நதியிசைந்த நாட்கள் – 2 : அத்தியாயம் – 4 Return to Innocence
பிறந்தது ருமேனியாவில். தாய் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்தவர். தந்தையின் பூர்வீகம் ருமேனியா… உலகின் சிறந்த இசைக் கலைஞராக உருவெடுத்த இவரின் முதல் குரு இவரது அம்மா. இவர் தற்போது குடியுரிமை பெற்று ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
திருச்சியில் பிறந்து இப்போது மெட்ராஸில் வசிக்கும் என்னைப் போன்றதொரு சாமானியன் ருமேனியாவில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசிப்பவரைப் பற்றி எழுத என்ன காரணம்?

இருவரையும் இணைப்பது இசை. உலகின் பல்வேறு பிராந்தியங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் யார் யார் என்று அவருக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் என்னைப் போன்ற இனம், மொழி, மதம், இசையைத் தந்தது யார் என்று பிரித்துப் பார்க்காமல் இசையை மட்டும் கொண்டாடும் இசையை மட்டும் ஆராதிக்கும் ரசிகர்களுக்கு இவரைப் போன்ற இசைக் கலைஞர்கள் மனித உருவில் உலா வரும் பொக்கிஷங்கள்.
இரண்டு பத்தி எழுதியும் பெயரைக் குறிப்பிடவில்லை பாருங்கள்… அவர் பெயர் மைக்கேல் க்ரிட்டு (Michael Cretu) இவரை கர்லி, எம்.ஸி கர்லி (Curly MC) என்றும் செல்லமாக அழைப்பார்கள். அதற்கு காரணம் அவரின் சிகையலங்காரம்.
அவர் பிறந்த இடம், தற்போதைய வசிப்பிடம் பற்றியெல்லாம் குறிப்பிட்டேன் ஆனால் அவரின் இசைக்கு எல்லை இல்லை. உலகம் முழுதும் பறந்து விரிந்து வளியில் கலந்திருக்கிறது. அவரின் நேரடி இசை மட்டும்மல்ல நம் தேசத்தில் அது புயலாகவும், மரகதமாகவும், மேஜிக்காகவும், ஞானி போன்றும், தேனிசை போலவும், உளி கொண்டு செதுக்கும் படைப்பு போலவும் மேலும் சொல்ல விடுபட்ட தினுசான வடிவங்களில், தேசத்தில் உள்ள பல்வேறு மொழி வரிகளின் துணையுடன் அவரின் இசை உள்வாங்கியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
க்ரிட்டு அவர்கள் 1979 ஆம் ஆண்டு “Moon, Light, flowers” என்ற பெயரில் தான் முதல் சோலோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்.
1983 ஆம் ஆண்டு “Legionare” என்ற பெயாரில் இரண்டாவது ஆல்பம் வெளியானது, 1985 ஆம் ஆண்டு “Die Chinesische Mauer” ஆல்பம் வெளிவந்தது. ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த ஆல்பம் ரிலீசானது. சாமுராய் என்ற இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று ஹிட்டடித்து இசை ரசிகர்களின் பார்வையை க்ரிட்டு பக்கம் திருப்பியது
1981 ஆம் ஆண்டு உலகின் புகழ் பெற்ற பேண்ட்களில் ஒன்றான போனிஎம் (BoneyM) குழுவில் கீ போர்ட் வாசிக்கும் கலைஞராக தன் இசைப்பயணத்தை துவக்கினார்.
கீ போர்ட் வாசிப்பது மட்டுமின்றி புல்லாங்குழல், வயலின், கிதார், ட்ரம்ஸ் போன்ற ஏராளமான வாத்திய இசைக்கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு உள்ளூர் நாட்டுபுற இசைக்கருவிகளை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போதைய ஹர்பஞ்சி போன்ற நவீன இசைக் கருவிகளையும் வாசிக்கக் கற்று வாசிப்பவர். ரிக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பம் அறிந்தவர். மியூஸிக் ஆர்கனைஸ் செய்வதில் சமர்த்தர் (யாரையோ நினைக்கத் தோன்றுகிறதல்லவா?)
1985 ஆம் ஆண்டு மோடி ஸ்பெஷல் (Moti special) பாப் இசைக் குழுவின் முதல் ஆல்பமான மோடிவேஷன் (Motivation) வெளிவந்த ஜெர்மன் தேசத்தில் மட்டுமல்லாது ஐரோப்பிய தேசம் முழுதும் ஓரளவு சிறப்பாக ஹிட் அடித்தது. அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக க்ரிட்டு இருந்தார். அவர்களின் இரண்டாம் ஆல்பம் வெளிவருவதற்கு முன்பாக அக்குழுவை விட்டு விலகினார்.
