இங்கு(ம்) உண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே!
”சாமி ! இது எல்லோருக்கும் தெரிந்த பிரகலாதன் கதை” என்றாள் அந்தச் சின்னப் பெண்.”பெண்ணே! எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும் அதை நீ சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!” என்றார் ராமானுஜர்.
குட்டிப் பெண் சிரித்துக்கொண்டே கதையை ஆரம்பித்தாள். “எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், அங்கே கோயில் வாசலில் ‘ஜயன் விஜயன்’ என்று இரண்டு பேர் காவல் காத்துக்கொண்டு இருப்பார்கள். துவாரபாலகர்கள் என்று பெயர். துவாரம் என்றால் நுழைவாயில், பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்று பொருள். இந்தத் துவாரபாலகர்களுக்கு ஒரு கதை இருக்கிறது.
ஒரு சமயம், மகரிஷிகள் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய வைகுந்தம் வந்தார்கள். நுழைவாயிலில் காவல் புரிந்த ஜயன், விஜயன் இறுமாப்புடன் மகரிஷிகளைத் தடுத்தார்கள்.
அடியார்களுக்கு என் கதவு தாளிடப்படாமல் எப்போதும் திறந்தே இருக்கும்படி பார்த்துக்கொள்வது தான் ஜயன் விஜயனின் வேலை. ஆனால் அவர்கள் தடுத்தவுடன் வந்த ரிஷிகள் கோபமடைந்து ”பூமியில் பிறக்கக் கடவது” என்று சாபமிட்டார்கள்.
ஜய விஜயர்கள் தாங்கள் தப்பை உணர்ந்து பெருமாளிடம் சென்று சாப விமோசனம் கேட்டார்கள். என் அடியார்களிடம் நீங்கள் செய்த இந்தத் தப்பை என்னால் மன்னிக்கவும் முடியாது உங்கள் சாபத்தை என்னால் மாற்றவும் முடியாது என்றார்.
ஜயன் விஜயம் ஏமாற்றத்துடன் பெருமாளைப் பார்த்தார்கள். பெருமாள் சொன்னார் “பூமியில் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் என்னை எதிர்த்து வாழ்வது. அல்லது பல பிறவிகள் என்னை வணங்கி வாழ்வது இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் விருப்பம்போலத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறினார்.
”உங்களைவிட்டுப் பல பிறவிகள் பிரிந்து வாழ்வது கஷ்டம், அதனால் மூன்று பிறவிகள் உங்களை எதிர்த்து வாழ்ந்து அடிபட்டு மீண்டும் வருகிறோம் என்றார்கள். எங்கள் பிறவி முடியும் சமயத்தில் நீங்கள் பெருமாள் என்பதை நாங்கள் உணர வேண்டும்” என்றார்கள். பெருமாளும் சரி என்றார்.
இந்த ஜயன் விஜயன் தான் கிரேதாயுகத்தில் இரணியகசிபு(இரணியன்), இரண்யாட்சனாகப் பிறந்தார்கள். இருவரும் சகோதரர்கள். இரணியாட்சனை பெருமாள் பன்றியாக ( வராக ) அவதாரம் எடுத்து வதம் செய்தார். இதை அறிந்த அண்ணன் இரணியன் பெருமாள் மீது கடும் கோபம் கொண்டான்.
இரணியன் பிரம்மாவைக் குறித்து கடும் தவம் புரிந்தான். பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இரணியன் புத்திசாலித்தனமாக “பூமியோ, ஆகாசமோ, பகலோ, இரவோ, அரண்மனைக்கு உள்ளேயோ வெளியோ , தேவர்களோ, அசுரர்களோ மனிதர்களோ, மிருகங்களோ மற்றும் எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக் கூடாது என்ற வரம் வேண்டும்” என்றான். பிரம்மாவும் வேறு வழி இல்லாமல் வரம் கொடுத்தார்
.வரம் வாங்கிய இரணியன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். அந்தச் சமயம் இரணியன் மனைவி கயாது கருவுற்றாள். இரணியன் இல்லாத ஒரு சமயம் இந்திரனால் கயாதுவிற்கு ஆபத்து ஏற்பட்டது. அந்தச் சமயம் நாரதர் கயாதுவை காப்பாற்றி தன் ஆசிரமத்தில் பாதுகாத்தார். தினமும் ‘நாராயண’ மந்திரமும், விஷ்ணுவின் மகிமையும் கயாது கேட்டாள். அவளுடன் அவள் வயிற்றில் வளர்ந்த சிசுவும் கேட்டது. கருவிலேயே அந்தச் சிசு சிறந்த விஷ்ணு பக்தன் ஆகி, பிரகலாதனாகப் பிறந்தான்.
