கழகக்கூடாரத்தில் கலவரம் – V
ஆனால், தமிழக பாஜக-வின் தற்போதைய அவதாரம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, பாஜகவினருக்கே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ‘பட்டிதொட்டிகளிலெல்லாம் கட்சியைக் கொண்டு செல்வேன்,’ என்று எல்.முருகன் அவர்கள் சொன்னது, எல்லா புதிய தலைவர்களும் சொல்வதுபோன்ற சடங்கு அல்ல; அவர் அதற்கான நடவடிக்கைகளை திறம்பட திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, நடைமுறைப்படுத்துகிற முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபடுவதைப் பார்த்து பாஜகவினரே அரண்டு போயிருக்கின்றனர்.
‘எதற்கும் டெல்லியின் உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்; கட்சியின் நலனுக்காக, எத்தகைய கடுமையான முடிவுகளையும் எடுப்பதற்கான முழு அதிகாரமும் உங்களுக்கு இருக்கிறது; தமிழகத்தில் கட்சிக்கு உள்ள கட்டமைப்பில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்பட்டாலும், அதை உடனடியாகச் செயல்படுத்தலாம்,’ என்ற மட்டற்ற சுதந்திரத்தை மத்திய தலைமை எல்.முருகனுக்கு வழங்கியிருப்பதை, தமிழக பாஜகவினர் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.
கொரோனாவினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, எல்.முருகனின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, அவரது பெரும்பாலான முயற்சிகளுக்கு உதவியிருக்கிறது என்றே சொல்லலாம். தமிழக பாஜக காரியாலயத்தில் தற்போது புதிய முகங்கள், புது உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர். தமிழக பாஜகவின் ஏட்டுச்சுரைக்காயாக விளங்கி வருகின்ற தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ஊடகத் தொடர்புத் துறை முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. மாவட்ட அளவில், வழக்கறிஞர் அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பிற அணிகளுடனான தொடர்பு மேம்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய நிர்வாகத்தின்போது ஏதேதோ காரணங்களால் கட்சிப்பணியில் சுணக்கம் காட்டி வருகிறவர்களுக்கு அலைபேசி அழைப்புகள் வருவதாகவும், காரியகர்த்தாக்கள் என்று பாஜக பெருமையோடு அழைக்கின்ற தொண்டர்களின் மனக்குமுறல்கள் பொறுமையுடன் கேட்கப்படுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
அடுத்து? சில அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்பதே பாஜகவில் பலரின் எதிர்பார்ப்பாகவும், சிலரின் பயமாகவும் இருக்கிறது. இந்த ஊகங்களை ஊர்ஜிதப்படுத்துவதுபோல, சமூக வலைத்தளங்களில் சில பழைய முகங்களின் சிணுங்கல்கள் இப்போதே கேட்கத் தொடங்கி விட்டன. ஆனால், இதெல்லாம் வெறும் டீஸர் தான் என்பதையறிந்து வைத்துள்ள பல பழைய தலைவர்கள், மிகுந்த கவலையுடன் என்ன செய்தி வரப்போகிறதோ என்று தங்களது அலைபேசிகளைக் கீழே வைத்துவிடாமல் பதற்றத்துடன் காணப்படுகிறார்கள் என்பதை கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
’தாமரை மலர்ந்தே தீரும்,’ என்று அடிக்கடி முழங்கிய டாக்டர் தமிழிசையைப் போலன்றி, அதிரடி நடவடிக்கைகளில் துணிந்து இறங்கி, களையெடுத்துக் கொண்டிருக்கிற எல்.முருகன், தனது கட்டற்ற சுதந்திரத்தை எப்படிக் கையாளப்போகிறார் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.