வரலாற்றில் இன்று – ஜனவரி 17 – காந்தி கிராமம் ராமச்சந்திரன்
ஜனவரி 17 – காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான திரு ராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினம் இன்று. 1904ஆம் ஆண்டு பிறந்த இவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராமச்சந்திரன் அவரது சிறு வயதிலேயே காந்திய சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டார். சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டு இவர் பதினோரு முறை கைது செய்யப்பட்டார், ஏழாண்டுகளுக்கு மேலாக இவர் சிறையில் இருந்தார். ராஜாஜி தலைமையில் நடந்த வேதாரணியம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார். கேரளாவில் பட்டம் தாணுபிள்ளை தலைமையில் அமைந்த ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
இவரது மனைவி டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் திரு சுந்தரம் ஐயங்காரின் மகளான திருமதி சௌந்தரம் அவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1946ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்தின் அருகே இருநூறு ஏக்கர் பரப்பளவில் காந்தியின் கல்வித்திட்டத்தின்படி நடைபெறும் ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினர். 1976ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது ஏறத்தாழ நாலாயிரம் மாணவர்கள் இங்கே கல்வி கற்று வருகின்றனர்.