ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே !
சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
ராமருக்கு இன்னொரு பெயர் தாசரதி. அதாவது தசரதனின் மகன் என்று பொருள். தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போது ‘தசரதன் மகன் என்று தான் அறிமுகம் செய்துக்கொள்கிறார்’. ராமாயணத்தில் ராமர் தான் ஒரு மனிதன் என்றே நினைக்கிறார்.
ஆனால் ராமாயணத்தில் வரும் வால்மீகி, பரத்வாஜர், சரபங்கர், சுதீக்ஷனர், அகஸ்தியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற முனிவர்களுக்கு ராமர் தான் தெய்வத்துக்கு எல்லாம் தெய்வம் என்று தெரியும். முனிவர்களும் ரிஷிகளும் தங்கள் ஞானக் கண்ணால் முக்காலமும் உணர்ந்தவர்கள். அதனால் ராமரை தெய்வமாகப் பார்த்தார்கள்.
ராமர் வனவாசத்தில் பல காடுகளுக்குச் சென்றார். அங்கே இருக்கும் ரிஷிகளையும், முனிவர்களையும் வணங்கி அவர்கள் ஆசிரமத்தில் தங்கி அவர்களுக்குத் தொண்டு புரிந்து நல் உபதேசங்களையும் அவர்களின் ஆசியையும் பெற்றார்.ராமருக்கு அகஸ்தியரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று விரும்பினார்.
முனிவர் சுதீக்ஷனரை வணங்கி ”முனிவரே எனக்கு நீண்ட நாட்களாகத் தமிழ் மொழியைக் கற்பித்த அகஸ்தியரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை. அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்” என்று கேட்க அதற்குச் சுதீக்ஷனரும் மகிழ்ச்சியுடன் அகஸ்தியர் வசிக்கும் இடத்துக்கு வழி சொன்னார்.

ராமர், சீதை, லக்ஷ்மணரும் அகஸ்தியர் இருக்கும் இடத்துக்கு மலைகளைக் கடந்து நடந்து சென்றார்கள். அங்கே ஒரு அழகிய வனத்தில் குள்ளமாக ஒரு முனிவரைப் பார்த்தார்கள். குள்ளமாக இருந்தாலும் தேஜஸ்வியாகக் காட்சியளித்தார். ராமர், சீதை, லக்ஷ்மணரும் அகஸ்தியரை வணங்கினார்கள்.
அகஸ்தியர் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்றார். பழங்களைக் கொடுத்து உபசரித்தார். சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அகஸ்தியர் “ராமா நீ உலகங்களுக்கு எல்லாம் அரசன் உனக்குச் சில பரிசுகளைத் தருகிறேன்” என்று ஒரு வில்லை எடுத்து ”ராமா இந்த வில்லை எடுத்துக்கொள்” என்று கொடுத்தார்.
அந்த வில் ரத்தினங்கள் பதித்து பிரகாசமான இருந்தது. ராமர் அதை வாங்கிக்கொண்டார். அகஸ்தியர் “ராமா இந்த வில் விஸ்வகர்மா என்பவர் மஹா விஷ்ணுவிற்காகச் செய்தது, பிரம்மாவினால் கொடுக்கப்பட்டது” என்றார். வில்லுடன் கூடவே அம்புகள் கொடுக்க வேண்டும் அல்லவா ? அகஸ்தியர் நிறைய அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியைக் கொடுத்தார். ராமர் அதையும் வாங்கிக்கொண்டார்.
அகஸ்தியர் “இந்தக் கூர்மையான அம்புகள் அக்னி போல ஒளிவீசும். இவை இந்திரனால் கொடுக்கப்பட்டது. இந்த அம்புறாத்தூணியில் அம்புகள் எடுக்க எடுக்கக் குறையவே குறையாது!” என்றார். ராமர் அதை முதுகில் மாட்டிக்கொண்டார். அடுத்து அகஸ்தியர் தங்கத்தால் செய்யப்பட்ட ரத்தினங்கள் பதித்த கத்தி ஒன்றைக் கொடுத்தார். ”ராமா இந்த வில், அம்புகள் கத்தியைக் கொண்டு தான் மகாவிஷ்ணு அசுரர்களைக் கொன்று தேவர்களை முன்பு காப்பாற்றினார்” என்றார்.

இந்த ஆயுதங்களைப் பார்த்து ராமர் ”பதினான்கு வருடம் காட்டில் இருக்க வேண்டும். எனக்கு மீதம் இரண்டரை வருடம் பாக்கி இருக்கிறது எதற்கு எவ்வளவு ஆயுதம்?” என்று ராமர் யோசித்தார். முனிவர் “ராமா இது எதிரிகளைக் கொல்லுவதற்குப் பிற்காலட்தில் உனக்கு உதவும். என்றும் மங்கலம் உண்டாகுக” என்று வாழ்த்தினார்.