பிரகலாதன் வளர்ந்து கல்வி கற்கச் சென்றான். இரணியன் இருக்கும் தேசத்தில் இரணியனை வணங்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கப் பிரகலாதன் அதை மறுத்து “விஷ்ணுவே பரம் பொருள். அவனைத் தான் வணங்க வேண்டும்” என்று தன் ஆசிரியர்களுக்கும் கூடப் படிக்கும் மாணவர்களுக்கும் உபதேசித்தான்.
ஒரு நாள் பிரகலாதனை ஆசையுடன் கூப்பிட்டு பள்ளியில் என்ன பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று விசாரித்தான் இரணியன். பிரகலாதன் ”தந்தையே! பள்ளியில் தப்பு தப்பாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நல்ல உபதேசங்களைச் சொல்லுகிறேன்” என்றான்.இரணியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிரகலாதனைச் செல்லமாக மடியில் அமர்த்துக்கொண்டு ”அப்படியா ? உன் உபதேசங்களைச் சொல்லுப் பார்க்கலாம்” என்றான்.பிரகலாதன் “தந்தையே! விஷ்ணு தான் எல்லோருக்கும் தெய்வம். அவரிடம் தான் பக்தி செய்ய வேண்டும்”. இரணியனுக்கு ஒன்றும் புரியவில்லை தன் மகன் ஏன் எப்படி பேசுகிறான் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
பிரகலாதன் “தந்தையே எப்படி பக்தி செய்வது என்று யோசிக்கிறீர்களா ? பக்தி செய்யச் சில சுலபமான வழிகளைக் கூறுகிறேன்” என்று கடகடவென்று பக்தி எப்படி செய்வது என்று கூறினான்.
”விஷ்ணுவின் கதைகளைக் கேட்டு அவர் குணத்தை அறியலாம் அது முடியவில்லை என்றால் கேசவா, மாதவா, கோவிந்தா, நாராயணா என்று அவன் பெயர்களைச் சொல்லி ஆடிப் பாடலாம் அது முடியவில்லை என்றால் அவனைக் குறித்து தியானம் செய்யலாம் அது முடியவில்லை என்றால் கைக்கூப்பி கீழே விழுந்து அவன் பாதங்களை வணங்கலாம் அது முடியவில்லை என்றால் அவனைத் தினமும் மலர் கொண்டு பூஜை செய்யலாம் அது முடியவில்லை என்றால் அவனுக்கு ஏதாவது தொண்டு செய்யலாம் அது முடியவில்லை என்றால் அவனை நம் தோழனாக நினைக்கலாம் இது எதுவும் முடியவில்லை என்றால் அவனிடம் சரணடையலாம்” என்றான்.
இரணியனுக்கு இது எதுவும் கேட்க முடியவில்லை. கடும் கோபம் வந்தது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் ஆனால் பிரகலாதன் பிடிவாதமாக விஷ்ணுவைத் தான் வணங்குவேன் என்றான்.
இரணியன் சொந்தப் பிள்ளை என்று கூடப் பார்க்காமல் பிரகலாதனை ”ஈட்டியால் குத்துங்கள்” என்றான். பிரகலாதனுக்கு ஒன்றும் ஆகவில்லை. உணவில் விஷத்தைக் கலந்து கொடுக்கச் சொன்னான். மதம் பிடித்த யானைகளை அவன்மீது ஏற வைத்தான். பாம்புகள் இருக்கும் அறையில் அவனை அடைக்கச் சொன்னான். மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டான். கடலில் மூழ்கடிக்கச் சொன்னான். இரணியனால் பிரகலாதனை ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரகலாதன் இது எதுவும் நடக்காதது போல நாராயணனை பாடிக்கொண்டு இருந்தான்.
இரணியன் கோபமும், எரிச்சலும் அடைந்தான் “யாருடா உன் நாராயணன் அவன் இங்கு இருக்கிறானா ?” என்றான். அதற்குப் பிரகலாதன் ”தந்தையே இங்கு இல்லை, இங்கும் இருக்கிறான்!” என்றான்.
