சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

விடுதலை வீரர் ராவ் துலாராம் – டிசம்பர் 9.

அந்த விடுதலை வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தவர். பலமுறை ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் சென்றவர். பிறகு பாரதத்தை விட்டு விலகி வெளிநாட்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் ராணுவத்தை உருவாக்கியவர். ஆனால் தனது கனவு நிறைவேறும் முன்னால், வெளிநாட்டிலேயே மரணம் அடைந்தவர். நாம் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கவில்லை. அவருக்கு எண்பதாண்டுகளுக்கு முன்னம் அதே போல இருந்த ஒரு வீரரைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். 

இன்றய தெற்கு ஹரியானா முதல் வடகிழக்கு ராஜஸ்தான் வரை உள்ள இடம் அஹிர்வால் பிரதேசம் என்று அறியப்படும் நாடாக இருந்தது. ரேவாரி அதன் தலைநகர். அதனை யது குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். டெல்லிக்கு எண்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நாடு இருந்தது. இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருந்த ராஜா ராவ் புரன் சிங் – ராணி ஞான் கவுர் தம்பதியினரின் மகனாக 1825ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தவர் துலா சிங் அஹிர். நாடாளுவதற்கு தேவையான ஆயுதப் பயிற்சி, ராணுவ வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே மேற்கொண்டார் துலா சிங். அதோடு அவர் ஹிந்தி, பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்று இருந்தார். தனது பதினாலாம் வயதில் தந்தையை இழந்த துலா சிங் ராஜா ராவ் துலா ராம் என்ற பெயரோடு 1839ஆம் ஆண்டு அரியணை ஏறினார். 

பாரதம் கொந்தளிப்பான காலத்தில் இருந்த நேரம் அது. வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக பாரதத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதனை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் தொடங்கியது. அதில் ராஜா ராவ் துலாராமும் கலந்துகொண்டார். கடைசி முகலாய அரசராக இருந்த பகதுர் ஷா ஜாபர் அவர்களின் உதவிக்கு ஐயாயிரம் வீரர்கள் கொண்ட படையோடு அவர் சென்றார். ஏற்கனவே ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி இருந்ததால், பல்வேறு ஆயுதங்களும் துலாராம் வசம் இருந்தது. 

டெல்லிக்கு சற்று தொலைவில் உள்ள நசிபிபூரில் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்களை துலாராம் படைகள் தோற்கடித்தன. கர்னல் ஜான் ஜெரார்ட் மற்றும் கேப்டன் வாலஸ் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால் பாட்டியாலா, கபூர்தலா போன்ற நாடுகளின் படைகள் ஆங்கிலேயர்களின் உதவிக்கு வர துலாராம் படைகள் பின்னடையவேண்டி இருந்தது. எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைப் பின்தொடருவார்கள் என்பதை அறிந்த துலாராம், தாந்தியா தோபேயின் துணையோடு மீண்டும் போராட்டத்தை தொடங்கினார். முழுமையான ஆதரவு இல்லாததால் முதல் சுதந்திரப் போர் வெற்றியில் முடியவில்லை. 

சரணடைய விரும்பாத துலாராம், ஈரானுக்குச் சென்று அன்றய மன்னர் ஷாவைச் சந்தித்தார். ஷா அவருக்கு ராணுவ உதவி அளிப்பதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்த துலாராம் அந்த நாடு எமிரையும் சந்தித்து உதவி கோரினார். அவரும் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்தே ரஷிய மன்னரோடு துலாராம் தொடர்பு கொண்டார். ஏற்கனவே இவர்கள் அனைவரோடும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல உறவு இல்லை. அதனால் இவர்கள் அனைவரும் துலாராமிற்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1863ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் துலாராம் தனது முப்பத்தி எட்டாம் வயதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் மரணமடைந்தார். 

வீரர்கள் மரணமடையலாம், ஆனால் வீர வரலாறு மரணிக்காது. ராஜா ராவ் துலாராம் உள்ளிட்ட வீரர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உரித்தாகுக. 

(Visited 77 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close