தினம் ஒரு குறள்
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. (704)
மனதில் எண்ணியதை தானே சொல்லாமல், அறிய வல்லவனே அறிவில் சிறந்தவனாவான். ஏனையவர், உருவ அமைப்பில் உடல் உறுப்பில் ஒத்தாரே அன்றி வேறல்ல. அறிவு வளர்ந்த சமூகத்தில், உடல் மொழியை அறிந்து எண்ண ஓட்டத்தை அறிவதென்பது, மனிதர்களுக் கிடையிலான உச்ச கட்ட தகவல் தொடர்பு என்பதை வரலாறு உணர்த்துகிறது. அத்தகைய அறிவு முதிர்ச்சி அன்றைக்கே தமிழர்களிடம் இருந்ததற்கு மிக முக்கியக் காரணம் மொழியின் தனித் தன்மையும், மொழிசார் வல்லுனர்களின் பண்பு நலன்களும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இன்றைக்கு உளவியல் என்று ஒரு பகுதியை உண்டாக்கி, எண்ணம், உடல் மொழி உள்ளிட்டவைகளை அனுபவம் மூலமாகக் கேட்டறிந்து, அதை ஆய்வுக் கூறாக்கி, பாடமாக பல்கலைக் கழகங்களில் வைத்துள்ளார்கள். இவையெல்லாம் எண்ணும்போது வியப்பு மட்டுமே எஞ்சும் அளவிற்கு இன்றைக்கு சமூகம் வீழ்ந்து கிடக்கிறது. அறநூல்களை அறிந்தோம் என்பதே பெருமையாகப் பேசப்படுகிறதே தவிர, அறிவின் எல்லையை அவை தொட்டனவா என்றால், சொல்லுக்கும் வாழ்விற்கும் ஆன இடைவெளி ‘இல்லை’ என பட்டவர்த்தனமாகப் படம் போட்டுக் காட்டுகிறது. கண நேர மௌனம் காட்சிப்படுத்தும் அழுக்குகளை கரைக்க முற்பட்டால், அறம் தானே வளரும்! அறிவு சிறக்கும்!!
அனைத்து அறத்தையும் தன்னகத்தே தாங்கி காலங் கடந்து வந்த ஒப்பற்ற அறநூலாம் திருக்குறளைப் பாடமாக வைப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை! அதன் படி நின்று, அறம் வளர்க்கும் தலைவர்கள் வளர்ந்தால் மட்டுமே வீடும், நாடும் செழிக்கும்!
விளங்குதற்கு எட்டாத விளங்காப் பொருளல்ல அறம்! விளங்கினால் விளையும் பயிர் அறம்!!
– சுரேஜமீ