இரணியன் “இங்கும் என்றால் எங்கே இருக்கிறான் காட்டு” என்றான். பிரகலாதன் “தந்தையே நீங்கள் என்னைத் தள்ளி விட்ட மலையில் இருக்கிறான் அந்த மலையிலிருந்து செய்த இந்தத் தூணிலும் இருக்கிறான்”.
இரணியனுக்கு கோபம் மிகக் கடுமையானது “என்ன சொல்லுகிறாய்?” என்று கர்ஜித்தான். பிரகலாதன் “தந்தையே நீங்கள் பேசும் சொல்லிலும் இருக்கிறான்!” என்றவுடன் இரணியனுக்குக் கோபம் வெடித்தது.
பக்கத்தில் இருந்த தூணைக் காண்பித்து “இதோ இந்தத் தூணில் இருக்கிறானா ?” என்று கர்ஜித்தான். பிரகலாதன் “ஆம்!” என்றான் அமைதியாக. இரணியன் தன் கோபத்தை எல்லாம் திரட்டிப் பலமாக அந்தத் தூணைத் தன் கதையால் அடித்தான்.
தட்டிய உடனே சடைக்கென்று பெருமாள் மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் ‘நர சிங்கமாக’ வெளிப்பட்டான். இரணியனைப் பிடித்து உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாசற்படியில் உட்கார்ந்தார். பூமியிலும் இல்லாமல் ஆகாசத்திலும் இல்லாமல் தன் மடியில் கிடத்தினார்.
இரவும் இல்லாமல் பகலும் இல்லாமல் சாயங்காலமாக இருக்க தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டு இரணியனை வதம் செய்தார்.“சாமி ! நான் பிரகலாதனைப் போலப் பக்தி செய்தேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார்.“சாமி ! என்ன யோசிக்கிறீர்கள் ? எங்களுக்கும் அதைச் சொல்லுங்களேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் “பிள்ளாய்! எனக்கு ஆண்டாளின் பாசுரம் தான் நினைவுக்கு வந்தது” என்றார்.என்ன பாசுரமாக இருக்கும் என்று யோசித்தபோது ராமானுஜர் “குழந்தாய்! ஆண்டாள் ’கதிர் மதியம் போல் முகத்தான்’ என்கிறாள்.
இரணியனைப் பார்த்த நாசிம்மர் சூரியன் போல வெப்பமாக இருந்தார் ஆனால் பக்கத்தில் இருந்த பிரகலாதனைப் பார்க்கும்போது சந்திரனைப் போலக் குளிர்ந்து இருந்தார்!” என்றார்.

பக்கத்தில் இருந்த சிஷ்யர் “எப்படி ஒரே சமயத்தில் கோபமாகவும், சாந்தமாகவும் பார்க்க முடியும் ?” என்றார்ராமானுஜர் சிரித்துக்கொண்டே “ஒரு சிங்கம் அருகில் வரும் யானையைப் பார்த்துக் கோபமாகச் சீறும். அதேசமயம் தன் குட்டிக்கு அரவணைப்போடு பால் கொடுக்கும். அது போல தான்!” என்றார்”அருமை சாமி!” என்றாள் அந்தப் பெண் குட்டி.
ராமானுஜர் ”பெண்ணே! இரணியன் மலையிலிருந்து உருட்டி விடும்போது பிரகலாதன் தன் இரண்டு கைகளாலும் நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டானாம். ஏன் என்று தெரியுமா ?” என்றார்“தெரியவில்லையே சாமி!” என்றாள் அந்தச் சின்னப் பெண்
ராமானுஜர் “பிரகலாதன் நெஞ்சில் நாராயணன் குடி கொண்டு இருக்கிறார். அவருக்கு ஏதாவது அடிபட்டுவிடக் கூடாது இல்லையா ?” என்றார்“என்ன அன்பு ! என்ன பக்தி” என்றாள் அந்தச் சின்னப் பெண்
அப்போது பக்கத்தில் இருந்த சிஷ்யர் “பெருமாள் இங்கு இல்லை என்று சொல்லுபவர்களுக்கு இரணியனின் கதி தான்!” என்றார்/ உடனே அந்தப் பெண் “இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே!” என்றாள்.
“இல்லை என்றாலும் மோட்சம் உண்டு போல இருக்கிறதே!” என்றார் ராமானுஜர் புன்முறுவலோடு