நதியிசைந்த நாட்கள் – 2 அத்தியாயம் – 1: ரூபவாஹிணி
சிறு இடைவேளைக்குப் பிறகு, நதியிசைந்த நாட்கள் – 2 தொடரின் மற்றுமொரு அத்தியாயத்துடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
திரைப்படப் பாடல் மற்றும் பாரம்பரிய இசை என்பதைத் தாண்டி என் செவிப்பறையில் புழங்கிய வேறு வடிவ இசை பற்றி தான் இத்தொடரில் எழுதி வருகிறேன். திருச்சி காவிரிக்கரையில் வசித்த கால கட்டத்தில் மனதுக்குள் ஐக்கியமான மாறுபட்ட இசை பற்றியே எழுதி வந்தேன். அடுத்து சில அத்தியாயதங்களில் கார்ட்டூன்கள், ஆங்கிலத் தொடர்கள், குழந்தைகளுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஒலித்த/ ஒலித்துக் கொண்டிருக்கும் சாகாவரம் பெற்ற டைட்டில் மியூஸிக்/ தீம் மியூஸிக் பற்றி எழுதவிருக்கிறேன்.
எலிமெண்டரி ஸ்கூல் கால கட்டம் :
இந்த காலகட்டத்தில் வீட்டில் தொலைக் காட்சி பெட்டி கிடையாது. வானொலிக்கு இலங்கை வானொலி சேவை போல் தொலைக்காட்சி அலைவரிசைக்கு இலங்கையின் ரூபவாஹிணி என்று நம் மக்கள் லயித்துக் கிடந்த பொற்காலம் அது. தினமும் இரவு நேரத்தில் பிரசித்தி பெற்ற ஆங்கிலத் தொடர்களை வாராந்திரியாக ஒளிபரப்புவார்கள்.
திங்கட் கிழமைகளில் நைட் ரைடர் (knight rider)
செவ்வாய் கிழமைகளில் லேண்ட் ஆஃப் தி ஜெயின்ட்ஸ் (land of the giants)
வெள்ளிக்கிழமைகளில் மங்கி (monkey)
ஒரு தனியார் நிறுவன ஊழியர்களுக்கான குடியிருப்பின் தரைத் தளத்தில் வசித்து வந்தோம். வீட்டை விட்டு வெளியே வந்து வலது புறம் திரும்பிப் பார்த்தால் வாகனங்கள் செல்லும் சாலை, அதில் மீண்டும் வலது புறம் திரும்பி நடந்தால் மற்றொரு தெரு, குடியிருப்பு வீடுகள். அங்கு ஒரு வீட்டில் என்னை விட மூன்று வயது மூத்தவனான ஸ்ரீராம் என்பவனின் வீடு இருந்தது. அவர்களுக்குப் பூர்வீகம் பாலக்காடு. அந்த வீட்டில் தான் டிவி பார்ப்பதை வழமையாக துவக்கத்தில் வைத்திருந்தேன்.
அவனுக்கும் எனக்கும் நாளடைவில் மனமாச்சரியங்கள் துளிர் விட்டன. அவன் கவாஸ்கர் ரசிகன் நான் கபில் தேவ். கபில் தேவை ஏசினால் காட்டமாக பதிலடி தருவேன். பிடித்தமானவர்களை இழிவாகப் பேசினால் திருப்பி கொடுப்பது என்ற பழக்கம் அப்போதே எனக்கு வந்து விட்டது போல! தொட்டில் பழக்கம்…
ஒரு நாள் கவாஸ்கர் – கபில் சண்டை முற்ற, “வீட்ல டிவி கூட இல்லை என் வீட்ல வந்து டிவி பாக்க பிச்சைக்காரனாட்டம் வர, கபில்னு பேத்தினா என் வீட்டுக்கு டிவி பாக்க வரக் கூடாது, இப்பவே வெளிய போடா” என்றான்.
அழுதபடி அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தேன். இரு வீடுகள் தள்ளி சுரேஷ் வீடு. அவன் என் அண்ணனுக்கு கிளாஸ் மேட். அவர்கள் பூர்வீகம் ராஜ முந்திரி. சுரேஷின் அம்மா நான் அழுதபடி வருவதைப் பார்த்து விசாரித்தார். நான் கதறி அழுதபடி அனைத்தையும் சொன்னேன். “சுரேஷ் மாதிரி தான் நீயும், எங்க வீட்ல வந்து டிவி பாரு, யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க வாப்பா” என்றார். அவர்கள் வீட்டில் சோனி ஆர்ஸான் கலர் டிவி. ஸ்ரீராம் வீட்டில் கறுப்பு வெள்ளை! சந்தோஷமாக சென்றேன். அதன் பின் அவர்கள் வீட்டில் தான் டிவி!
