மதுரை : மதுரை : மிகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் இன்று (ஜன.,17), அங்குள்ள அம்மன் கோயிலிலுள்ள வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடியசைத்து திறந்து வைத்தார். முதலில் கோயில் காளைகளும், பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் 1400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு பணியில் அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரை கலெக்டர் நடராஜன் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். போட்டிகள் துவங்குவதற்கு முன் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று, வீரர்கள் கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்.
மாடு பிடிக்கும் வீரர்களுக்கு 2 சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளன. சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த காளைக்கு மற்றொரு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகளை நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு செய்து வருகிறார்.
ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் என்ற வீதத்தில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்படுகிறார்கள்.