருமையைத் தான் ஆழ்வார் சொல்கிறார்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
“அதில் ஒரு பாசுரத்தில் தாழ்ந்த செயல்களைச் செய்பவர் ஆயினும் ’நாராயணா’ என்ற பகவானுடைய நாமத்தைத் துதிக்கும் அடியார்களாக இருந்தால் அவர்கள் அமுது செய்தபின் மீதமானது புனிதமே ஆகும் என்கிறார் ஆழ்வார் இது எனக்குப் பிடித்த பாசுரம் என்று ராமானுஜர் சொன்னவுடன் அந்தச் சின்னப் பெண் சற்றும் யோசிக்காமல்“அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே!” என்றாள்.
காஞ்சி வரதனும் அவனுடன் உரையாடும் நம்பியைப் பற்றியும் என்று தெரிந்தவுடன் ராமானுஜர் முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது.