சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

வீரத் துறவி சுப்ரமணிய சிவா

வரலாற்றைப் பதிவு செய்து வைப்பது என்பது நமது மரபணுக்களிலேயே இல்லாத ஓன்று என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. அதனால்தான் தகுதியில்லாதவர்களை தலைவர்களாக நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கொண்டாடப்பட வேண்டியவர்களை நம் நினைவில்கூட இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் நாமும் பிழைத்துக்கொண்டு இருக்கிறோம்.

பாரதநாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பது இன்னும் எழுதி முடிக்கப்படாத மஹாகாவியமாகும். எண்ணற்ற தேசபக்தர்களின் பெயர்கள் கூட இன்னும் அதில் முழுமையாகச் சேர்க்கப்படவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளை பற்றிய வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை. பலரைப் பற்றிய தகவல்கள் ஒப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளதே அன்றி முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

வரலாற்றின் பக்கங்களில் புதைந்து போய் இருக்கும் தியாகி சுப்ரமணியசிவத்தின் பிறந்தநாள் இன்று. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் தேசபக்தி கனலை மூட்டிய மூவேந்தர்கள் பாரதி, சிதம்பரம், சிவம் என்ற மூவர்தாம். சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகையாளராக, சுதேச கிளர்ச்சியாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, தமிழ் ஆர்வலராக, தனித்தமிழ் முயற்சியின் ஆரம்பப்புள்ளியாக, சந்நியாசியாக, செத்த பிணத்தையும் எழுந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கும் வல்லமைகொண்ட சொற்பொழிவாளராக என்ற பன்முக ஆளுமையாளர் சுப்ரமணிய சிவம்.

சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்…இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )… 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்.

இரும்பு காந்தத்தை ஈர்ப்பதுபோல தேசபக்தி வ உ சிதம்பரம் பிள்ளை, பாரதி, சுப்ரமணிய சிவாவை ஒன்றாகப் பிணைந்தது. வ உ சி கப்பல் மற்றும் ஓட்டவில்லை, தொழிலார்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். அவருக்கு உறுதுணையாக தனது பேச்சாற்றலால் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தி போராட்டத்திற்கு தூண்டும் பணியை சிவம் செய்தார். தேசபக்தர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு ஆங்கில அரசு மரியாதை செலுத்தியது. மாட்சிமை பொருந்திய மன்னரின் ஆட்சியை எதிர்த்த குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை, சிவத்தை ஆதரித்து உணவளித்து, இடமளித்த குற்றத்திற்காக சிதம்பரம் பிள்ளைக்கு இன்னும் ஒரு ஆயுள் தண்டனை, என்று இரட்டை ஆயுள் தண்டனை அதனை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பானது.

” நான் ஒரு சந்நியாசி, முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வது என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி, அதனை அடையும் மார்க்கத்தை போதிப்பது என் வேலை. சகலவிதமான வெளிபந்தங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும்.

இதே போன்று ஒரு தேசத்தின் முக்தியாவது அந்நிய நாடுகளின் பிடிப்பில் இருந்து விடுவித்துக் கொள்வது, பரிபூரண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாடு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது சுதேச கல்வி, சுதந்திர லட்சியம், அதை அடையும் மார்க்கம், சுதந்திரப் பாதையில் நிற்கும் எதையும் சாத்வீக முறையில் எதிர்ப்பது, புறக்கணிப்பது இவையே ஆகும்”. இது நீதிமன்றத்தில் சுப்ரமணிய சிவா அளித்த வாக்குமூலம்.

விசாரணை முடிந்தது. சிவாவுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா, கம்பளி மயிர் வெட்டும் பணியிலும், மாவு அரைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டார். இதுவே, அவருக்குப் பின்னாளில் தொழுநோயாக மாறியது.

சிறையில் இருந்து விடுதலையான சிவம் ஞானபானு என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அன்றய தமிழ் கவிஞர்கள் நிலையை, பணத்திற்காக செல்வந்தர்களை தகுதிக்கு மேலாக அவர்கள் புகழுவதை கிண்டல் செய்யும் விதத்தில் பாரதி எழுதிய சின்ன சங்கரன் கதை இந்தப் பத்திரிகையில்தான் வெளியானது. பாரதி, வ உ சி, வ வே சு ஐயர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஞானபானு இதழில் தொடர்ந்து எழுதினார்கள்.

திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்
மருவுபல் கலையின் வல்லமை என்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையகமுழுதுமெங்கள்
பெருமைதான் நிலவிநிற்கப் பிறந்தது ஞானபானு

கவலைகள் சிறுமை நோவு கைதவம் வறுமைத்துன்பம்
அவலமாமனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையச்சம்
இவையெல்லாம் அறிவிலாமை என்பதோர் இருளிற்பேயாம்.
நவமுறு.ஞானபானு நண்ணுக, தொலைகபேய்கள்

அனைத்தையும் தேவர்க்காக்கிஅறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தியாக வளர்வது நெருப்புத் தெய்வம்
தினத்தொளி ஞானம் கண்டிர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடிவாழ்வர் மனிதர் என்றிவைக்கும் வேதம்

பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கு மாங்கே,
எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றியெய்தும்
திண்ணிய கருத்தினோடும் சிரித்திடும் முகத்தினோடும்
நண்ணிடு ஞானபானு அதனை நாம் நன்கு போற்றின்”

ஞானபானு பத்திரிகைக்கு பாரதி எழுதிய வாழ்த்துப் பாடல் இது.

தொழுநோயால் பீடிக்கப்பட்ட போதிலும் தேசசேவையை சிவம் கைவிடவில்லை அவரின் நோயைக் காரணம் காட்டி, சுப்ரமணிய சிவாவை ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்று அரசு தடை விதித்தது. கட்டை வண்டியிலும், கால்நடையாகவும் பயணம் செய்து மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமையை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்…சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீத்தார்.

சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

(Visited 201 times, 1 visits today)
+4
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close