ஆங்கிலத் தொடர்களை ஒளிபரப்புவதில் ரூபவாஹிணி ஒரு வழிமுறையைக் கடைபிடித்தது. இரு பகுதிகளாக பிரித்து ஒளிபரப்புவார்கள். முதல் பகுதி முடிந்து அடுத்து என்ன என்ற பரப்பரப்பை எட்டி இருக்கும் போது செய்தி இடைவேளை என்று விடுவார்கள். அடுத்த அரை மணித்தியாலத்திற்கு செய்தி. டிவி முன் அமர்ந்திருந்த எங்கள் வானரக் கூட்டம் வெளியே ரோட்டுக்கு வந்து பேட் டென்னிஸ் பால் சகிதம் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்போம். தெரு விளக்குகள் பிரகாசமாக இருக்கும். பகல் – இரவு மன்னிக்க இரவு கிரிக்கெட். ஸ்ரீராம் வீட்டில் நியூஸ் முடிந்த பின் டிவி பார்க்க முடியாது. யாரும் வரக் கூடாது என்று சொல்லி கதவை சாத்தி விடுவார்கள். சுரேஷ் வீட்டில் அந்த கட்டுப்பாடு கிடையாது. தொடர்களின் சஸ்பென்ஸ் என்னவென்று பார்க்க எங்களுக்கு வழி உண்டு. ஆம் என்னுடன் நண்பர்கள் பலர் சுரேஷ் வீட்டில் டிவி பார்க்க வந்து சேர்ந்ததால் நாங்கள்!
அப்போது பார்த்த தொடர்களின் சில கதைகள் மட்டுமே தற்போது மங்கலாக நினைவில் இருக்கின்றன… ஆனால் தீம் மியூஸிக்?
Knight Rider :
அது காரா இல்லை சர்வ சக்தி பெற்ற ஒரு ஆயுதமா என்று சொல்ல முடியாத அளவுக்கு ஏகப்பட்ட வசதிகள் நிரம்பிய வாகனம் அதை உண்மையில் கதாநாயகன் ஓட்டுகிறானா அல்லது தானே இயங்குகிறதா என ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். கண் மூடி அந்த தீம் மியூஸிக்கை கேட்டாலே மனக் கண்ணில் அந்த காரும் அதில் நாமே சவாரி செய்வது போன்ற உணர்வை இப்போதும் தரும்? ஏன் அப்படி? விடை தெரியவில்லை… அறிந்து கொள்ளவும் இஷ்டமில்லை.
அந்த தீம் மியூஸிக்கை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீமாஸ்டர் செய்து யூ டியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்கள் அதைக் கேட்டு உற்சாகத்தில் மூழ்க இக்கொழுவியை சொடுக்குங்கள் : https://www.youtube.com/watch?v=Nj80Kwenh6I
Land of the Giants :
மாறுபட்ட மனித உருவங்கள், வித்தியாசமான காட்சியமைப்பு, சண்டைக் காட்சிகள்… இதையெல்லாம் தாண்டி நினைவில் நிற்பது சீரியல் துவங்கும் போது வரும் தீம் மியூஸிக்கும்… நிழல் உருவங்களும் மட்டுமே!
ஒரு மனிதனின் கைப்பிடிக்குள் சிக்கும் சின்ன உருவம்… அந்த காலகட்டத்தில் இது போன்ற காட்சி சித்திரம் மனதில் பிரமிப்பை தோற்றுவித்தது. பூ தொடுத்து முடித்த மாலையை கடவுள் விக்ரஹங்களில் சாத்திய பின்பும் கைகளில் ஊடுருவிய பூ வாசம் போல் அந்த இசை நினைவு இப்போதும் நிலைத்து காணப்படுகிறது.
இசையைக் கேட்டு மகிழ இக்கொழுவியை சொடுக்குங்கள் :
https://www.youtube.com/watch?v=iMIe5utv4n4
Monkey :
முதன் முதலாக டிவியில் ஜப்பானிய முகங்களை அதிகமாக பார்த்தது இந்த சீரிஸில் தான்… தந்திர காட்சிகள், சடார் சடாரென உருவங்கள் மாறுவது, கத்தி சண்டை என பக்காவாக பரபரப்பாக சுவாரசியமான முறையில் தயாரிக்கப்பட்ட தொடர் இது.
மங்கி மேஜிக் மங்கி மேஜிக்… என்று பாடி பள்ளிக்கூடத்தில் உடன் படித்த சகாக்களை கிள்ளி வம்பிழுத்தது இப்போதும் மங்கலாக நினைவில் மோதுகிறது.
இசையைக் கேட்டு உடன் சேர்ந்து பாட இக்கொழுவியை சொடுக்குங்கள் :
எப்போதோ பார்த்த டிவி நிகழ்ச்சிகள், பல எபிசோடுகளில் இடம்பெற்ற கதைகள் என்ன என்பது கூட நினைவில் இல்லை ஆனால் இசை மட்டும் மறக்க இயலாதவாறு மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றன. இசைக்கு எல்லை என்பதே இல்லை. இசையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் யாராலும் அடக்கிவிட முடியாது. இசையின் மாறுபட்ட பரிமாணங்கள், வேற்படும் வடிவங்கள், வித்தியாசமான ஒலியை பிரசவிக்கும் வாத்திய இசைக் கருவிகள் என அதன் வீச்சையும் சகல விதமான இசையையும் உணர்ந்து ரசித்து முழுதாக மூழ்கி திளைக்க ஒரு மனிதனின் ஆயுட்காலம் போதவே போதாது.
மனதுக்கு பிடித்த நபர்கள் சீமாந்திரர்களாக விளங்குவது சுரேஷிலிருந்து துவங்கியது என்று அவதானிக்கிறேன்.