1985 ஆம் ஆண்டில் ஜெர்மானிய பாப் பாடகி ஸான்ட்ரா அவர்களின் முதல் ஸ்டுடியோ ஆல்பமான “தி லாங் ப்ளே” வை தயாரித்ததோடு கீ போர்ட், ட்ரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை இசைத்து பக்காவான ஆல்பமாக வெளியிட்டு அசத்தினார். பிறகு ஸான்ட்ரா அவர்கள் க்ரிட்டுவின் வாழ்க்கைத்துணையானார்.
ஸான்ட்ராவின் வருகைக்குப் பிறகு க்ரிட்டு அவர்களுக்கு ஒரு புதிய சிந்தனை உருவானது. ஒரு தனித்துவமான பெயரில் ஒரு ப்ராஜக்டை உருவாக்க வேண்டும். அந்த பெயரின் கீழ் தொடர்ந்து வெவ்வேறு துணைத் தலைப்புகளில் மியூஸிக் ஆல்பம் வெளியிட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய திட்டம் ஆனால் நேர்த்தியாக அதை செயல்படுத்திக் காட்டினார்.
“Sadeness” (Part 1) என்ற பெயரில் அவர் வெளியிட்ட சிங்கிள் பாடல் ஒன்று ஆச்சரியத்தக்க விதத்தில் சர்வதேச அளவில் ஹிட் ஆனது. வசிக்கும் ஜெர்மனியிலேயே பெரிய அளவில் இசை ரசிகர்கள் இல்லாத க்ரிட்டுவுக்கு இந்த சர்வதேச ஹிட் அங்கீகாரம் பரவசத்தைக் கொடுத்தது ஆனால் அந்த சர்வதேச ஹிட் கண்டிப்பாக நடக்கும் என்று நம்பினார். இந்த சிங்கிள் ஸாங் உலகளவில் பிரபலமாகும் என்று தன் மனைவியிடம் முன்கூட்டியே தெரிவித்தார். தனிப் பாடல் வெளியாகும் போது அவர் மனைவி ஸான்ட்ரா கணவர் சொன்னதை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தனது கனவு பாரஜக்ட்டுக்கு ஏற்றது இது தான் என முடிவெடுத்து ப்ராஜக்டின் முதல் ஆல்பமான “MCMXC a.D” யில் அந்த சிங்கிள்ஸ் இடம் பெற்றது. 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆல்பம் ஒரு சர்வதேச ஹிட் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை.
அவரது கனவு ப்ராஜக்ட்டின் கீழ் இதுவரை பத்து ஆல்பங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு compilation வகையை சார்ந்தவை. 1990 ஆம் ஆண்டு துவங்கி 2020 ஆம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளில் அந்த ப்ராஜக்ட்டில் அவர் கொண்டு வந்த நேரடி ஆல்பங்களில் எண்ணிக்கை 8.
ஆல்பத்தின் துணைத்தலைப்புகளின் பெயர்ப் பட்டியல் மற்றும் அவை வெளி வந்த ஆண்டுகள் குறித்த விவரம் :
MCMXC a.D – 1990
Cross of Changes – 1993
Le Roi est mort, vive le Roi! – 1996
The Screen Behind the Mirror – 1999
Love Sensuality Devotion : The Greatest Hits
Love Sensuality Devotion : The Remix Collection * 2 albums released on 2001
Voyageur – 2003
A Posteriori – 2006
Seven Lives many Faces – 2008
The Fall of Rebel Angel – 2016
எட்டு ஆல்பங்கள் கொண்டு வந்த போது இடையே அவர் வாழ்க்கையிலும் ஒரு சோகம், மனப்போராட்டம் போன்றவை ஏற்பட்டது அது, முதல் மனைவியுடனான விவாகரத்து. அவர்கள் வசித்த வீட்டில் தான் பாடல்களை பதிவு செய்யும் உயர்தர ஸ்டுடியோவையும் அவர் வடிவமைத்து வைத்திருந்தார். வீட்டையும் இசை ரெக்கார்டிங் ஸ்டுடியோ தொடர்பான உபகரணங்களை மனைவி பெயரில் வாங்கியதால், ஸான்ட்ரா அவற்றுக்கு உரிமை கோரியதால் அவை அனைத்தும் அவர் வசமானது. அதே போன்றதொரு ஸ்டுடியோவை கட்டமைக்க க்ரிட்டுவுக்கு நாளானதால் மணியோ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அவரது இசைப் பயணத்தில் சிறு இடைவெளி ஏற்பட்டது. அனைத்திலிருந்தும் மீண்டு வந்தார்.
அந்த ப்ராஜக்டின் பெயர் : ENIGMA
“Enigma” குறித்து விரிவாகவும், நதியிசைந்த நாட்களில் அது எப்படி எனக்கும் என் சுற்றத்திற்கும் இசைத்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.