சினிமாசெய்திகள்

பாப்ஜன்மா – திரை விமர்சனம்

“பாப்ஜன்மா” போன்ற படங்கள் தான் சினிமா மீதான ஆர்வத்தையும் படைப்பாளிகளின் கற்பனைத் திறன் மீதான ஆச்சரியத்தையும் கூட்டுகிறது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் “ஓர் இயக்குனரால் எப்படி  இந்தளவுக்கு கற்பனை செய்து படம் எடுக்க முடியும் என்றுதான் தோன்றியது. மராத்தி படங்கள் பற்றி எனக்கு பெரிய அறிமுகமெல்லாம் கிடையாது. நண்பர்களின் பரிந்துரையில் ஓரிரு படங்கள் மட்டுமே பார்த்துள்ளேன். பல மொக்கை படங்களுக்கு நடுவில் வித்தியாசமான கதைக்களன்கள் தான் இன்னமும் சினிமாவின் ரசிகனாக இருக்க வைத்துள்ளது. அந்த வகையில் ‘பாப்ஜன்மாவும்’ ஒன்று.

‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்கள் கையாண்ட கதைக் களன் அருமையானது. நடிகர்கள் தேர்வு, படம் எடுத்த விதம் போன்றவை பல இடங்களில் எரிச்சலைக் கிளப்பின. ஆனால் பாப்ஜன்மாவின் வெற்றி அதன் நடிகர்கள் தேர்விலேயே அமைந்து விட்டது. மேலும் இயக்குனருக்கு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்து விடக் கூடாது என்கிற தெளிவான பார்வை இருந்துள்ளது. படத்தின் இயக்குனருக்கு இது முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அந்தளவுக்கு படத்தை ரசிக்கும் விதமாக எடுத்துள்ளார்.

படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல. பல படங்களில் தந்தைக்கும் மகனுக்குமாக, தந்தைக்கும் மகளுக்குமான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது தான். அவற்றை நேரடியான காட்சிகள் மூலம் சொல்லிச் செல்லும் பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப்படம் இயக்குனரின் கற்பனைத் திறன் மூலம் ஒரு காவியமாக்கப் பட்டுள்ளது. படத்தில் நடக்கும் காட்சிகளைப் பார்த்துவிட்டு நிஜ வாழ்வில் இப்படி நடக்குமா என லாஜிக் பார்த்து கேள்வி எழுப்பினால் படம் ஓட்டையாகத் தோன்றும். நான் முன்பே சொல்லி வருவது போல லாஜிக்கெல்லாம் படங்களில் பார்ப்பதில்லை. ஏனெனில் படமே யதார்த்தத்தை மீறிய ஒன்று என்ற அடிப்படை கூடப் புரியாதவர்கள் தான் லாஜிக் பார்த்து விமர்சனம் எழுதுவார்கள். எனக்கு அப்படி எந்தச் சிக்கலான பார்வையும் படங்களின் மீது கிடையாது.

தந்தையை வெறுக்கும் குழந்தைகள் என்பதை சாதாரண கதையாகவே எடுத்திருக்க முடியும். இந்தப் படத்தின் ஹீரோவிற்கு வயது 65 இருக்கக்கூடும். அவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் ஒன்று. மகள் ஒன்று. ரா அமைப்பின் சீக்ரெட் ஏஜென்டாக இருந்த ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கூட, தான் ஓர் உளவு அமைப்பாளி எனத்  தெரியாத வகையில் பார்த்துக் கொண்டவர். தமது இளமைப்பருவத்தில் அவர் மூலம் கசப்பான அனுபவங்களைப் பெற்ற பிள்ளைகள் அம்மாவின் இறப்பிற்குப் பின் அவரை ஒருமுறை கூடப் பார்க்க விரும்பவில்லை. அவரது கடுமையான போக்கு, அதிகாரத்தால் வெறுத்துப் போன பிள்ளைகள் அவர்கள்!

சச்சின் ஹெடேகர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் கதைக்கு ஏற்றாற்போல நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். Take Care Good Night படத்திலும் தந்தை ரோல் தான். ஆனால் மனிதன் கதைக்கு ஏற்றார்போல திறமையை வெளிப்படுத்துகிறார். முரம்பா என்ற படத்திலும் தந்தை ரோல் தானாம். படம் பார்க்கவில்லை. நல்ல நடிகர். குணச்சித்திர வேடங்களுக்கு ஏற்ற முகம் சச்சினடமுள்ளது.

தனக்கு Brain Cancer என்று தெரிந்த பிறகே, தனது பிள்ளைகளை இறப்பதற்கு முன்பாக பார்த்துவிட ஆசைப்படுகிறார். அதுவரையிலும் அவர், அவரது வேலைக்காரன், ஒரு நாய் என வாழ்க்கை செல்கிறது. மனைவியின் இறப்பிற்குப் பின் ஒரு தடவை கூட தந்தையை வந்து பார்க்காத பிள்ளைகள். தான் இறந்துவிட்டதாகத் தன் பிள்ளைகளுக்குத் தெரிவித்து விடு என வேலைக்காரனிடம் சொல்கிறார். ஓர் இறப்பு டிராமா…. அதன் பிறகான காட்சிகளில் தன் பிள்ளைகள் தன் மீது வைத்திருக்கும் எண்ணங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே கேமரா வைத்து பக்கத்து வீட்டிலிருந்து  பார்க்கிறார்.

அம்மாவைப் பற்றி புகழ்ந்து பேசும் குழந்தைகள் தந்தையின் இறப்பு தங்களுக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை போன்ற கனங்கள் சற்று கனமானவைதான். அம்மாவின் இறப்பின் போதே தாங்கள் அனாதையாகி விட்டதாகவும் தந்தையின் இறப்பு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பிள்ளைகள் சொல்வதை வீடியோ கேமரா மூலம் தந்தை பார்க்கும் காட்சிகள்…. அவர்களிடம் நற்பெயர் எடுத்துவிட்டு உலகை விட்டுச் செல்ல நினைக்கும் தந்தை அதை நிறைவேற்ற முடிந்ததா என்பதே படம். இந்தப் படத்தின் பலமே இத்தனை வலுவான சோகமான கதையை படு பயங்கர சோகமாக மாற்றி, படத்தை மிக மெதுவாகத் தான் பொதுவாக இயக்குனர்கள் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவை அனைத்தையும் மெல்லிய நகைச்சுவை உணர்வையும் கலந்து  கொடுத்துள்ளார் இந்தப்படத்தின் இயக்குனர். நமக்குள் சில காட்சிகளில் ஒருவிதமான பாச உணர்வை ஏற்படுத்துகிறார். அனைத்துப் பாத்திரங்களின் நடிப்பும் அருமை.

 தன்னை பார்க்கவே விரும்பாத பிள்ளைகளை, தானே ஒருவன் இறந்ததாகக் காண்பித்து (நம்ப வைத்து), தன் இறப்பிற்காவாவது பிள்ளைகளை வீட்டிற்கு  வரவைக்க தந்தை போடும் நாடகமும், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுகிறாரா என்பதுதான் கதை.

(Visited 153 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close