புல்வாமா தாக்குதலின் போது அங்கு பதிவான சி.சி.டி.வி காட்சி ஈராக் குண்டு வெடிப்பின் போது பதிவான சி.சி.டி.வி காட்சி என ‘பூம் லைவ்’ எனப்படும் ‘ஃபேக்ட் செக்கிங்’ தளம் கண்டறிந்துள்ளது. ஆனால் சமூக வலைத்தளத்தில் இதைத் தான் புல்வாமா குண்டுவெடிப்பு என் பலரும் அறியாமல் பகிர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
சாலையோரம் கான்வாய் வாகனங்கள் செல்கையில் பதிவான அந்த சி.சி.டி.வி வீடியோ 30 நொடிகளைக் கொண்டுள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் அந்த வீடியோ, 2007-ல் ஈராக்கில் நடந்த குண்டு வெடிப்பின் போது பதிவானது என பூம் லைவ் உறுதிப்படுத்தியுள்ளது.
இதைப்பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பூம் லைவின் மேனேஜிங் எடிட்டர் ஜென்ஸி ஜேக்கப், “எங்களின் வாட்ஸ் ஆப் ஹெல்ப் லைன் மூலம் இந்த உண்மையை நாங்கள் கண்டறிந்தோம். இது புல்வாமாவா என்று மக்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டார்கள். ஆனால் அந்தத் தெருக்களைப் பார்க்கும் போதே, அது காஷ்மீர் இல்லை என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். பிறகு எங்களின் குழு அந்த படத்தை கூகுள் தேடு தளத்தளில் பதிவேற்றம் செய்து ஆராய்ந்ததில், அது 2008 ஏப்ரலில் நிறைய யூ-ட்யூப் யூசர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
பிறகு இந்த விஷயத்தை ஃபேஸ்புக்கிற்கும் தெரியப் படுத்தினோம். இன்னும் எத்தனை தளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை” என்றார்.
பூம் லைவ் மற்றொரு வீடியோவையும் தவறானது எனக் கண்டறிந்துள்ளனர். புல்வாமா தாக்குதலின் போது ஒரு கார் வெடிக்கும் காட்சியும் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூபில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டது. ஆனால் அந்த வீடியோ பிப்ரவரி 12-ல் சிரியா துருக்கி பார்டரில் நடந்த சம்பவம் என பூம் லைவ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியாகும்.