ஆன்மிகம்

நெடுந்தூரம் போனேனோ நாத முனியைப் போலே!

வீர நாராயண ஏரிக்கு அருகில் காட்டுமன்னார் கோயில் என்ற கிராமத்தில் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ரங்கநாதன். அவர் யோகம் இசை எல்லாவற்றிலும் வல்லவர் அதனால் அவரை நாதமுனிகள் என்று அழைத்தனர். தன் தந்தை ஈச்வர பட்டாழ்வாருடன் குடும்பமாக வடநாட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார்.

மதுரா, சாளக்கிராமம், துவாரகை, அயோத்தி முதலான இடங்களுக்குச் சென்று சேவித்துவிட்டு யமுனைக் கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் யமுனைத் துறைவன் என்ற பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். சில வருடங்கள் கழித்து, ஒருநாள் காட்டுமன்னார் பெருமாள் ‘வீரநாராயணபுரத்துக்கு வாரும்’ என்று கனவில் சொல்ல, நாதமுனிகளும் யமுனைத் துறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு பல திவ்ய தேசங்களைச் சேவித்துக்கொண்டு மீண்டும் வீரநாராயணபுரத்துக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.

அங்கே இருக்கும் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை) சில வைஷ்ணவ அடியார்கள் மன்னார் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு நம்மாழ்வார் பாசுரமான ‘ஆராவமுதே…’ என்கிற திருவாய்மொழியின் பாசுரங்களைச் பாடினார்கள்.

செந்தமிழில் தேன் போன்று நாதமுனிகள் அந்தப் பாசுரங்களைச் சுவைத்தார்.அந்த வைஷ்ணவ அடியார்கள் பத்துப் பாசுரங்கள் மட்டுமே பாடினார்கள். கடைசியாக அவர்கள் ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடிக்க, நாதமுனிகள் ஆழ்வாரின் தித்திக்கும் தமிழ்ப் பாசுரத்துக்கு அடிமையாகி “ஆயிரத்துள் இப்பத்தும் என்கிறீர்களே அப்படியானால் மற்ற தொள்ளாயிரத்து தொண்ணூற்றிப் பத்தும் முழுவதுமாக உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் நாதமுனிகள்.

“எங்களுக்கு இந்தப் பத்து பாசுரங்கள் மட்டும் தான் தெரியும்.. எங்கள் முன்னோர் இதை மட்டும் தான் சொல்லிக்கொடுத்தார்கள். நாங்கள் சொல்லுகிறோம்.”வருத்தத்துடன் நாதமுனிகள் “அந்தப் பத்து பாசுரங்களையும் மீண்டும் ஒரு முறை சேவியுங்கள்” என்று கேட்டார்.

அவர்கள் சந்தோஷத்துடன்ஆரா-அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே!*
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே! ”

என்று ஆரம்பித்தார்கள்.

கடைசியில்”குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்” என்று முடித்தார்கள்.நாதமுனிகள் முதல் பாசுரத்தில் “திருகுடந்தை” என்ற சொல்லும், கடைசி பாசுரத்தில் ‘‘குருகூர் சடகோபன்’ என்ற சொல்லும் அவர் நெஞ்சில் பதிந்தன. திருகுடந்தைக்கு (கும்பகோணம்) புறப்பட்டார்.

பல மாதம் நடந்து திருகுடந்தை வந்த நாதமுனிகள் திருகுடந்தை கோயிலுக்குச் சென்று ஆராவமுதனைச் சேவித்து அங்குள்ளவர்களிடம் இந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடிக்காட்டி, மீதம் உள்ள 990 பாசுரம் இங்கே யாருக்காவது தெரியுமா என்று கேட்க, அவர்கள் “எங்களுக்கும் இந்தப் பத்து பாசுரம்தான் தெரியும்” என்ற போது நாதமுனிகள் ‘குருகூர் சடகோபன்’ என்ற வார்த்தையில் உள்ள திருக்குருகூர் நோக்கி நடக்கத் தொடங்கினார்…

பல நாட்கள் நடந்த பின் அவர் திருகுருகூர் வந்து சேர்ந்தார்.திருகுருகூர் வந்த நாதமுனிகள் அங்கே உள்ள கோயிலுக்குச் சென்று பொலிந்த நின்றபிறானையும் அங்கே இருக்கும் பெரியோர்களைச் சேவித்து அந்த ஆயிரம் பாசுரங்கள் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.“கேள்விப்பட்டிருக்கிறோம்… ஆனால் எங்களுக்குத் தெரியாது…” என்றார்கள்.

