சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

புரட்சிவீரர் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தநாள் – ஜூன் 11

பாரத நாட்டின் விடுதலை என்பது பல்வேறு தியாகிகள் தங்களையே ஆகுதியாக்கி அதனால் கிடைத்த பலன். அப்படியான தியாகிகளின் வரிசையில் முக்கியமான ராம் பிரசாத் பிஸ்மில் அவர்களின் பிறந்ததினம் இன்று. தன் கையில் ஏந்திய துப்பாக்கியின் மூலமாகவும், பேனா முனையில் இருந்து வெளியாகும் கவிதைகள் மூலமாகவும் ஒரே நேரத்தில் ஆங்கிலேயர்களின் நிம்மதியைக் குலைத்த வீரர் அவர். 

 இன்றய உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் முரளிதர் – மூல்மதி தம்பதியரின் மகனாக 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர். தன் தந்தையிடம் ஹிந்தி மொழியையும் அதனைத் தொடர்ந்து ஒரு இஸ்லாமிய மதகுருவிடம் உருது மொழியையும் ராம் பிரசாத் கற்றுத் தேர்ந்தார். அன்றய காலகட்டத்தில் மிகவும் பிரசித்தியோடு இருந்த ஆரியசமாஜத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஹிந்து ஞானமரபுதான் அன்னியர்களை எதிர்த்துப் போரிடவேண்டும்  உத்வேகத்தை மக்களுக்கு எப்போதும் அளித்து வந்துள்ளது. ஆர்யா சமாஜத்தில் இருந்த ஸ்வாமி சோமதேவ் என்பவர்தான் ராம் பிரசாத்தின் வழிகாட்டியாக இருந்தார். 

ராம்பிரசாத் மாத்ரிவேதி ( தாய்நாட்டின் பலிபீடம் ) என்ற அமைப்பை உருவாக்கி இருந்தார். அப்போது ஸ்வாமி சோமதேவ் ராம்பிரசாத்தை கென்டாலால் தீக்ஷித் என்ற பள்ளி ஆசிரியரோடு தொடர்பு கொள்ள வலியுறுத்தினார். கென்லாலால் தீக்ஷித் சிவாஜி சமிதி என்ற இயக்கத்தை உருவாக்கி தேசபக்தர்களை தயாரித்துக் கொண்டு இருந்தார். இருவரும் இணைந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்தனர். 

தனது மைன்புரியின் உறுதிமொழி என்ற கவிதையோடு நாட்டுமக்களுக்கு ஒரு செய்தி என்ற துண்டறிக்கையைத் தயாரித்து ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும் விநியோகித்தனர். ஆயுதம் வாங்க பணம் வேண்டும், அந்தப் பணத்தை ஆங்கில அரசிடமே கொள்ளையடிப்பது என்று வீரர்கள் தீர்மானித்து, மூன்று முறை ஆங்கில ஆட்சியாளர்களின் கருவூலத்தைக் கொள்ளை அடித்தனர். டெல்லிக்கு ஆக்ராவிற்கும் நடுவே கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது காவல்துறையோடு பெரும் சண்டை நடந்தது. ராம்பிரசாத் யமுனா நதியில் குதித்தார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்க, நதியின் உள்ளே நீந்தித் தப்பித்தது ராம்பிரசாத் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். கென்டாலால் தீக்ஷித் ஆக்ரா கோட்டையில் சிறைவைக்கப் பட்டார். அவரும் சிறையில் இருந்து துணிகரமாகத் தப்பித்து தலைமறைவானார். மைன்புரி சதிவழக்கில் எல்லாக் குற்றவாளிகளும் விடுதலையானார். ராம்பிரசாத்தும் கென்லாலால் தீக்ஷித்தும்காணாமல் போய் விட்டார்கள் என்று நீதிபதி தீர்ப்பு எழுதினார். 

இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராம்பிரசாத் பல்வேறு நூல்களை எழுதினார். வங்காள மொழியில் இருந்தும் ஆங்கில மொழியில் இருந்தும் புத்தகங்களை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தார். ராம், பிஸ்மில், அக்யாத் என்று பல்வேறு புனைபெயர்களை அவர் பயன்படுத்தினார். மைன்புரி சதிவழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ராம்பிரசாத் ஷாஜஹான்பூர் திரும்பினார். எந்த அரசு விரோத செயல்களிலும் தான் ஈடுபடமாட்டேன் என்று அவர் காவல்துறையிடம் உறுதிமொழி அளித்தார். அதை அரசும் நம்பவில்லை, ராம்பிரசாத்தும் உறுதிமொழிக்கு ஏற்ப நடக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. 

