நாக்பூர் : 2020 ஆம் ஆண்டுக்குள், கங்கை ஆறு 100 சதவீதம் தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய நிதின் கட்கரி, நமமி கங்கா என்ற பெயரில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் கடந்த 2015 மே 13-ம்தேதி தொடங்கியது. இதன்படி கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் உள்ள அசுத்தங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
கங்கையை தூய்மைப்படுத்த ரூ. 26 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாதத்திற்குள்ளாக 30 முதல் 40 சதவீத திட்டங்கள் நிறைவு பெறும்.
அவ்வகையில் 2020 மார்ச் மாதத்திற்குள் 100 சதவீத திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு கங்கை ஆறு முழுவதுமாக தூய்மைப்படுத்தப்படும். கங்கை மட்டுமல்ல, சுமார் 40 கிளை ஆறுகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.
யமுனை ஆற்றை தூய்மைப்படுத்த ரூ. 800 கோடி செலவில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கங்கையை சுகாதாரமாக்கும் நமது கனவு நனவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.