புதுடெல்லி : தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாபில் , காங்கிரஸ்தான் கூட்டணிக்குச் சம்மதிக்கவில்லை என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அவர் பேசுகையில், “டெல்லியில் காங்கிரஸ் தனியாகத் தேர்தலை சந்திக்கத்தான் ஆர்வமாக இருக்கிறது. அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பதாக தெரிகிறது, நாங்கள் விரும்பியும் அவர்கள் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை” என்று கூறினார்.
அவர் மேலும், “காங்கிரஸுடன் எங்களுக்கு பல்வேறு விஷயங்களில் முரண் இருந்தாலும், நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படவே விரும்பினோம். தற்போதைய சூழலில் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாதான். அவர்கள் பதவியிலிருந்து இறக்கப்பட வேண்டும்.
” இந்த அரசை வீழ்த்த என்ன வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். மற்றப்படி காங்கிரஸ் மீது எங்களுக்கு எந்தப் பாசமும் இல்லை” என்றார்.
சமீபத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்து ‘மெகா கூட்டணி’ குறித்து பேசினர். ஆனாலும், காங்கிரஸ் தரப்பு கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இறுதியாக கெஜ்ரிவால், “காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துப் போட்டியிட்டு எதிர்கட்சிகளின் கரத்தை வலுவிழக்கச் செய்து வருகிறார்கள்” என்று முடித்தார்.
உண்மையைச் சொல்லப் போனால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க வெட்கப்படவேண்டிய கட்சியாக ஆம் ஆத்மி இருந்திருக்க வேண்டும். ஏனெனில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியை கடந்த லோக்சபா தேர்தலில் பெற்றதற்கு ஆதாரமில்லாமலேயே அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வாசித்தவர் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் தன்னை டெல்லியின் நிரந்தர முதல்வராக்க காங்கிரசை உபயோகிக்கப்பார்க்கிறார் என்பதால்தான் காங்கிரஸ் கூட்டணிக்கு பிடிகொடுக்கவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோடியை ஒன்று கூடி எதிர்க்கிறோம் என்று சொன்னாலும் பல மாநிலங்களில் காங்கிரசும் இக்கட்சிகளும் இணைந்து போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, டெல்லியில் மொத்தம் இருக்கும் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.