சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

கார்கில் போரின் வெற்றிவிழா நாள் – ஜூலை 26

மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரித்தபின்னும் ஹிந்துஸ்தானத்தின் வளம் பாகிஸ்தானின் கண்ணை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. தனிக்குடித்தனம் போன பிறகும் தங்கள் நாடு வளமாக இருக்கவேண்டும் என்று எண்ணாமல், பாரதத்தை அழிப்பதிலேயே பாகிஸ்தான் தனது சக்தியை எல்லாம் செலவிட்டுக் கொண்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்த உடனேயே காஷ்மீரை கைப்பற்ற முயற்சி செய்தது, அதன் பிறகு 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் தேவையே இல்லாமல் பாரதத்தின் மீது படையெடுத்தது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானை இரண்டு துண்டாக்கி பங்களாதேஷ் என்ற நாடு உருவாக பாரதம் உதவி செய்தது. நேரடிப் போரில் வெற்றி பெறமுடியாது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்ட பாகிஸ்தான் பாரதம் முழுவதும் பிரிவினைவாதிகளையும், தீவிரவாதிகளையும் ஊக்குவித்தும், கள்ளத்தனமாக பாரத நாட்டின் செலவாணியை அச்சிட்டும் மறைமுகப் போரை தொடர்ந்து நடத்தி வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி பாக்கிஸ்தான் முயற்சி செய்த மற்றுமொரு தவறான சாகச நடவடிக்கைதான் கார்கில் போர்.

அன்றய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பாகிஸ்தானோடு நல்லுறவை உறுதி செய்யும் விதமாக அன்றய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உடன் இணைந்து 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்து இட்டார். கையெழுத்திட்ட மையின் ஈரம் காய்வதற்கு முன்னால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவைத் துண்டாடும் தனது முயற்சியைத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டில் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து பாரதத்தோடு நேரடிப் போரில் வெற்றி அடைய முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட பாகிஸ்தான் மறைமுகப் போரை முன்னெடுத்துக் கொண்டே இருந்தது. பாரதம் முழுவதும் பல்வேறு குழுக்களைத் தூண்டி விட்டு இந்த நாட்டின் அமைதியைக் குலைத்து, பொருளாதாரத்தை நாசமாக வேண்டும் என்பது மட்டும் தான் பாகிஸ்தானின் குறிக்கோள்.

பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொள்ள, வாஜ்பாய் அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போன நேரம் அது. காபந்து அரசாக வாஜ்பாய் அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் தாக்கினால் பாரத அரசு அதனை முழுமூச்சாக எதிர்கொள்ளாது, காஷ்மீரை முழுவதுமாக வெற்றி கொள்ள இதுதான் சரியான நேரம் என்று பாகிஸ்தான் முடிவு செய்தது.

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதியையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை கார்கில் பகுதியில் துண்டாடிவிட்டால் காஷ்மீர் மாநிலம் முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடலாம் என்று திட்டம் தீட்டி பாகிஸ்தான் பதர் திட்டம் என்று பெயரிட்டு 18,000 அடி உயரத்தில் உள்ள சாலையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1999 ஆம் ஆண்டு மே மாதத்தில் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தை இந்திய ராணுவத்திடம் தெரிவித்தனர். மே 5ஆம் தேதி ஐந்து பாரத ராணுவ வீரர்களைச் சிறைபிடித்து பாகிஸ்தான் அவர்களை சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக சித்திரவதை செய்து கொலை செய்தது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் பாரதம் தனது படைகளை காஷ்மீரில் குவித்தது. மே 27ஆம் நாள் நாடு மிக் 21, மிக் 27 ரக போர்விமானங்களில் தலா ஒன்றை இழந்தது. விமானப்படை அதிகாரி நசிகேசஸ் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்.

இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது உள்ளூர் போராளிகளின் போராட்டம் மட்டுமே என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டே இருந்தது. ஜூன் 11ஆம் நாள் அன்றய பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி முஷாரப் சீனாவில் இருந்து துணைத் தளபதி ஆசிம்கானோடு நடத்திய தொலைபேசி உரையாடலை இந்தியா வெளியிட்டது. இதன் மூலம் இந்தப் போரை நடத்துவது பாகிஸ்தான் ராணுவம் என்பது உறுதியானது.

பாரதம் மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால் அன்றய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் பாகிஸ்தான் அரசை தனது ராணுவத்தை பின்வாங்கச் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

ஜூன் 29ஆம் நாள் 5060 என்ற மலை உச்சியையும் 5100 என்ற மலைச் சிகரத்தையும் பாரத ராணுவம் கைப்பற்றியது. பதினோரு மணி நேரம் நடந்த தாக்குதலுக்குப் பிறகு புலிமலை சிகரத்தை பாரதம் கைப்பற்றியது.

பாரத கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கும் அளவில் நிலை கொண்டன. பாகிஸ்தானின் கடல்வழி வர்த்தகப் பாதை தடுக்கப்பட்டது. பின்னர் ஒரு நேரத்தில் அன்று பாகிஸ்தானிடம் ஆறு நாட்களுக்கான எரிபொருளே இருந்தது என்று நவாஸ் ஷெரிப் கூறினார்.

ஜூலை 5ஆம் நாள் ட்ராஸ் பகுதியை பாரத ராணுவம் தன்வசமாகியது. தோல்வி உறுதி என்பதை அறிந்த பாகிஸ்தான் பிரதமர் தனது ராணுவத்தை பின்வாங்குமாறு உத்தரவிட்டார். ஜூலை 14ஆம் நாள் பிரதமர் வாஜ்பாய் கார்கில் போரில் வெற்றி அடைந்து விட்டோம் என்று அறிவித்தார். ஜூலை 26ஆம் நாள் முழுமையான வெற்றியாக பாரத மண்ணில் இருந்து பாகிஸ்தானை முழுவதுமாக துடைத்து எடுத்து பாரத ராணுவம் தனது வீரத்தையும் தியாகத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

தாயகம் காக்கும் தன்னலமற்ற சேவையில் 527 வீரர்கள் தங்கள் நல்லுயிரை ஈந்தனர். 1,363 வீரர்கள் காயமடைந்தனர். நாட்டின் மிக உயரிய ராணுவ விருதான பரமவீர் சக்ரா விருது யோகேந்திரசிங் யாதவ், மனோஜ் குமார் பாண்டே, விக்ரம் பத்ரா, சஞ்சய் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அனுஜ் நய்யார், ராகேஷ் சிங் அதிகாரி ஆகியோர் மஹாவீர் சக்ரா விருதைப் பெற்றனர்.

தேசமெங்கும் ஜூலை 26 கார்கில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று மாலை ஆறு மணி அளவில் வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் பலிதானியான வீரர்களுக்கு தங்கள் அஞ்சலியை செலுத்துவது வழக்கம்.

நாட்டின் காவல் அரணாக செயல்படும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுவோம். அதற்கு நன்றி செலுத்துவோம்.

(Visited 84 times, 1 visits today)
+2
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close