நதியிசைந்த நாட்கள் – 2 : அத்தியாயம் – 6 : Sadeness
“Cross of Changes”
இந்த ஆல்பத்தில் மொத்தம் 9 தலைப்புகளின் இசைக் கோர்ப்புகள் (பாடல் என்று சொல்ல முடியாததற்கு காரணம் இசையே பிரதானமானதாக இருக்கும்)
“Second Chapter” இது இரண்டேகால் நிமிஷ இசைக் கோர்ப்பு… தோரயமாக 30 வருடங்களுக்கு முன்பாக இசையமைத்தது… ஒலித்தரம், அலை பாய்வது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் இசை… இப்படி சகலமும் முதல் இசைக் கலவையிலேயே மிரட்டும். MC யின் இசை பாணி தனித்துவமானது எடுத்த எடுப்பில் இசையின் பிரும்மாண்டத்தை நிறைய வாத்தியக் கருவிகளின் துணையுடன் நமக்கு படைக்க மாட்டார். அமிர்தத்தை ஒவ்வொரு துளியாக பருகும் போது நமக்கொரு சுவை ஈர்ப்பு கிட்டுமே அப்படித்தான் ஒவ்வொரு இசைக் கருவியாக தம்முடைய படைப்பில் புகுத்துவார்.
“The Eyes of Truth” முதலில் குறிப்பிட்டதன் தொடர்ச்சி போல் இந்த இசைக் கோர்ப்பு… இதில் மட்டுமல்ல இவர் ஆல்பமே இந்தத் தன்மையுடன் தான் காணப்படும். இந்த பிரத்தியேக இசைக் கலவை நம் இந்திய திரை இசையில் பல இசை ஜாம்பாவான்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் கூச்சமின்றி நகலெடுக்கப்பட்டது. 4.07 முதல் 5.15 வரை MC யின் மிரட்டல் இசையை கூர்ந்து அவதானியுங்கள். இரைச்சலின்றி, மிகத் துல்லியமான பரவசத்தைத் தரும் எக்ஸ்ட்ரா பேஸ் இசை நம்மைக் கட்டிப் போடும். நல்ல ஹெட்செட் அல்லது சிறந்த மியூஸிக் சிஸ்டத்தில் கேட்டு அனுபவியுங்கள். சற்று நீண்ட ஏழேகால் நிமிஷத்திற்கு நம்மை வசியப்படுத்தும் இசை இது.

Return to Innocence இசைக்காக, வரிகளுக்காக, காட்சிப்படுத்திய விதத்திற்காக என சகலத்திற்கும் நாம் மெய் வசப்பட்டு கொண்டாடும் பாடல் இது! Reverse என்ற முறையில் பாடல் படமாக்கப்பட்டிருக்கும். இதே பாணியில் “வாயை மூடி சும்மா இரு டா என்று முகமூடி தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். நண்பர்கள் புடை சூழ எந்தவொரு கவலையுமின்றி கை கோர்த்து மிகப் பெரியதொரு மலைக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் ஓடி ஆடிக் களிக்கும் உணர்வை “மனிதர்களுக்கு” இந்தப் பாடல் தரும். கடந்து வந்த காலம்… வாழ்க்கை… அது ரீவைண்ட் ஆனால்? குறிப்பாக நம்முடைய சிறு வயது innocence மீண்டும் நம் வசமானால்? அந்த கருத்தியலைத் தான் பாடலின் வரிகளும் காட்சியமைப்பும் நுட்பமாக நமக்குள் விதைக்கிறது
I Love You I’ll Kill You பொதுவாக ஆங்கிலப் பாடல்களில் இந்திய இசை மரபு இசையில் பிரயோகிக்கப்படும் புல்லாங்குழல், வயலின் போன்ற வாத்தியங்களை உபயோகிப்பார்கள் ஆனால் தபேலா? அதிகம் புழங்கியதில்லை… இந்தப் பாடலில் தபேலாவின் அரசாட்சி தான்! அதே போல் இவரின் பாடலில் இடம் பெறும் வரிகள் ராகமாக இல்லாது பின்னணியில் இசை ஒலிக்க தனி வசனமாகவே வெளிப்படும். MC இசையில் பெரும்பான்மையாக இந்தப் பாணியை மட்டுமே கடைபிடிப்பவர் சொற்ப அளவிலேயே ராகத்வனி பயன்பாடில் இருந்திருக்கிறார்! 4.41 முதல் 6.45 வரை இசை மழை… எலெக்ட்ரிக் கிடாரின் இசை நவ ரசத்தையும் வெளிப்படுத்துவதில் MC வெற்றிக் கொடியை நாட்டி இருப்பார்.
