இலக்கியம்சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

திருக்குறள்- மனு ஸ்மிருதி, மனுநீதி, மனுக்குறள்? – இறுதிப் பகுதி | முனைவர் செ.ம. மாரிமுத்து

பல குறள்கள் மனுஸ்மிருதியிலிருந்து சொல்லுக்குச்சொல் மாறாமல் அப்படியே வள்ளுவரால் மொழிபெயர்க்கப் பட்டிருப்பது பற்றி நேற்று கண்டோம். சில உதாரணங்களையும் காணலாம்.

Manusmriti II:218
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch2/ch2_211_220.html
As the man who digs with a spade (into the ground) obtains water, even so an obedient (pupil) obtains the knowledge which lies (hidden) in his teacher.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றணைத் தூறும் அறிவு – 396

Manusmriti III:78
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch3/ch3_71_80.html
Because men of the three (other) orders are daily supported by the householder with (gifts of) sacred knowledge and food, therefore (the order of) householders is the most excellent order.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை – 41

Manusmriti IX:12
http://www.hindubooks.org/scriptures/manusmriti/ch9/ch9_11_20.html
Women, confined in the house under trustworthy and obedient servants, are not (well) guarded; but those who of their own accord keep guard over themselves, are well guarded.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை – 57

II வள்ளுவரின் வடமொழிப்பற்று

தமிழ் என்ற சொல்லையே ஓரிடத்திலும் பயன்படுத்தாமல் கவனமுடன் தவிர்த்திருக்கும் வள்ளுவர் அதே நேரத்தில் குறள் நெடுகிலும் ஏராளமான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

எகா:
அமரர், அமிழ்து, அவி, ஆசாரம், ஆசை, ஆதி, இந்திரன், இலக்கம், கணம், கருமம், காமம், காமன், காரணம், காலம், சலம், சூது, சூதர், தண்டம், தவம், தானம், தூது, தேவர், நாகரிகம், நாமம், பகவன், பண்டம், பாக்கியம், பாகம், பாவம், பாவி, பூசனை, பூதம், மங்கலம், மந்திரி, மாயம், மனம், மானம், வரன், வாணிகம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதிலே பலவற்றிற்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருந்தும் வலிந்து வடமொழியைப் பயன்படுத்தியிருப்பது வள்ளுவரின் வடமொழிப்பற்றைத் தெள்ளென விளக்கும். இதற்குப்போய் தமிழ்மறைநூல் என்று பெயரிட்டு அழைக்கும் கொடுமையை என்னென்பது!

III தவிர்க்கப்பட்ட தமிழர் வழிபாடு

ஆரிய மொழிப்பற்று ஒருபுறம் என்றால் காடன், மாடன் போன்ற நாட்டார் தெய்வங்களையும், தத்தம் குலதெய்வங்களையும், சித்தர், முனிகளையும் வணங்கும் தமிழ்மரபு வழிபாடு வள்ளுவரால் முற்றாய்ப் புறக்கணிக்கப்பட்டு, ஆரிய தெய்வங்களே பெருந்தெய்வங்களாக திறமையுடன் காட்டப்பட்டுள்ளன.

வள்ளுவர் குறளினூடே அடுக்கிப்போகும் ஆரியவழித் தெய்வங்களின் தொகுப்பு:

விஷ்ணுவும் ஸ்ரீதேவியும்: 84, 167, 179, 519, 617, 920, 1103
பூதேவி: 1040
ஸ்ரீதேவிக்கு மூத்தவள்: 167, 617, 936
இந்திரன்: 25, 899
பிரும்மா: 1062
மக்கள் உள்ளத்தே காமத்தை ஊட்டும் மன்மதன்: 1197
கூற்றுவன்: 269, 326, 765, 894, 1050, 1083, 1085

மேலும் லஜ்ஜா, தரா என்று வடமொழியார் பாணியில் நாணெணும் நல்லாள் (924) என்பதும் நிலமெனும் நல்லாள் (1040) என்பதும் குறிப்பிடத்தக்கன.

இப்படித் தான்கொண்ட ஆரியப்பற்றை எந்தவித ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவாகக் காட்டும் வள்ளுவரை, பெரியார் ஒருவரே மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருந்தார். பெரியார் அன்றே சொன்னார்:

திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.

குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மதச் சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்.

IV பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள்

பார்ப்பனரின் நீதிநூலே திருக்குறள் என்பதற்குச் சான்றாக திருவள்ளுவமாலையில் பல பாடல்கள் உள்ளன.

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனின்இது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து
– வண்ணக்கஞ் சாத்தனார்

ஆரியவேதம் சொல்வதற்கும் இதற்கும் வேறுபாடே இல்லை, ஒன்றுக்கு ஒன்று குறைவே இல்லை என்று ஆராய்ந்து பார்த்து மகிழ்கிறார் இவர்.

பரிமேலழகரும் சரி, இவர் போன்ற சங்கப்புலவர்களும் சரி, தத்தம் பின்னணியால் மூளைச்சலவை செய்யப்பட்டுத் திரித்துக் கூறுவதாகச் சொல்வார் சிலர். இந்த ஆய்வுக்கட்டுரை அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

திருக்குறள் அந்தணரின் சொந்த நூலே அன்றி அது உலகப்பொதுமறை அன்று என்பதற்கு மிக முக்கியமான சான்று கிபி.இரண்டாம் நூற்றாண்டு காலத்திய கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனால் இயற்றப்பட்ட மணிமேகலையில் இருக்கிறது.

