ஆன்மிகம்

பகவத் கீதை – பதினெட்டாவது அத்யாயம் – மோக்ஷ சந்நியாஸ யோகம்

யோக விளக்கம்:

பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைவதே மோட்சம் எனப்படுகிறது. பகவான் இதற்கு முன்னர் கூறிய எல்லாவற்றையும் இங்கே சாரமாகச் சொல்கிறார். மோட்சத்திற்கு சாங்கியயோகமும் கர்மயோகமும் முக்கியம். சாங்கியயோகத்தை “சந்நியாஸம்” என்றும் கர்மயோகத்தை “தியாகம்” என்றும் சொல்கிறார். ஒன்று கர்மங்களை பரமாத்மாவிடம் ஒப்படைத்துவிடு அல்லது தியாகம் செய் என்று உபதேசங்களை முடிக்கிறார்.


“வாசுதேவா! சந்நியாஸம் மற்றும் தியாகம் இவைகளைப் பற்றிய தத்துவங்களை உனது வாயால் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்”

கைக்கூப்பினான் அர்ஜுனன்.

சில வித்வான்கள் காம்ய கர்மங்களைத் துறத்தலை சந்நியாஸம் என்று அறிகிறார்கள். சில பண்டிதர்கள் கர்மங்களின் பயனைத் துறத்தலை தியாகம் என்று தெளிகிறார்கள். சில அறிஞர்கள் கர்மங்களினால் தோஷங்கள் ஏற்படுவதால் அவை குற்றமுடையவை. ஆகையால் அவை முமூக்ஷுவினால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்கிறார்கள். வேள்வி, தானம் மற்றும் தவம் ஆகிய கர்மங்கள் துறக்கத்தகுந்தவை அல்ல என்றும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அர்ஜுனா சந்நியாஸம் மற்றும் தியாகம் இவையிரண்டில் முக்குணங்களோடு சொல்லப்பட்ட தியாகத்தைப் பற்றி முதலில் சொல்கிறேன் கேள்.

அறிவுடையவர்களை ஞானிகளை பரிசுத்தமாக்கும் தவம், வேள்வி தானம் ஆகியவை துறக்கத்தக்கவை கிடையாது. ஆனால் அவற்றின் பயன்கள் துறக்கத்தக்கவை. ஆதலால் மேலானாவை. இதுவே என்னால் தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கை. ஆனால் உனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை செய்யாமல் விட்டால் அது தியாகம் ஆகாது. அதுவே தாமஸத் தியாகம் ஆகிவிடும். செய்யவேண்டிய கர்மத்தைத் துன்பமாக நினைத்து பயத்தினால் செய்யாமல் விட்டால் அது ராஜஸத் தியாகம். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டக் கர்மங்களை ஒன்றுவிடாமல் செய்து அதில் பற்றற்று பயனைக் கருத்தில் கொள்ளாது செய்யப்படுவது சாத்வீக தியாகம்.

எவனொருவன் பயன் தராத கர்மத்தை வெறுக்காமலும் பயன் தரக்கூடிய கர்மத்தின் பலனில் பற்றுக்கொள்ளாமல் இருக்கிறானோ அவனே அறிஞனும் உண்மையான தியாகியுமாவான்.

மேனியோடு இருக்கும் மனிதனானவன் கர்மங்களைச் செய்யாமல் இருப்பது இயலாத காரியம். ஆனால் கர்மங்களின் பலனைத் துறப்பது சாத்தியமாகும். அவனே தியாகி என்றழைக்கப்படுகிறான். கர்ம பயனைத் துறக்காதவனுக்கு நன்மை தீமை ஏற்படுகிறது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அவன் இறந்தபின்னும் அந்த கர்மபயன் தொடர்கிறது. ஆனால் கர்மபயனைத் துறந்தவர்களுக்கு அதன் பயன் ஒருபோதும் ஏற்படுவதில்லை.

கர்மங்கள் நிறைவேறுவதற்கு ஐந்து காரணங்கள் சாங்க்ய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை கர்மம் செய்கிற உடல், செய்கிறவன், தனித்தனியாக உள்ள இந்திரியங்கள் அதன் உபகரணங்கள், அவனின் தனித்தனி செயல்கள் மற்றும் ஐந்தாவதாக தெய்வமும் காரணமாகும்.