Sacrifice turns to revenge and believe me
You’ll see the face who’ll say,
I love you, I’ll kill you,
But I’ll love you forever
இந்த வரிகளும் வசனமாய் தான் ஒலிக்கும், பின்னணியில் மெல்லிய இசை… வரிகளுக்குப் பின் மீண்டும் உயர்ந்த ஒலித்தரத்துடன் தபேலாவின் ராஜாங்கம்…
சுமார் ஒன்பது நிமிடங்கள் நம்மை கட்டிப்போடும் இசை இது! இந்தப் பாடலும் நம் உள்ளூர் இசைப் பிரபலங்களால் அதிகளவில் உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது
Silent Warrior இது வழமையான ஆங்கில பாப் இசைப் பாடல் பாணியில் இசைக்கப்பட்டது அதை ஈடு கட்ட அடி நாதமான தாளக்கட்டு ஒரு mystry உணர்வையும், உயர்தர ஒலிப்பதிவு. ஆறு நிமிடங்கள் ஓடுவது என்ற ஆங்கில பாப் இசை நடைமுறைப் பாடல் இது! ஹம்மிங்கும் ஒரு ஈர்ப்பு சக்தியாக இப்பாடலில் வெளிப்படும்.
The Dream of the Dolphin பியானோ வாத்தியக் கருவி கொண்டு கட்டமைக்கப்பட்ட வசனங்கள் கொண்ட சிறிய இசைக் கோர்ப்பு இது. ஆல்பத்தில் உள்ள அடுத்த இசைக் கோர்ப்புக்கான முன்னூட்டம் போல் இந்த இசை இருக்கும். இரண்டே முக்கால் கால அளவு கொண்ட இசைக் கலவை.
Age of Loneliness பரவசப்படுத்தும் இசை, பாடல் முழுதும் தொடர்ந்து பயணிக்கும் வசியப்படுத்தும் ஆற்றல் கொண்ட ரிதமிக் பீட்… இடை இடையே வசனங்கள்… இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த இசையை நம்மவர்கள் விட்டு வைப்பார்களா? கேட்கும் போது நீங்களே resemblance, inspiration?! என்ற நம்மவர்களின் நகல் ஜாலத்தை கண்டு கொள்ளுங்கள்… சுமார் ஐந்தரை நிமிடங்கள் ஒலிக்கும் இசை இது!
Came out from the deep ஆழமான கலங்க வைக்கும் அற்புத வரிகள், typical western classic influence கொண்ட பாடல். இந்த பாணியில் நிறைய ஆங்கிலப் பாடல்களை நாம் கேட்டிருப்போம் ஆனால் இசைக் கோர்ப்பிலும் தாளக் கட்டிலும் மெல்லிய வித்தியாசத்தை MC வெளிக் கொணர்ந்து இருப்பார்… வரிகளை நேசிப்பவர்களுக்கான பாடல் சுமார் ஐந்து நிமிடங்கள் ஒலிக்கும்!
The Cross of Changes அல்பத்தை நிறைவு செய்ய ஒரு anthem music போன்ற தன்மையுடைய வசனங்கள் அடங்கிய சுமார் இரண்டரை நிமிட இசை இது!
ஆங்கில பாப் இசைப் பாடல்கள் வெளியிடும் எத்தனையோ இசைக் கலைஞர்கள் ஜெகத்தில் இருக்க ஏன் MC யை மட்டும் குறிப்பிட்டு எழுதுகிறேன்?
“Trend setter” என்று ஒரு பதத்தை அனைவரும் சொல்வார்கள். இந்தியத் திரை இசையைப் பொறுத்தவரை சம காலத்தில் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு trend setter. தமிழ் திரை இசையில் இளையராஜா trend setter ஆகி தம் ராஜாங்கத்தை உருவாக்கி இருந்தபோது 90 களில் தமிழ் திரை இசைத் துறைக்குள் அறிமுகமாகி தனக்கென ஒரு இசை பாணியை உருவாக்கி ரஹ்மான் முத்திரை பதித்தார். இந்தியா தாண்டி உலகம் முழுக்க அவரின் இசை ஆளுமை இன்று வரை தொய்வின்றி நீடிக்கிறது. 90 களுக்குப் பிறகு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் அனைவரும் இன்று வரை அவர் இசை மேடையைத் தான் நகலெடுக்கிறார்கள். அவர் தற்போது பரீட்சார்த்த முறையில் புத்துப் புது பாணியில் முக்கியமாக புதிய இசை சப்தங்களைத் தன் இசையமைப்பில் பிரயோகிக்க முயற்சிக்கிறார் ஆனால் பிறர் அவர் 90 களில் உருவாக்கிய இசை பாணியைத் தான் சளைக்காமல் பின்பற்றுகிறார்கள்.
