மார்ச் 14 – விடுதலைப் போராட்ட வீரர் ஜெய் நாராயண் வியாஸ் நினைவுதினம்
காங்கிரஸில் இல்லாமல் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஆங்கிலேயருக்கு எதிராகப் பணிசெய்த பலரில் ஒருவர் ஜெய் நாராயண் வியாஸ். இவர் ஜோத்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஜோத்பூர் சமஸ்தானத்தில் இருந்து ஆங்கிலேயர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் இந்தியர்களைப் பணிநீக்கம் செய்து ஜோத்பூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே தம்மை ஆளவேண்டும் என்ற அடிப்படையில் போராட்டங்கள் செய்தார். இதற்காக ஆங்கில அரசால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஜோத்பூர் மஹாராஜாவால் காக்கப்பட்டார்.
1899, பிப்ரவரி 18 அன்று ஜோத்பூரில் பிறந்த ஜெய்நாராயண் தன் தந்தை பண்டிதர் சேவாராம்ஜி வியாஸிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் சமஸ்தானப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்று மெட்ரிகுலேஷன் தேறினார். அதன்பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1920ல் மார்வார் ஹித்கர்னி சபா (மார்வார் முன்னேற்ற சபை) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். ஜோத்பூர் சமஸ்தானம் ஆங்கிலேயர் மற்றும் அவர்களது இந்திய பணியாளர்களால் ஆளப்படுவதை எதிர்த்தது இந்த அமைப்பு. மார்வார் மார்வாரிகளுக்கே என்று கோஷம் வைத்தது. நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் உள்ளூர் மக்களின் நலன் காக்கப்படவேண்டும் என்று போராடினார் ஜெய் நாராயண். 1924ல் இந்த அமைப்பை பிரிட்டிஷ் அரசு தடை செய்து ஜெய் நாராயணையும் பிறரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. ஜோத்பூர் மன்னர் மார்வார் ஹித்கர்னி அமைப்பைக் கலைத்து உறுப்பினர்களை எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார்.
பின்னர் 1934ல் ஜோத்பூர் பிரஜா மண்டல் என்ற அமைப்பைத் தோற்றுவித்து நேதாஜியின் கொள்கைகளின் படி ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்கமாட்டோம் என்று அறிவித்தார். சில ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபின் ஜோத்பூர் மன்னர் இவரை விடுவித்து அனுப்பினார். ஆனாலும் இவரது நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலித்து பிரிட்டிஷ் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1947ல் நாடு விடுதலை பெற்ற போது ஆங்கிலேயர்களை சமஸ்தானத்தில் இருந்து வெளியேற்ற போராடினார்.
1948, மார்ச் 3 அன்று இவரை ஜோத்பூரின் பிரதம மந்திரியாக மஹாராஜா நியமித்தார். தான் திட்டமிட்ட நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்து ஆட்சி முறையை உள்ளூர் மக்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றாங்கள் செய்து செம்மைப்படுத்தினார் ஜெய் நாராயண் வியாஸ். இந்தியாவுடன் ஜெய்பூர் சமஸ்தானம் இணைந்தபின் தன் பதவியை 7, ஏப்ரல் 1949 அன்று துறந்தார். 1951, ஏப்ரல் 26 அன்று ராஜஸ்தான் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார். மாநிலம் முழுவதும் அடிப்படை வசதிகள், கல்விக்கு முக்கியத்துவம் தந்து தனது பணிகளைத் தொடர்ந்தார்.
1952ல் தேர்தல்கள் நடைபெற்ற போது முதல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 3 மார்ச் 1952ல் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டிக்கா ராம் பலிவால் ராஜஸ்தான் முதல்வர் ஆனார். பின்னர் அக்டோபர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் வென்று 1 நவம்பர் 1952 அன்று மீண்டும் ராஜஸ்தான் முதல்வராகப் பதவியேற்றார். 12 நவம்பர் 1954 வரை பதவியில் தொடர்ந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார்.
1957ல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜ்யசபாவுக்குத் தேர்வானார். 1963 வரை இப்பதவியில் தொடர்ந்தார். ராஜஸ்தான் மாநில மக்களின் நலனுக்காக பலமுறை வாதாடி பல திட்டங்களைக் கொண்டு வந்தார். அரசு திட்டங்கள் சிலவற்றை இவர் எதிர்த்த போது காங்கிரஸ் உறுப்பினர்கள் இவரைக் கண்டித்தனர். ஆனாலும் மாநில நலனுக்குப் பிறகே மற்றவை என்று உறுதியாக நின்றார்.
1963 மார்ச் 14 அன்று தனது 74 ஆவது வயதில் ஜெய்நாராயண் வியாஸ் காலமானார்.
இவர் ஆற்றிய கல்விப்பணிகளைப் போற்றும் வகையில் இவரது சொந்த ஊரான ஜோத்பூரில் உள்ள ஜோத்பூர் பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜெய் நாராயண் வியாஸ் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.