மனம் – வாக்கு – உடல் என்ற மூன்றாலும் சாஸ்திரத்திற்கு உட்பட்டோ அல்லது முரணாகவோ செய்யும் அனைத்து கர்மாக்களுக்கும் இவை ஐந்தும் காரணம். இது இப்படியிருக்க அக்ஞானியானவன் தான் செய்யும் வினைகளுக்கு தன்னையே கர்த்தாவாக எண்ணிக்கொள்கிறான். எவனொருவனின் உள்ளத்தில் செய்யும் கர்மங்கள் என்னால் செய்யப்பட்டன என்ற எண்ணம் இல்லாமல் ஒட்டாமல் இருக்கிறானோ அவன் கொன்றாலும் அந்த கொன்ற பாவத்தில் தள்ளப்படுவதில்லை.

கர்மம் செய்யத் தூண்டுவது அறிவு, அறியப்படுவது மற்றும் அறிபவன் ஆகியவை. அந்தச் செயலைப் புரிபவன், கரணம் எனப்படும் மனம் புத்தி புலன்கள் மற்றும் செயல் இவை மூன்றும் ஒன்று சேர்வதால் கர்மம் ஏற்படுகிறது. குணங்களைப் பற்றிக் கூறும் சாங்க்ய சாஸ்திரத்தில் அறிவு செயல் செய்பவன் ஆகிய மூன்றும் முக்குணங்களுக்கும் வேறுபடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே!

அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்!!

உயிரினங்கள் அனைத்திலும் பரமாத்மாவைக் காணும் ஞானம் சாத்விகம். அதே உயிரனங்கள் தனித்தனி என்றும் விதம்விதமான இருப்புகள் என்றும் அறியும் ஞானம் ராஜஸம். இந்த உடல் ஒன்றே எல்லாக் காரியத்தையும் விளைவிக்கக்கூடியது என்றொரு ஞானம் உண்மைப் பொருளை உணர்த்தாது அற்பமாக இருக்கும். அதுவே தாமஸம்.

நான் செய்கிறேன் என்ற அபிமானமில்லாமல் செய்யப்படும் கர்மா சாத்வீக கர்மா. கடும் உழைப்பினால் செய்யப்படும் கர்மா பின்னர் அதன் பயனில் கருத்தாக அகங்காரமுடையவனால் செய்யப்பட்டால் அது ராஜஸம். விளைவு இழப்பு துன்பம் திறமை போன்ற எதையும் ஆராயாமல் தொடங்கப்படுவது தாமஸ கர்மம்.

இப்போது சாத்வீகனின் இலக்கணத்தைச் சொல்கிறேன் கேள். பற்றற்றவன். நான் என்ற அகங்காரம் இல்லாதவன். உறுதியானவன். எந்த செயலிலும் ஊக்கமுடையவன். எந்த ஒரு செயலின் வெற்றியும் தோல்வியிலும் சமதரிசனம் உடையவன் சாத்வீகன் எனப்படுகிறான்.

பேராசை உள்ளவன். செய்யும் செயலின் பலனை விரும்புவன். பிறரை இம்சிப்பவன். கெட்ட நடத்தை உடையவன். மகிழ்ச்சியினாலும் துன்பத்தினாலும் பாதிக்கப்படுவன். இவனை ராஜஸன் என்கிறோம்.

சோம்பேறி. எந்தச் செயலுக்கும் காலம் கடத்துபவன். மனத்தையும் புலன்களையும் கட்டுப்படுத்தத் தெரியாதவன். கர்வமுடையவன். வஞ்சித்துப் பிழைப்பவன். பிறர் வாழ்வைக் கெடுப்பவன். இவனை தாமஸன் என்று குறிப்பிடுகிறோம்.

இதே சத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கேற்ப ஒவ்வொருவனின் புத்தியும் மனஉறுதியில் ஏற்படும் பாகுபாட்டையும் சொல்கிறேன் கேள்.

