மீண்டும் பாரதப் பிரதமராக மோதி – சாத்தியமாவது எப்படி? – பி.கே.ஆர்
2019 லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அநேகமாக அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெளிவாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி .அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றே கூறுகின்றன. பெரும்பாலும் இது போன்ற கருத்துக் கணிப்புகள் எந்த கூட்டணி அல்லது கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கும். ஆனால் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை சரியாகக் கணிப்பதில்லை என்பதுதான் இதுவரை உள்ள வரலாறு. சில நேரங்களில் சில கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போயுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு நோக்கம் கற்பிக்கலாம். அது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக பரப்பிவிடும் வதந்தி என்றோ அல்லது மக்கள் மனதில் தமக்கான சேனல்களைப் பயன்படுத்தி கருத்துக் கணிப்புகளை கட்சிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி வெளியிடுகின்றன என்று குற்றம் சாட்டுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நோக்கி உள்நோக்கம் கற்பிப்பது முட்டாள்த்தனமானது. வாக்களித்த பிறகு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் கருத்துக் கணிப்பு நிறுவனங்களுக்கு, தமது நம்பகத்தன்மையும் எதிர்கால செயல்பாடுகள் மீதும் பெரும் அவநம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை கட்சிகள் சார்ந்து வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அது அவர்களின் வணிகத்தையும் பாதிக்கும் என்பது கூட அறியாத முட்டாள்கள் அல்ல.
தேர்தல் தொடங்குமுன்பே பாஜகதான் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மோடி வெறுப்பாளர்கள் உட்பட!!! ஆனால், பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வெற்றி பெறுமா அல்லது காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சியா அல்லது காங்கிரஸ் ஆதரவில் மூன்றாவது அணி தலைமையிலான ஆட்சி அமையுமா என்பதே கேள்வியாக இருந்தது. கருத்துக் கணிப்புகள் காட்டுவது போல பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவேண்டும் என்பதுதான் கட்டுரையாளரின் எண்ணமும். ஆனால் முடிவுகள் வரும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நடுவில் இந்தத் தேர்தலை பாஜக எப்படி எதிர்கொண்டது, மற்ற கட்சிகள் எப்படி எதிர்கொண்டன என்பதை அலசுவோம்.
பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசும், அதில் வெடித்துக் கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுகளும் பொதுமக்களை சலிப்படைய வைத்திருந்தது. அப்போதுதான் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷத்தோடு மோதியை முன்னிறுத்தி பாஜக 2014 தேர்தலை சந்தித்தது. அதற்கு குஜராத்தில் மோதி உருவாக்கிக் காட்டிய வளர்ச்சியை ஆதாரமாக முன்வைத்தது. இதுபோன்ற வளர்ச்சி இந்தியா முழுவதும் உருவாக்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறியது. இதற்கிடையில் பாஜகவின் முன்னணி தலைவர்கள் மோதியின் தலைமையை ஏற்றுக்கொள்ள சங்கடப்பட்ட உள்கட்சி பூசல்களும் வெளியே கசிந்தன.
பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களும், அறிவுஜீவிகளும் மட்டுமே, வேறு யாரும் இந்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது. 2002இல் தொடங்கி 2014வரை கோத்ரா கலவரங்களை காரணம் காட்டி மோதியை ஒரு ரத்தவெறி பிடித்த மனிதராக சித்தரிப்பதில் இவர்கள் முழுமூச்சாக இருந்தார்கள். குஜராத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவே இல்லை, அதெல்லாம் கணினி தொழில்நுட்ப முறையில் சித்தரிக்கப்படுவதுதான் என்று எதிர்க்கட்சிகள் கூறின. ஆனாலும் 2014 தேர்தல் என்பது தொடங்குவதற்கு முன்னமே முடிந்துபோன ஒரு பந்தயமாகத்தான் இருந்தது. 1984ஆம் ஆண்டு ராஜிவ் அடைந்த வெற்றிக்குப் பிறகு முப்பதாண்டுகள் கழித்து அறுதிப் பெரும்பான்மையோடு பாஜக அரசை அமைத்தது.
அரசை எதிர்த்த போராட்டம் மோதி ஆட்சி அமைக்குமுன்னே தொடங்கியது. கூட்டணியில் இருந்த வைகோ மோதியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ராஜபட்சேயை எதிர்த்து போராட்டம் நடத்தி, கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2014ஆம் ஆண்டில் இருந்து பத்திரிகையாளர்கள் மோதி அரசை எதிர்த்து எழுத இன்னும் ஆவேசமாக ஆரம்பித்தார்கள்.
டெல்லியில் கிருஸ்துவ தேவாலயத்தின் மீது நடைபெற்ற கல்வீச்சில் இருந்து தொடங்கி, நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று விருதுகளை திருப்பிக் கொடுப்பது, அங்கேயும் இங்கேயுமாக நடந்த சட்டமீறல்களை அளவிற்கு அதிகமாக பெரிதாகி இந்தியாவில் சிறுபான்மை மக்கள் வாழவே முடியாத நிலை உள்ளது என்று பெருங்குரல் எடுத்துப் பேசத் தொடங்கினார்கள்.
இதற்கு நடுவில் மோதி ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் தங்கள் மதிப்பை இழப்பதாக அறிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் முழுவதுமாக அழிந்துவிட்டது என்றும் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள் என்றும் அறிவுஜீவிகள் வாதிட்டனர். எல்லா மறைமுக வரிகளையும் ஒன்றாகி பொருள்கள் மற்றும் சேவை வரியை அரசு அமுல் செய்தது. இதுவும் சிறு வியாபாரிகளை கடுமையாகப் பாதித்தது என்று குரல் எழுந்தது.
சிறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய கால்நடைகளின் திருட்டு பற்றி பேசாமல், அந்த திருட்டை தடுப்பதில் ஏற்பட்ட கைகலப்பை, அதனால் இறந்தவர்களை பேசி இன்பம் கண்டனர். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இந்தியாவைத் துண்டாடுவோம் என்ற கோஷம் எழுப்புபவர்களை வருங்காலத் தலைவர்களாக உருவாகும் முயற்சிகள் நடைபெற்றன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக புதிதாக உருவான மனித உரிமைப் போராளிகள் குரலெழுப்பினார்கள். வாய்ப்பிழந்த திரையுலக நட்சத்திரங்கள் திடீர் போராளிகளாக உருவானார்கள்.
இவர்கள் அனைவரையும் தாண்டி இன்று பாஜக இன்று வெற்றிக்கோட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. அது எப்படி நடந்தது என்பதை அடுத்து பார்க்கலாம்……