நாதமுனிகள் ஏமாற்றத்துடன் “அடடா… இதைத் தேடிக்கொண்டுதான் இங்கே வந்தேன்..”“இங்கே குருகூர் சடகோபன் சிஷ்யர் மதுரகவியாரின் வம்சத்தவர் ஒருவர் இருக்கிறார்.. நீங்கள் எதற்கும் அவரைக் கேட்டுப்பாருங்கள்.” என்றார்“யார் அவர்… எங்கே இருக்கிறார்..?”“அவர் பெயர் பராங்குசதாஸர்… “ என்று அவர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க, நாதமுனிகள் பராங்குசதாஸரைத் தேடிச் சென்றார்.

நாதமுனிகள் பராங்குசதாஸரை தேடி ஓடினார். அவரிடம் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி விசாரிக்க, “அந்தப் பாசுரங்களின் பெயர் திருவாய்மொழி. திருவாய்மொழியும், மற்ற பிரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டன. எங்களுடைய குருவான மதுரகவிகள் சடகோபன் என்ற நம்மாழ்வாரை குறித்து ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார் அதுதான் எங்களுக்குத் தெரியும்.நாதமுனிகளுக்கு என்ன செய்வது என்று வருத்தத்துடன் இருந்தார்.”நாதமுனிகளே! இன்னொரு விஷயம் என்று பராங்குசதாஸர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்துக்கு அடியில் அவரை தியானித்து, பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார், அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.”

உடனே யோகத்தில் வல்லவரான நாதமுனிகள் சடகோபனைத் தியானித்து ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு’ என்ற பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை சொல்லி முடித்தார்.

அப்போது நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் காட்சி தந்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அதற்கு நாதமுனிகள் “திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் வேண்டும்” என்று கேட்க, ஆழ்வாரும் அவருக்கு “தந்தோம்” என்று திருவாய்மொழி மட்டும் அல்லாமல் மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் அதன் அர்த்தங்களையும் அவருக்குக் கொடுத்தார்

.அதை நாதமுனிகள் தொகுத்து, இசை அமைத்து இன்றும் வைஷ்ணவக் கோயில்களிலும், இல்லங்களிலும் அதை பாடுகிறோம். இது எல்லாவற்றிற்கும் காரணம் நாதமுனிகள்.

“சாமி! நான் நாதமுனிகள் மாதிரி இப்படி நெடுந்தூரம் சென்றேனா ? இல்லையே அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் ”குழந்தாய்! நம்மாழ்வார் பாசுரத்தால் நாதமுனிகள் இன்னொரு முறை நெடுந்தூரம் சென்று மோட்சம் பெற்றார் தெரியுமா ?” என்றார்

“அப்படியா சாமி ! அது என்ன பாசுரம் ஏன் நெடுந்தூரம் சென்றார் ? அது என்ன கதை?” என்றாள் அந்தச் சின்னப் பெண் ஆர்வமாக.

”நம்மாழ்வார் ’திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே’ என்று பாடுகிறார். அதாவது அழகுடைய அரசர்களைக் கண்டால் ராமரைப் பார்த்த மாதிரி இருக்குமாம்.. அதே போல அழகான வண்ணங்களைப் பார்த்தால் கண்ணன் போல இருக்குமாம். எதைப் பார்த்தாலும் ஆழ்வாருக்குப் பெருமாளை நினைவுபடுத்துமாம்!” என்றார் ராமானுஜர்

“என்ன பக்தி ஆழ்வாருக்கு ! நாதமுனிகள் இந்தப் பாசுரத்தால் ஏன் நெடுந்தூரம் சென்றார் ? “ என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

ராமானுஜர் “ஒரு கதை இல்லை பெண்ணே இரண்டு கதைகள் இருக்கிறது!” என்று முதல் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.ஒரு நாள் நாதமுனிகளை அந்த தேசத்துச் சோழ அரசன் தன் பட்டத்து ராணிகளுடன் வந்து வணங்கிவிட்டு புறப்பட்டான். நாதமுனிகள் அரசனை பின் தொடர்ந்தார். நீண்ட தூரம் நடந்த பின் அரசன் கங்கைகொண்ட சோழபுரம் அடைந்து அரண்மனைக்குச் சென்றார்.