அர்ஜுனா! சாத்வீகமான புத்தியானது எது செய்யத் தகுந்தது எது செய்யத் தகாதது என்றும் பயம் மற்றும் பயமின்மை என்பதையும் பிரவிருத்தி மற்றும் நிவிர்த்தி மார்க்கத்தையும் உண்மையாக அறியும். எந்த புத்தியானது தர்மம் அதர்மம் செய்யக்கூடியது கூடாதது என்பதை உள்ளதற்குப் புறம்பாக அறிகிறதோ அது ராஜஸம். அதர்மத்தை தர்மம் என்றும் எந்த பொருளை எடுத்தாலும் சந்தேகத்துடன் அதன் நிஜமான தன்மைக்கு மாறாக எடுத்துக்கொள்கிறதோ அது தாமஸ புத்தி.

மனம் பிராணன் புலன்கள் ஆகியவற்றால் பகவானைத் தவிர சிந்திக்காமல் உறுதியோடு இருப்பது சாத்வீக உறுதி. அறம் பொருள் இன்பங்கள் அடைவதிலேயே பலனை அடைவதில் உறுதியாக இருப்பது ராஜஸம். தூக்கம், துக்கம், அச்சம், செருக்கி ஆகியவற்றை உறுதியோடு பற்றுவது தாமஸ உறுதி.

இப்போது உனக்கு மூன்றுவிதமான சுகங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேள்.

பஜனை தியானம் சேவை முதலியவற்றால் இன்புற்று சுகமடைகிறானோ அது சாத்வீக சுகம். அது ஆரம்பத்தில் விஷம் போலத் தோன்றலாம். ஆனால் இறுதியில் அமிர்தத்துக்கு ஒப்பானது. பகவானைப் பற்றிய தெளிவான அறிவு அடையும் அதுவே சாத்வீகம். புலன்கள் போகப் பொருள்களில் திளைப்பதை சுகம் என்று நினைப்பது ராஜஸம். அது ஆரம்பத்தில் அமிர்தம் போல இருந்தாலும் கடைசியில் நஞ்சு. தூக்கம், சோம்பல் மற்றும் கவனமில்லாதிருத்தலில் தோன்றும் சுகமானது ஆத்மாவை மயக்கமடையச் செய்துவிடும். அதுவே தாமஸ சுகமாக அறியப்படுகிறது.

இம்மூன்று குணங்களிலிருந்து எந்த உயிரினமும் நிலத்திலோ, ஆகாயத்திலோ அல்லது தேவர்களிலோ அல்லது இவைகளைத் தவிர வேறு இடத்திலோ இல்லை.

பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் மற்றும் நான்காம் வர்ணத்தவன் ஆகியோரின் கர்மங்கள் இயற்கையில் உண்டான குணங்களுக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கின்றன.

ஸமோ தமஸ்தப: ஸௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச

ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்!!

கற்றல் கற்பித்தல், மனத்தூய்மை உடல்தூய்மை, தம்முடைய தர்மத்தைக் கடைபிடிப்பதற்காக துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளுதல், புலன்களை அடக்குதல், மனதையும் அடக்குதல், தனக்கு தீங்கு செய்தவனைப் பொறுத்தல், வேதம் சாஸ்திரம் கடவுள் பரலோகம் போன்றவற்றில் நம்பிக்கையும், புலன், உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் நேர்மையாகவும் இருந்து பரமாத்ம தத்துவத்தை அனுபவிப்பது பிராமணர்களுக்கு உண்டான கர்மங்கள்.

ராஜ்ஜிய பரிபாலனம் செய்தல், போர்களில் புறங்காட்டாமல் இருப்பது, வீரம், உறுதி, திறமை, கொடை ஆகியவை க்ஷத்ரியர்களின் இயல்பான கர்மங்கள்.

பொருள்களை வாங்கி விற்றலில் சத்தியத்தைக் கடைபிடித்தல், உழவு செய்தல், பசுக்களைக் காத்தல் இவைகள் வைசியர்களின் கர்மங்கள். இம்மூன்று வர்ணத்தினருக்கும் சேவை செய்தலே நான்காம் வர்ணத்தவரின் கர்மங்கள்.