இதிலே சிறைசெய் காதையில் கிளைக்கதையாக ஒரு காட்சி விரிகிறது.

‘அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
பரசுராமன் நின்பால் வந்து அணுகான்’
– என்ற குறிப்பால் அறியப்படும் பரசுராமன் காலத்திய புராதனமான புகாரை ஆண்ட ககந்தன் என்ற சோழமன்னன், மருதி என்ற பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். ’கற்புநெறி தவறாத நான் இந்த மன்னன் உள்ளம் புகுந்தமை எங்ஙனம்’ என்று பார்ப்பனத்தியான மருதி கலங்கி நிற்கிறாள்.

பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
“நீ வா” என்ன நேர் இழை கலங்கி
“மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்” என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்

‘மழைவளமே எம்போன்ற பெண்களால் அன்றோ! இனி நான் எப்படி அகம் திரும்பி பூணூல் மார்பனான என் கணவனுக்காக முத்தீ பேணுவேன்!’ என்று வீடு திரும்பாமல் புகாரின் காவல்தெய்வமான சதுக்கபூதத்திடம் சென்று அழுகிறாள் மருதி.

அவளைத் தேற்றுவது போல் அந்த பூதம் சொல்கிறது:

மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
“கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
யான் செய் குற்றம் யான் அறிகில்லேன்
பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்துத்
தெய்வம் நீ” எனச் சேயிழை அரற்றலும்

மா பெரும் பூதம் தோன்றி “மடக்கொடி!
நீ கேள்” என்றே நேர் இழைக்கு உரைக்கும்
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!

இங்கே இந்தச் சதுக்கபூதம் சொல்லும் அறிவுரையைக் கவனித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனியான மருதிக்கு அது இருக்குமுதலான வேதத்தை எடுத்துச் சொல்லவில்லை. உபநிடத நூல்களையோ, மனுமுதலான சாத்திரநூல்களையோ எடுத்துச் சொல்லவில்லை. ஆனால் பெண்ணடிமைத்தனத்துக்கு ஊற்றுக்கண் போன்ற ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டி அறிவுரை சொல்கிறது.

“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் பெரு மழை” என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!
– என்று சொல்லி “இனி நீ உன் கணவனையே கும்பிட்டு வா! இதர தேவதைகளுக்கான விழாக்களிலே மனதைச் செலுத்தாதே!” என்றும் சொல்லி அந்தப்பூதம் அவளை வழியனுப்புவதாய் போகும் இக்கதை.

மணிமேகலை பௌத்தகாவியம். பின்னாளில் நாகார்ச்சுனர் போன்ற சில பார்ப்பனர் புகுந்து குழப்பிய மகாயானம் போலன்றி, இது உண்மையான மூலபௌத்தமான ஹீனயானம் என்னும் தேராவாத பௌத்த நூல். பெண்விடுதலைக்கு வித்திட்டது பௌத்தம். ஆகவே சீத்தலைச்சாத்தன் எந்தச்சார்புமின்றி, ‘திருக்குறள் பார்ப்பனர் நூலே’ என்று வரும் தலைமுறைக்குக் காட்டவே இதை அமைத்திருக்கிறார்.

இதிலிருந்து தெரியவரும் மற்றொரு உண்மை என்னவென்றால் இரண்டாம் நூற்றாண்டுக்கு மிகவும் தொன்மையான புராண காலத்திலேயே திருக்குறள், மருதி போன்ற சாதாரணமான பார்ப்பன மக்களிடம் நீதிநூலாய் இருந்திருக்கிறது. எனவே, பின்னாளில் இயற்றப்பட்ட மனுநூல் போன்றவை திருக்குறளை அடியொற்றியே இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.

இதைப்படிக்கும் தமிழ்மக்கள் இனியாவது குறள் மயக்கத்திலிருந்து மீளவேண்டும்.

(Visited 198 times, 1 visits today)
Tags

One Comment

  1. 21 ஆம் நூற்றாண்டின் அளவுகோலை வைத்து முதலாம் நூற்றாண்டின் புலவரின் யோகியதை மதிப்பிடப்பட்டு இருக்கிறது .

    கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் என்று சொல்லும்போது அவர் அடிமைகளை பற்றி கூறியதை வைத்து அவர் புத்தகம் எடை போடப்படுவது இல்லை . அடிமைகள் அவசியம் என்று கூறியதை யாரும் பெரிது படுத்தியோ அல்லது அதை ஒரு பொருட்டாகவோ எழுதுவது இல்லை .

    கனி இருக்க காய் கவர்த்தற்று என்பது போல , திருக்குறளில் ஆயிரம் நல்ல குறள்கள் உள்ளன, இருந்தும் யாருமே படிக்காத குறள்களை படித்து அவை சரி இல்லை , அதனால் திருக்குறளை நிராகரிப்போம் என்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது .

    மனு திருக்குறளை படித்து காப்பி அடித்துருக்கலாம் அல்லது அவை அன்றைய பொது வழக்கில் இருந்த கூற்றுகளையே மனுவும் ,வள்ளுவரும் தனி தனியாக அவர்கள் வழியில் ஆவணப்படுத்தி இருக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close