அகஸ்திய முனிவர் ஞானக் கண்ணால் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகப் போகிறான். ராமர் வதம் செய்யப் போவதையும் அறிந்தார். அதனால் ராமருக்குத் தேவையாக ஆயுதங்களை அன்புடன் கொடுத்தார். ராமர் அகஸ்தியரைப் பார்த்து “தங்களுடைய தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். உங்களைத் தரிசனம் செய்ததால் பரிசுத்தம் ஆனேன்” என்று அவரை வணங்கி விடைபெற்றார்.
“சாமி!, அகஸ்தியரைப் போல நான் ராமருக்கு எந்த உபகாரமும் செய்யவில்லையே!, அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள். “பிள்ளாய்! உன் கதையைக் கேட்கும்போது எனக்குக் குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருகிறார்!” என்றார். “சாமி அதைச் சொல்லுங்களேன்!” என்றாள் அந்தச் சின்னப் பெண்ராமானுஜர் “’வண் தமிழ் மாமுனி கொடுத்த வரி வில் வாங்கி’ என்று தமிழ் முனிவர் அகஸ்தியர் ராமருக்கு வில் கொடுத்ததை பற்றிக் கூறுகிறார் ஆழ்வார்” என்றார். “அருமை சாமி ! ” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
அப்போது ஒரு சிஷ்யர் “எனக்கு ஒரு சந்தேகம். பெருமாளுக்கு நாம் கொடுக்கும் வஸ்துக்களால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை!அகஸ்தியருக்கு ராமர் பரம்பொருள் என்று தெரியும், பிறகு ஏன் அவருக்கு இந்த ஆயுதங்கள் ?” என்றார்.
அந்தப் பெண் ராமானுஜர் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருக்க ராமானுஜர் புன்சிரிப்புடன் “ராமர் கடலரசனிடம் அணை கட்ட வழி விட வேண்டிக்கொண்டார். ஆனால் கடலரசன் வழி விடாமல் கொந்தளித்தான். ராமர் உடனே லக்ஷ்மணனிடம் வில்லைக் கொண்டு வா ! என்று கோபமாகக் கூற உடனே கடலரசன் நடுங்கிக்கொண்டு வழிவிட்டான். கடலரசன் எதற்குப் பயந்தான் ? வில்லுக்கா ? ராமருக்கா ? “ “ராமருக்குத் தான் சாமி!” என்றாள் அந்தச் சின்னப் பெண் ராமானுஜர் தொடர்ந்தார்.
“பெருமாளிடம் இல்லை என்பதற்காகவா நாம் கொடுக்கிறோம் ? நம் அன்புக்கும் பக்திக்கும் அடையாளமாக நமக்கு முடிந்ததைக் கொடுக்கிறோம். எதைக் கொடுத்தாலும் விரும்பி ஏற்றுக்கொள்கிறான். போன கதையில் அவல், இந்தக் கதையில் வில்!” என்றார். “மிக அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் சாமி!” என்றாள் அந்தப் பெண் மகிழ்ச்சியுடன்.
அப்போது இன்னொரு சிஷ்யர் “பெண்ணே! திருவரங்கத்தில் நம்பெருமாள் கையில் வைத்துள்ள ஆயுதங்கள் அழகுக்கு அல்ல, நம் போன்றவர்களைக் காப்பதற்கே. ஆனால் நம்பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறதே என்று எப்போதும் கையில் ஒரு கத்தி வைத்துக்கொண்டு ஒருவர் இருக்கிறார்!” என்றார்.
“அப்படியா ?” என்றாள் அந்தச் சின்னப் பெண் ஆச்சரியமாக. அந்தச் சிஷ்யர் தொடர்ந்தார் “நம்பெருமாள் வீதி புறப்பாட்டின்போது ஒருவர் கத்தியைப் பிடித்துக்கொண்டு கூட வருவார். பெருமாளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அந்தக் கத்தியால் தம்மைக் குத்திக்கொண்டு உயிரை விட்டு விடுவதற்கு எப்போதும் தயாராக இருப்பார்.
நம்பெருமாள் மீது அப்படியொரு பரிவு அவருக்கு! அவர் நம்முடன் இங்கே தான் இருக்கிறார்” என்றார் “யார் சாமி அது ?” என்று அந்தப் பெண் சுற்று முற்றும் பார்த்தாள்“இதோ இருக்கிறாரே பிள்ளை உறங்கா வில்லி தாசர். ராமானுