புதுமைப்பித்தன் பிறந்தநாள் – ஏப்ரல் 25
தமிழ் இலக்கிய உலகில் சிறுகதைகளின் பிதாமகனாகத் திகழும் சோ விருத்தாச்சலம் என்ற புதுமைப்பித்தனின் பிறந்தநாள் இன்று. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தந்தை தனது பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. புதுமைப்பித்தன் பிறந்தது கடலூர் மாவட்டத்தில், கல்வி பயின்றது செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில். பணி நிறைவடைந்து தந்தை மீண்டும் நெல்லை திரும்பியதால் புதுமைப்பித்தனும் நெல்லை ஹிந்து கல்லூரியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். தனது 26ஆம் வயதில் திருவனந்தபுரத்தைச் சார்ந்த கமலா என்ற பெண்ணை மணந்தார்.
1906ஆம் ஆண்டு பிறந்த புதுமைப்பித்தன் 1948ஆம் ஆண்டு மறைந்தார். இவரது முதல் படைப்பு 1933ஆம் ஆண்டு வெளியானது. இவர் இலக்கிய உலகத்தில் இயங்கியது பதினைந்தே ஆண்டுகள் மட்டும்தான். பெரும்பான்மையாக இவரது படைப்புகள் மணிக்கொடி இதழில் வெளியானது. கலைமகள், சுதந்திரச் சங்கு, ஜோதி, ஊழியன், தினசரி, தினமணி ஆகிய பத்திரிகைகளிலும் வெளியானது.
அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் எழுதிய 108 சிறுகதைகளில் 48 மட்டும்தான் பிரசுரமாகி இருந்தது. 50கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் மொழிபெயர்த்துமுள்ளார். அவரது நண்பர் தொ மு சி ரகுநாதனுக்கு அவர் கவிதைநடையில் அனுப்பிய கடிதங்கள் உள்பட 15 கவிதைகளையும் நான்கு நூல்களையும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.
ஒரு படைப்பாளியை அவரது படைப்பின் மூலமும் அவர் வாழ்ந்த காலத்தின் மூலமாகவும்தான் எடைபோட முடியும். புதுமைப்பித்தன் இயங்கிய காலம் என்பது முதலாம் உலகப் போர் முடிந்து இரண்டாம் உலகப் போர் தொடங்காத காலம். உலகெங்கும் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி உருவாகிக்கொண்டு இருந்த காலம். பொதுவுடமைப் பாதையில் சோவியத் ரஷ்யா நடைபோடத் தொடங்கிய காலம். இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் முழுவீச்சில் இருந்த காலம். உருவாக இருக்கும் சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்கவேண்டும் என்று பலரும் விவாதித்துக்கொண்டு இருந்த காலம். ஆங்கிலேய ஆட்சியினால் இந்தியா முழுவதும் பஞ்சமும் நோயும் தலைவிரித்தாடிய காலம். வாழ்நாள் முழுவதும் பொருளாதார சிக்கலில் புதுமைப்பித்தனும் அவதிப் பட்டுக்கொண்டு இருந்த காலம். இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால் புதுமைப்பித்தனை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.