MC இந்த சங்கதியை உலகளவில் கொண்டு வந்தார். அவரின் Enigma series க்கு முன்பு வரை இருந்த ஆங்கிலப் பாப் இசையின் வடிவத்தை, பாடல்களின் பின்னணியில் ஒலிக்கும் தாள கட்டு, முதல் வைத்திய இசைக்கருவிகளை சரியான இடத்தில் பிரயோகிப்பது, ஒலித்தரம் என சகலத்தையும் அவர் கடைபிடித்ததைத் தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள்.
திருச்சியில் இருந்த வரை MC என்றால் எனக்கு “Cross of changes” மட்டுமே! 2004 ஆம் ஆண்டு மெட்ராஸ் குடிவந்துவிட்டேன். 2006 ஆம் ஆண்டு மெட்ராஸில் உள்ள connexions என்ற ஸ்தாபனம் என் வாடிக்கையாளர்களள் பட்டியலில் இணைந்தது. அதன் உரிமையாளரின் பூர்வீகமும் என்னுடைய பூர்வீகமும் ஒன்று! அவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கத் துவங்கினேன். டிஸ்கவுண்ட் தருவார். என் நண்பர்களுக்கும் பரிந்துரைக்க அவர்களும் சகாய விலையில் பொருட்களை அங்கு சென்று வாங்கினார்கள்.
அண்ணா நகர் கிளையில் பணியாற்றும் அவர் கடை ஊழியர் எனக்கு டிகிரி தோஸ்த் ஆனார். அவரிடம் MC, Enigma பற்றியெல்லாம் பேசினேன். குறிப்பாக பாலாவின் கேஸட்டில் கேட்ட பாடலின் பீட்டை டி.ராஜேந்தர் போல் வாயால் ஒலி எழுப்பி தெரியப்படுத்தினேன். மேலும் நெடுங்காலமாக என் மனதுள் இருந்த விஷயங்களா அந்த பீட் ஒலிக்கும் ஹிந்திப்பாடல் “Bharo Maang Meri Bharo…” (படம் : அக்ஷய் குமார் & மம்தா குல்கர்னி நடித்த “sabse bada kiladi”, “எனை காணவில்லையே நேற்றோடு…” (தமிழ்த் திரைப்படம் : “காதல் தேசம்” “தென்றலைக் கண்டு கொள்ள…” (தமிழ்த் திரைப்படம் : “நிலவே முகம் காட்டு” போன்ற பாடல்கள் அந்த மியூஸிக்கை நகல் எடுத்தது என்றேன்.
தோஸ்த் என்னைப் பார்த்து சிரித்தபடி “நாளைக்கு வாங்க ஜி” என்றார்.
மறு நாள் சென்றேன். என் கையில் ஒரிஜினல் ஸிடி தந்தார். ஆல்பத்தின் பெயர் : MCMXC a.D. இதுல Sadeness கேளுங்க என்றார். பில் பே செய்துவிட்டு மேலே உள்ள பிளாஸ்டிக் கவரைப் பிரித்து கவரை ஓபன் செய்து உள்ளே இருந்த ஸிடியை எடுத்தேன். அவரிடம் தந்து “அந்தப் பாட்டை கொஞ்சம் ப்ளே பண்ணுங்க ப்ளீஸ் ஜி” என்றேன். செய்தார்.
1993 ஆம் வருடத்தில் இருந்து தேடியதை 2006 ஆம் ஆண்டு கண்டெடுத்தேன்.
“Sadeness” என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது…
உயர்ந்த ஒலித்தரத்தில் sadeness கேட்க இக்கொழுவியை சொடுக்குங்கள்
டிஸ்க் : அதன் பிறகு நான்கு Enigma series ஒரிஜினல் ஆல்பங்களின் சிடிக்களை வாங்கிக் கேட்டேன். தற்போது அனைத்திற்கும் யூ டியூப் தான்!