எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
தலைவன் பிறரோடு மறைவாகப் பேசுவது எதுவாகினும் அதனை உற்றுக் கேளாமலும், அதுவென்ன என்னத் தெரிந்து கொண்டே யாகவேண்டும் எனும் முயற்சியால் தானாகக் கேட்டுவிடாமலும், தலைவன் தானே சொல்ல முன்வந்து சொல்லும்போது மட்டுமே அத்தகைய செய்திகளைக் கேட்க வேண்டும்.
இது ஆள்பவர்களுக்கு மட்டும் சொன்ன சேதி இல்லை. இத்தகைய பண்பு வாழ்வில் ஒவ்வொரு நாளும் பழக்க வேண்டிய ஒன்று. யாராக இருப்பினும், இருவர் பேசும் போது, அவர்களை அறியாமல் அச்செய்தியைக் கேட்கும் பண்பை அறவே ஒழிக்க வேண்டும்.
ஒன்றை நினைவில் கொள்க. அச்செய்தி உமக்கு உரியதாயின் நிச்சயம் உம்மையும் அழைத்துப் பேசுவர். அழையாத பட்சத்தில் நாம் அதில் சம்பந்தப்படவில்லை எனக் கொள்ள வேண்டுமே அன்றி, நாமே மூக்கை நுழைத்து, இதுவோ? அதுவோ? என நம் நிம்மதியைக் கெடுக்கக் கூடாது என அன்றே அமைச்சருக்குச் சொல்வதாக, அன்றாட மனிதனுக்குச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்!
அறிவோமா?
– சுரேஜமீ