சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

பீஷ்ம பிதாமகர் லால் கிருஷ்ண அத்வானி பிறந்தநாள் – நவம்பர் 8

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், நான்கு முறை ராஜ்யசபை மற்றும் எட்டு முறை மக்களவை என்று நாற்பதாண்டு கால பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமகருமான திரு லால் கிருஷ்ண அத்வானி அவர்களின் பிறந்தநாள் இன்று. 

இன்று பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரில் 1927ஆம் ஆண்டு கிருஷ்ணசந்த் அத்வானி – ஞாநிதேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி. உண்மையில் அவர் பெயர் லால் என்பதுதான். தந்தையின் பெயரையும் குடும்பப் பெயரையும் இணைத்து சொல்வது வட இந்திய முறை. எனவே அவர் லால் கிருஷ்ணசந்த் அத்வானி என்று அழைக்கப்பட்டார். அதுவே பின்னர் லால் கிருஷ்ண அத்வானி என்று ஆனது. 

தனது ஆரம்பிக் கல்வியை செயின்ட் பட்ரிக்ஸ் பள்ளியில் முடித்த அத்வானி பின்னர் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் அரசுக் கல்லூரியிலும் படித்தார். பிரிவினைக்குப் பிறகு மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அத்வானி மும்பை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து கராச்சி நகரில் சங்கத்தை வளர்க்கும் பணியில் சிறப்பாக செயலாற்றனார். பாரதம் வந்த பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியின் பிரச்சாரக்காக இருந்தார். 

1951இல் பாரதிய ஜனசங் கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில் கட்சியின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருந்த எஸ் எஸ் பண்டாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டு கட்சியின் பணிக்காக அத்வானி டெல்லி நகருக்கு குடி பெயர்ந்தார். கட்சியின் டெல்லி கிளையின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் உயர்ந்தார். சங்கத்தின் பத்திரிகையான ஆர்கனைஸர் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்திய கே ஆர் மல்கானிக்கு உறுதுணையாக அத்வானி இருந்தார். 

1970ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் சார்பில் நாட்டின்டெல்லியில் இருந்து  ராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்டார். 1973ஆம் ஆண்டு ஜனசங் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் ஒரு முறை குஜராத் மாநிலத்தின் சார்பில் ராஜ்யசபை உறுப்பினராக தேர்வானார். இதனிடையில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையின் போது சிறைவாசம் அனுபவித்தார். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அரசு அமைத்தது. அந்த அரசில் செய்தி ஒளிபரப்புதுறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இரண்டரை ஆண்டு காலத்தில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய வடிவம் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் சார்பாக இரண்டு முறை ராஜ்யசபை உறுப்பினராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பாரதிய ஜனதா கட்சி தனது முதல் பொதுத்தேர்தலை 1984ஆம் ஆண்டு எதிர்கொண்டது. இந்திராவின் படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் கட்சி இரண்டே இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் இருந்து இன்று பெரும்பான்மை பலத்தோடு மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பை பாஜக வகிக்கிறது என்றால் அதன் பெருமை கட்சியின் பீஷ்மர் அத்வானியையே சாரும். 

அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைத்து 1996ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னர் பாஜக முதல் முறையாக மத்தியில் அரசு அமைத்தது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த அந்த ஆட்சியில் அத்வானி உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதின்மூன்று நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வாஜ்பாய் ஆட்சியை விட்டு விலகினார். இரண்டாண்டு காலம் கூட்டணி ஆட்சி என்று நாடு தடுமாறியது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் அரியணை ஏறியது. முதல்முறையாக ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சாராத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார். கட்சியில் வாஜ்பாய் அவர்களுக்கு அடுத்த நிலையில் அத்வானி விளங்கினார். 

ஆனாலும் 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களைப் பெற முடியாமல் போனது. தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பாஜக இளைய தலைமுறை தலைவர்களை முன்னெடுக்கத் தொடங்கியது. அத்வானி வழிகாட்டும் குழுவின் உறுப்பினராக மாறினார். 

தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பாஜகவிற்க்காக இடையறாது உழைத்த அத்வானி அவர்களின் சேவைக்கு ஒரே இந்தியா தளம் தலைவணங்குகிறது. இன்னும் நீண்ட ஆயுளோடு அத்வானி இளம் தலைவர்களையே சரியான முறையில் வழிநடத்த ஆண்டவன் அருளட்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறது. 

(Visited 112 times, 1 visits today)
+4
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close