ஆகையினால் தத்தம் இயல்பான கடமையில் இருப்பவன் பகவானை அடையும் சித்தியைக் கைக்கொள்கிறான். பரம் பொருளிலிருந்து சகல பிராணிகளும் உண்டாயின. இந்த உலகம் முழுவதும் அந்தப் பரம் பொருளினால் நிரப்பப்பட்டிருக்கிறது. அந்தப் பரமாத்மாவை நாம் நம்முடைய இயல்பான கடமைகளினால் வழிபட்டால் பரமசித்தியை அடையலாம்.

பிறருடைய தர்மத்தை நீ நல்ல முறையில் கடைப்பிடித்தாலும் அது உயர்வல்ல. உன்னுடைய தர்மத்தில் குணக்குறை இருந்தாலும் அதுவே உயர்வானது. அப்படி கடமையைச் செய்கிறவன் பாவத்தை அடையமாட்டான் என்று அறி! புகையினால் சூழப்பட்ட தீ போல எல்லா செயல்களும் குறை உள்ளது. ஆகையால் பற்றற்ற உள்ளத்துடன் ஆசையில்லாமல் உள்ளத்தை அடக்கியவன் ஸாங்கிய யோகத்தினால் கர்மத்தினால் உண்டாகும் தளைகளைத் தகர்த்து பெருநிலையை அடைகிறான். ஞான யோகத்தின் உயர்ந்த நிலையான நைஷ்கர்ம்ய சித்தியை அடைந்த மனிதன் பிரம்மத்தை அடையும் முறையை சுருக்கமாக என்னிடம் அறிந்துகொள்.

அர்ஜுனா! எளிய சாத்வீக அளவான உணவு அருந்துபவனாகவும், புலன்நுகர்ப் பொருட்களை தவிர்த்து, தூய்மையான இடத்தில் தனித்திருந்து, இந்திரியங்களை அடக்கி, மனம்-வாக்கு-மேனி ஆகியவைகளைத் தன் வசத்தில் வைத்திருந்து, விருப்பு-வெறுப்பில்லாமல், திடமான வைராக்கியத்தை அடைந்து, கர்வம் காமமில்லாமல், சொத்து சேர்த்தலில் பற்றில்லாமை ஆகிய குணங்கள் கொண்டவன் சத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்கு தகுதியடைகிறான்.

பிரம்மத்தில் ஒடுங்கிய யோகி எதற்கும் வருந்துவதில்லை. எதையும் எதிர்பார்ப்பதில்லை. எல்லாப் பிராணிகளிடமும் சமதரிசனம் கொள்கிறான். என்னுடைய பராபக்தியை அடைகிறான். அந்த பக்தியின் மூலம் நான் யாரென்றும் எவ்வித குணங்களுள்ளவன என்றும் அறிந்து என்னிடமே ஐக்கியமாகிறான். என்னைச் சரணாகதி அடைந்த கர்மயோகி எல்லாக் கர்மங்களையும் எப்போதும் செய்தாலும் என்னுடைய அருளால் அழியாத பரமபதத்தை அடைவான்.

எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய். சமபுத்தியான யோகத்தைக் கடைபிடி. என்னையே அடைக்கலமாகக் கொள். என்னிடமே உன் உள்ளத்தை வை. அப்படிச் செய்வதின் மூலம் என்னுடைய அருளால் எல்லா இடையூறுகளையும் இன்னல்களையும் எளிதாகக் கடந்துவிடுவாய். அகங்காரத்தினால் என் பேச்சைக் கேட்டாவிட்டால் அழிந்துவிடுவாய்.

“இந்த யுத்தம் செய்யமாட்டேன்” என்று நீ கொண்ட அகங்காரம் நிலை பெறாது. ஏனெனில் உன்னுடைய இயல்பானது உன்னை வலுவில் கொண்டு போய் போரில் ஈடுபடுத்தும். அறிவு மயக்கத்தின் காரணமாக நீ எந்தச் செயலைச் செய்யவில்லையோ அதை உன்னுடைய கர்மவினையினால் செய்யப்போகிறாய்.

அர்ஜுனா இந்த உடலாகிய இயந்திரத்தில் ஏற்றி வைக்கப்பட்ட அனைத்து பிராணிகளையும் அந்தர்யாமியாக இருக்கும் பகவான் அவரவர்கள் கர்ம வினைக்கு ஏற்றவாறு சுழலச் செய்து எல்லா பிராணிகளின் இதயத்திலும் இருக்கிறார். ஆகையால் நீ அந்த பரமேஸ்வரனை தஞ்சை அடைவாயாக. அவரின் அருளினால் நீ உயர்ந்த அமைதியையும் நிலையான பரமபதத்தையும் நிச்சயம் அடைவாய்.

இந்த ரகசியமான ஞானம் உனக்கு என்னால் கூறப்பட்டது. இதை ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய். எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருக்கிறாய். நான் மீண்டும் இந்த ரகசியமான வசனத்தை உரைக்கிறேன். கேள்.

அர்ஜுனா! நீ என்னிடமே மனதைச் செலுத்தி என்னிடமே பக்தியாய் இரு. என்னையே வழிபட்டு வணங்கு. இதையெல்லாம் செய்தால் நீ என்னையே அடைவாய். இது உண்மை என்று நான் உறுதி கூறுகிறேன். நீ என் அன்புக்கு உரியவனாக இருப்பதால் நான் இவைகளை உன்னிடம் கூறினேன்.

தர்மங்களையும் செய்யும் கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிடு. சர்வ வல்லமையும் ஆதாரமாகவும் உடைய என்னையே சரணடைவாக. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். கலங்காதே!

உனக்குச் சொல்லப்பட்ட இந்த கீதா உபதேசத்தை நீ தவம் இல்லாதவனுக்குச் சொல்லக்கூடாது. பக்தியில்லாதவனுக்கும் சொல்லாதே. கேட்க விரும்பாதவனுக்கும் சொல்லக்கூடாது. என்னிடம் குறை காண்பவனுக்கு ஒரு போதும் சொல்லாதே.

எவனொருவன் என்னிடம் மிகவும் உன்னதமான பிரேம பக்தி கொண்டு இந்த கீதா ரகசியத்தைச் சொல்வானோ அவன் என்னையே சந்தேகமில்லாமல் அடைகிறான். அப்படிச் செய்பவனைக் காட்டிலும் எனக்குப் பிரியமான காரியத்தைச் செய்பவன் எவனுமில்லை. அவனே எனக்கும் பிரியமானவனாக இருக்கிறான். இந்த கீதாசாஸ்திரத்தைக் கற்பவன் என்னை ஞானவேள்வியால் வழிபட்டவன் ஆகிறான். எவனொருவன் நம்பிக்கையுடனும் குறை காணாதவனாகவும் இந்த கீதா சாஸ்திரத்தைக் கேட்கிறானோ அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு புண்ணிய லோகங்களை அடைகிறான்.”

அர்ஜுனன் அமைதியாய் தேர்த்தட்டில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் தனது பெரும் உரையை முடித்துக்கொண்டார். குருக்ஷேத்திரத்தில் எழும்பிய காற்றொன்று அர்ஜுனனின் உத்தரீயத்தை அசைத்தது. கிருஷ்ணரும் மௌனமாக அர்ஜுனனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“அர்ஜுனா! இப்போது நானுக்குச் சொன்ன இந்த கீதா சாஸ்திரத்தை ஒருமுகத்தோடு கேட்டாயா? அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட மோகம் ஒழிந்ததா?” என்று கேட்டார் ஸ்ரீகிருஷ்ணர்.

“அச்சுதா! உங்களுடைய பரிபூரணமான அருளினால் என் மோகம் அழிந்துவிட்டது. உங்களால் ஞான ஒளி பெறப்பட்டவன் ஆனேன். இனி எனக்குச் சந்தேகங்கள் இல்லை. ஆணையிடுங்கள். அதை நிறைவேற்றுவேன்”

மீண்டும் கைக்கூப்பினான்.

திருதராஷ்டிரனின் எதிரே உட்கார்ந்திருந்த சஞ்சயன் இந்த முழு உரையாடலையும் அங்கே சொல்லிக்காட்டினான்.

“அரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் மகாத்மாவான அர்ஜுனனுக்கும் இவ்விதம் உன்னதமான உரையாடல் நடந்தது. இதைக் கேட்டு எனக்குப் புல்லரித்தது. இதைக் கேட்டதலிருந்து மீண்டும் மீண்டும் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறது. பெரும் வியப்பு உண்டாகிறது” என்றான் சஞ்சயன்.

திருதராஷ்டிரன் தரையையே வெறித்துப் பார்த்தபடி சிந்தனையை வேறெங்கோ இருக்க மௌனமாக இருந்தான்.

“அரசே! எங்கு யோகேஸ்வரனான பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறாரோ எங்கே காண்டீவம் ஏந்திய பார்த்தன் இருக்கிறானோ அங்கே மகாலெக்ஷ்மியும் வேற்றியும் ஐஸ்வரியமும் நிலைத்த நீதியும் எப்போதும் இருக்கும்”

ஒரு பாசுரம்:

உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்,
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை, ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே.

-திருவாய்மொழி 4 – 6 10 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்

உங்களுக்கு பிடித்தவைகளையெல்லாம் தோள்களை ஆட்டியாட்டிச் சொல்லும் தாய்மார்களே, என்றென்றும் வேதங்களால் புகழப்படும் வளம் நிறைந்த துவாரகாபதியின் மன்னனை ஏத்தலும் தொழுதலும் செய்தால் உங்கள் மகள் குணமாகிவிடுவாள். ஏனென்றால் அவள் தனது கர்மாக்களையெல்லாம் எம்பெருமானிடம் சமர்ப்பணம் செய்து பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுபட அவனைத் தவிர்த்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழமாட்டாள்! ஆகவே உங்களுக்குப் பிடித்தவைகளையெல்லாம் அவளிடம் சொல்லாதீர்கள்!

ஸ்வாமி தேசிகனின் கீதார்த்தசங்கிரகம் – மோக்ஷ சந்நியாஸ யோக சாரப் பாசுரம்:

சத்துவ வீடுடை நற் கருமம் தான் உகந்தமையும்
சத்துவமுள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நற் கிரிசை பயனும் சரணா கதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே 

பொருள்:

சத்துவ குணம் அருளும் கண்ணன் ஒப்பற்ற விசேஷமுள்ள பார்த்தனுக்கு, சத்துவ தியாகத்தோடு கூடிய நற் கருமங்களே தான் விரும்புவதாகவும் இவையிவை சத்துவ குணமுள்ளது என்று பிரித்ததையும் சத்துவ கர்மங்களின் பயனான முக்தியும் சரணாகதியையும் உரைத்தான்.

====== மோக்ஷ சந்நியாஸ யோகம் நிறைவடைந்தது =======

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து எங்கள் அறிவுக்கெட்டிய வரையில் ஒரு பாசுரத்தைத் தேர்ந்தெடுத்து கீதையின் ஒவ்வொரு அத்யாயத்திலும் பொருளோடு வெளியிட்டிருந்தோம். நம்மாழ்வாரின் மற்றுமொரு பாசுரத்தோடு பகவத் கீதையைப் பூர்த்தி செய்கிறோம்.

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குரு கூர்ச்சட கோபன்,
சொல்வினை யால்சொன்ன பாடல் ஆயிரத் துள்ளிவை பத்தும்,
நல்வினை யென்றுகற் பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி,
தொல்வினை தீரவெல் லாரும் தொழுதெழ வீற்றிருப் பாரே.

– திருவாய்மொழி 4 – 4 – 11 – ஸ்ரீநம்மாழ்வார்

பொருள்: நம்முடைய வல்வினைகளைத் தீர்க்கும் கீதாசாரியன் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன் சொல்வண்மையால் பாடிய இந்த ஆயிரம் பாடல்களையும் தங்களது நல்வினையாக எண்ணிக் கற்பவர்கள் நலம்பயக்கும் வைகுந்தம் சென்று பழைய வினைகள் எல்லாம் தீர்ந்துபோய் மற்றவர்கள் அவர்களைத் தொழும் வண்ணம் வீற்றிருப்பார்கள்!

******************** பகவத் கீதை நிறைவடைந்தது *********************

(Visited 95 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close