சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் பிறந்தநாள் – ஜூன் 25

புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனை, காந்தியின் அணுக்க தொண்டர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் ஒருவர், பாரதம் சுதந்திரம் அடைந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சபையில் புகழ்பெற்ற வந்தேமாதரம் பாடலைப் பாடி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தவர், உத்திரப்பிரதேசத்தின் முதல்வர், பாரதத்தின் முதல் பெண் முதலமைச்சர், பாரதத்தின் மக்களவைக்கு மூன்று முறை தேர்வானவர்  என்று பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான சுசேதா கிருபளானி அவர்களின் பிறந்தநாள் இன்று.

வங்காளத்தைச் சார்ந்த சுசேதா அன்றய பஞ்சாப் மாநிலத்தின் அம்பாலா நகரில் 1908ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஒரு மருத்துவர். வேலை காரணமாக பல்வேறு இடங்களுக்கு இவர் தந்தை மாற்றப்பட்டதால், சுசேதாவின் கல்வியும் பல்வேறு நகரங்களில் நடந்தது. இறுதியாக டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் தனது முதுகலை பட்டத்தை சுசேதா பெற்றார். அன்றய பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் விடுதலைப் போராட்டத்திற்கு போராளிகளைத் தயாரித்து அனுப்பும் களமாக இருந்து வந்தது. அங்கே வரலாற்று துரையின் பேராசிரியராக சுசேதா பணியாற்றத் தொடங்கினார்.

நாடெங்கும் மூண்டிருந்த சுதந்திர வேட்கை சுசேதாவையும் பற்றிக்கொண்டது. இந்த எண்ணத்தை இன்னும் வலுபெறச் செய்தது ஆச்சாரிய கிருபளானியின் நட்பு. காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரும், சோசலிஸ சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவருமான ஆச்சாரிய கிருபளானி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழத்திற்கு அடிக்கடி வருவது வழக்கம். அங்கே படிக்கும் மாணவர்களோடு உரையாடி அவர்களை தேசியத்தின் பக்கம் திருப்புவதை அவர் செய்து கொண்டு இருந்தார். தேசிய சிந்தனை அவர்கள் இருவரையும் மணவாழ்வில் இணைத்தது. அது காதல் திருமணம் மட்டுமல்ல ஜாதி மறுப்பு திருமணம் கூட. சுசேதா வங்காளி, கிருபளானி சிந்தி, அதுமட்டுமல்ல அவர்களுக்கிடையே 20 வயது வித்தியாசம் கூட. காந்தி உள்பட பலர் தடுத்தும் அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்னும் தீவிரமாக சுசேதா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சுசேதா பெரும் பங்கு வகித்தார். 1946ஆம் ஆண்டுகளில் நடந்த ஹிந்து முஸ்லீம் கலவரங்களை கட்டுப்படுத்த கலவர பகுதிகளில் பயணம் செய்தார். காந்தியோடு இணைந்து நவகாளிக்கு சென்றார். அகில இந்திய மஹிளா காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, கருத்து வேறுபாடுகளால் ஆச்சாரிய கிருபளானி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்ற சோசலிஸ கட்சியைத் தொடங்கினார். அந்த கட்சியின் வேட்பாளராக 1952ஆம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். ஆனால் சிறிது காலத்திலேயே சுசேதா

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மீண்டும் 1957ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1967ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் கோண்டா தொகுதியில் இருந்து தேர்வானார்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் உத்திரப்பிரதேச சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 முதல் 1963 வரை உபியின் மந்திரியாகவும் பின்னர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் உத்திரப்பிரதேசத்தின் நான்காவது முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1967ஆம் ஆண்டு வரை அவர் முதல்வராகப் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1971ஆம் ஆண்டு பொதுவாழ்வில் இருந்து விலகிய சுசேதா கிருபளானி 1974ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் நாள் காலமானார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வாக்கை மெய்யாகிக் காட்டிய சுசேதா கிருபளானி அவர்கள் நினைவு பாரதத்தின் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

(Visited 326 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close