பாதுகாப்புச் செலவுகள் செலவல்ல, முதலீடு
ஞாயிறன்று தில்லியில் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தில்லியின் யாரார்-எவரெவர் (who’s who) என்று அறியப்படும் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். முக்கியமான அழைப்பாளர் நம் ராணுவத்தின் துணைத்தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சந்தி பிரசாத் மொகந்தி. நிகழ்ச்சியில் பேசிய பலரும் பிரித்தானிய எச்சங்களை வழி மொழிந்து ”ரொட்டியா துப்பாக்கியா என்ற கேள்விக்கு ரொட்டியை விட்டுவிட்டு துப்பாக்கிக்கு முக்கியத்துவம் கொடுத்தது நம் அரசு. அமைதிக்காகப் பாடுபட்ட நாடு இந்தியா. அதைத் தொடர வேண்டிய நாம் ஆயுதம் தூக்குவதே தவறு. இதில் மேலும் மேலும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது நல்லதல்ல”, என்று பேசினர்.
இவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் பேசிய ராணுவத் துணைத்தளபதி மொஹந்தி “ராணுவம், தேசப்பாதுகாப்புக்கான செலவுகள் முதலீடுதான். நம் நாட்டைப் பாதுகாக்கச் செய்யப்படும் செலவுகளால் தான் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறோம். இல்லை எனில் தோக்லம், கல்வான் ஆகிய இடங்களில் நடந்த சண்டைகளில் தோற்று மேலும் இடங்களை இழந்திருப்போம்.
திபெத் பலமான ராணுவத்துடன் இருந்திருந்தால் இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்காது. ஆஃப்கனிஸ்தானத்தில் பலமான ராணுவமமும் அமைதியும் இருந்திருந்தால் இன்று அந்த தேசம் செழிப்பாக இருந்திருக்கும். நாம் தேவைப்பட்ட ராணுவ முதலீடுகள் செய்து பலமாக இல்லாது போயிருந்தால் கார்கிலை இழந்திருப்போம். ஜம்மு கஷ்மீரத்தில் குழப்பமும் கொந்தளிப்புமே இருந்திருக்கும். வடகிழக்கிலும் கலக்கமும் கலகமும் தாண்டவமாடியிருக்கும்.
நாட்டின் அமைதிக்கு வெளிநாட்டுத் தாக்குதல்களை முறியடிப்பது மட்டுமல்ல, உள்நாட்டுப் பாதுகாப்பும் மிக முக்கியமானது. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் நமது பாதுகாப்புப் படைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அந்தப் பலம் இல்லாது போயிருந்தால் நக்சலைட்டுகளுக்கு மிகவும் கொண்டாட்டமாகப் போயிருக்கும். நாடு அமைதியிழந்து தவித்திருக்கும்.
ஆகவே பாதுகாப்புக்கான முதலீடுகள் மிகவும் அவசியமானவை. படைகள் பலமாகவும் தயாராகவும் எந்நேரமும் இருந்தால் மட்டுமே அமைதி சாத்தியப்படும். பலமில்லாதவர்களுக்கு அமைதி சாத்தியப்படாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வது நல்லது.”
இவ்வாறு பாரத ராணுவத் துணைத் தளபதி மொஹந்தி பேசினார்.