பெருநகரம் ஒன்றில் சாலை ஓரத்தில் இறந்து கொண்டு இருக்கும் வயதான பிச்சைக்காரரின் கடைசி நிமிடங்களை, அதனை வேடிக்கை பார்க்கும் குழந்தையை காட்டும் மகாமசானம், கீழ்நடுத்தரக் குடும்பத்தில் சாதாரண வேலை ஒன்றில் இருக்கும் கணவனையும், இறந்து கொண்டிருக்கும் அவரது நோயாளி மனைவி என்று செல்லும் செல்லம்மாள், சென்னையில் வசிக்கும் கந்தசாமி பிள்ளையும் கடவுளும் சந்தித்துக் கொள்ளும் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் , தன் வாழ்க்கையையே எழுதியது போன்ற ஒருநாள் கழிந்தது, வாசகர்களை உலுக்கியெடுக்கும் பொன்னகரம் என்ற கதை இவையெல்லாம் வாசகர்களின் தொடக்கப்புள்ளியாக அமையலாம்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட, தன் மனைவி கமலாவுக்கு அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பு கண்மணி கமலாவிற்கு என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மிகக் குறைவான ஆண்டுகளே சேர்ந்து வாழ்ந்தாலும், அதிலும் நீண்ட காலம் பொருள் தேடுவதற்கு புதுமைப்பித்தனும் கமலாவும் தனித்தே வாழ்கின்றனர். பணம் இல்லாத துயரத்தை அன்பும் ஆதரவையும் பரஸ்பர நம்பிக்கையையும் கூறும் கடிதங்களால் தனித்துக் கொள்கிறார் புதுமைப்பித்தன். பிரச்சனைகளை சமாளித்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் தனது எழுத்துக்களால் மனைவிக்கு அளிக்கிறார். மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் அவர்கள் குழந்தை இறந்து விடுகிறது. பொருளில்லாதவர்க்கு இவ்வுலகம் இல் என்று கமலா சந்திக்கும் அவமதிப்புகளை தன் கடிதம் மூலம் அகற்ற முயல்கிறார்.
தனிப்பட்ட செய்திகளைத் தாண்டி, உலக நடப்புகளையும் மனைவிக்கு எழுதும் கடிதங்களில் பதிவு செய்துள்ளார். அதில் முக்கியமாக காந்தி இறந்த அன்று பூனே நகருக்கு வந்து சேர்ந்த புதுமைப்பித்தன், காந்தி கொலை தொடர்பாக கோட்ஸே சார்ந்த சித்பவன் பிராமண வகுப்பினர் எப்படி காங்கிரஸ் கட்சியினரால் வேட்டையாடப் பட்டனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். தனது திரைப்பட முயற்சிகளையும், தியாகராஜ பாகவதர் சிறையில் இருந்து விடுதலையான செய்தியையும் இவர் கடிதங்கள் தொட்டுச் செல்கின்றன.
நிலையான வருமானமில்லாமல் அந்தக் கலைஞன் பலநாட்கள் சாப்பிடாமல் இருந்து, கிடைத்ததை உண்டு, அதனால் காசநோயால் பீடிக்கப்படுகிறான். பல கடிதங்களில் கை வலிக்கிறது, கை வலிக்கிறது என்ற கதறல் ஒலிக்கிறது.
அதுவரை “எனது கண்ணாளுக்கு” என்று கமலாவுக்கே எழுதிய கடிதங்கள் இடம் பெற்றிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் நண்பர் சிதம்பரத்துக்கு எழுதிய கீழ்கண்ட புதுமைப்பித்தனின் ஒரே கடிதம் இதயத்தை நொறுக்கிப் போடுகிறது.
” 26-5-48
அன்புள்ள சிதம்பரத்துக்கு,
நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன்.
அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப்பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டு கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு. இங்கு வந்து வேறு சிகிச்சை முறை அனுஷ்டிக்க உத்தேசம். கைவசம் பணம் இல்லை. பாகவதர் அனுப்ப வேண்டியது தாமதமாகியது. ஒரு நூறு ரூபா இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு. எதற்கும் என்னை 10 மணிக்கு சந்திக்க முடியுமா?
உனது,
சோ.வி… ”
சிகிச்சைக்கு 100 ரூபாய் கூட இல்லாமல் தவித்த புதுமைப்பித்தன் 30 ஜீன் 1948-ல் உலகை நீத்தார்.
சேராதிருப்பது வறுமையும் புலமையும் என்ற வாக்கு உண்மையாக விளங்கி எத்தனை படைப்பாளிகளை துன்பத்தில் ஆழ்த்தியது என்பதை நினைக்கும்போது கண்கள் கலங்காமல் இருக்கவே முடியாது. பொருள் தேட சொந்த ஊரை, சொந்த பந்தங்களை, குடும்பத்தை, உற்றாரை சுற்றத்தை விட்டு வாழும் எவராலும் இந்தக் கடிதங்களோடு தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.
ஆதரிப்பார் யாருமின்றி இந்த மகத்தான படைப்பாளி தனது 42ஆம் வயதில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.