1921ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராம்பிரசாத் தன் நண்பர்களோடு கலந்துகொண்டார். அந்த மாநாட்டில்தான் மௌலானா ஹஸ்ரத் மொஹைனி முன்மொழிந்த பூர்ண ஸ்வராஜ்யம் என்ற கோரிக்கை முதல் முதலாக நிறைவேற்றப்பட்டது. காந்தியின் எதிர்ப்பு இளைஞர்களின் ஆவேசத்தின் முன் பயனில்லாமல் போனது. மாநாடு முடிந்து ஷாஜஹான்பூர் திரும்பிய ராம்பிரசாத் இளைஞர்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். அஹிம்சை முறையில் விடுதலை அடைய முடியாது என்பது அவரின் எண்ணமாக இருந்தது. 

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால் சவுரிசவுராவில் நடைபெற்ற வன்முறையால் நாடு இன்னும் அஹிம்சை முறைக்குத் தயாராகவில்லை என்று கூறி காந்தி இயக்கத்தை ஒத்தி வைத்தார். 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்கள் எதிர்ப்பையும் மீறி காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் அந்த ஆண்டுத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பதவி விலகினார். சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு போன்றவர்கள் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை உருவாக்கினார்கள். காந்தியின் வழி பயன்தராது, ஆயுதம் தாங்கிய போராட்டம்தான் சரி என்று முடிவுக்கு இளைஞர்கள் வந்தனர். 

லாலா ஹர்தயாள் வழிகாட்ட, சச்சிந்திரநாத் சன்யால், ஜடுகோபால் முகர்ஜீ ஆகியோரின் உதவியோடு ராம்பிரசாத் புதிய இயக்கம் ஒன்றை உருவாக்க அதன் சட்டதிட்டங்களை வடிவமைத்தார். ஹிந்துஸ்தான் ரிபப்லிக் அசோசியேஷன் உருவானது. இதில் கிளைத்து எழுந்தவர்கள்தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத், ஜதின்தாஸ் போன்ற போராளிகள். 

ஆயுதம் வாங்க பணம் வேண்டும், பணம் திரட்டும் வழியோ ஏற்கனவே தெரியும். ஆங்கில அரசு பெரும் பணத்தை லக்னோ நகருக்கு கொண்டுசெல்லும் தகவல் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக்  கிடைத்தது. ககோரி பகுதியில் ரயிலை நிறுத்தி கஜானாவை கொள்ளை அடிக்க முடிவானது. மன்மதநாத் குப்தா, அஷ்பாகுல்லா கான் ஆகியோரின் துணையோடு பணம் கொள்ளையடிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விடுதலை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். 

ககோரி சதிவழக்கு ஆரம்பமானது. சசீந்திரநாத் சன்யால், சசீந்திரநாத் பக்ஷி ஆகியோர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். மன்மதநாத் குப்தாவிற்கு பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, என்று பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டது. ராம்பிரசாத் பிஸ்மில், தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லா கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மேல்முறையீடுகளிலும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. 

ராம்பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையிலும், ரோஷன்சிங் பிரயாக்ராஜ் சிறையிலும் அஷ்பாகுல்லா கான் ஃபைஸாபாத் சிறையிலும் 1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் தூக்கிலிடப் பட்டார்கள். ராஜேந்திரநாத் லஹரி இரண்டுநாட்களுக்கு முன்பாக கோண்டா சிறையில் தூக்கிலிடப்பட்டார். 

முப்பது ஆண்டுகளே வாழ்ந்த ராம்பிரசாத் பிஸ்மில் பாரத நாட்டில் வரலாற்றில் ஒளிவிடும் விண்மீனாக விளங்குகிறார். மகத்தான தியாகியின் நினைவுக்கு இன்று நாம் அஞ்சலி செலுத்துவோம். 

(Visited 105 times, 1 visits today)
+2
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close