நாதமுனிகளின் சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை “ஏன் அரசனை பின் தொடர்கிறீர்கள் ?” என்று கேட்டார்கள். அதற்கு நாதமுனிகள் அந்த அரசன் தன் மனைவியுடன் வந்தது என் கண்களுக்குக் கண்ணன் ருக்மிணி சத்யபாமாவுடன் வந்தது போல இருந்தது என்றார்.”அருமை சாமி ! அடுத்த கதை என்ன ?” என்றாள்.

ராமானுஜர் ”சொல்கிறேன் பெண்ணே! வீரநாராயண புரத்தில் ஒரு நாள் நாதமுனிகள் இல்லத்துக்கு வில்லும் கையுமாக இருவரும், ஒரு பெண்பிள்ளையும், குரங்குடன் வந்து அவர் மனைவியிடம் ”நாதமுனிகள் இருக்கிறாரா ? என்று விசாரித்தார்கள். நாதமுனிகளின் மனைவி “அவர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்” என்று சொல்ல, வந்தவர்கள் சென்றுவிட்டார்கள்.

இல்லம் திரும்பிய நாதமுனிகள் ”மனைவி சொன்னதைக் கேட்டுச் சக்கரவர்த்தி திருமகனான ராம, லக்ஷ்மணர், சீதையும் அனுமாரும் தான் தன்னைப் பார்க்க வந்தவர்கள் என்று நம்பி அவர்களைத் தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அவர்களைத் தேடிக்கொண்டு சென்றார். அவர் சென்ற வழியில் பூச்சரம் ஒன்றைக் கண்டார் “இது சீதையுடைய பூச்சரம்” என்று சொல்லியவாறு வேகமாக நடந்தார். ( “பூவிழுந்த நல்லூர்” என்று அழைக்கப்படுகிறது).

அங்கே ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருப்பதைக் கண்டார். அனுமாரின் கால் தடம் என்று இன்னும் வேகமாக நடந்தார் (அந்த இடம் தற்போது “குறுங்குடி” என்று அழைக்கப்படுகிறது). வழியில் சென்றவர்களைப் பார்த்து ”வில்லும் கையுமாக இங்கே ஒரு பெண்மணி குரங்குடன் யாரையாவது பார்த்தீர்களா ? “ என்று அடையாளங்களைச் சொல்லிக் கேட்டார்.

அவர்களும் “ஆம் கண்டோம்.. இந்தப் பக்கமாகச் சென்றார்கள்” என்று சொன்னார்கள்(அந்த இடமே தற்போது “கண்ட மங்களம்” என்ற ஊர்). நாதமுனிகள் பல மணி நேரம் நடந்தார் ஆனால் அவர்களை எங்குத் தேடியும் பார்க்கமுடியாமல் அந்த இடத்திலேயே மூர்ச்சித்து பரமபதித்தார் (இந்த இடத்துக்கு “சொர்க்கப்பள்ளம்” என்று பெயர்)ராமானுஜர் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் பேச முடியாமல் பிரமித்துப் போயிருந்தாள்.

அப்போது ஒரு சிஷ்யர் “நாதமுனிகள் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிச் சென்று பெருமாளின் திருவடியாக விளங்கும் நம்மாழ்வார் மூலம் பெற்றார். பெருமாளின் திருவடியாம் மாருதி சீதையைத் தேடிக் கண்டுபிடித்தார். இரண்டு தேடலிலும் திருவடி சம்பந்தம் இருக்கிறது!” என்றார்.

அந்தப் பெண் “ அவன் போனான் என்றேனோ மாருதி ஆண்டான் போலே” என்றாள்.“பெண்ணே! உன் கதைகள் அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகிறதே!” என்ற போது எல்லோரும் சிரித்து அடுத்த கதைக்குத் தயாரானார்கள்.

(Visited 227 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close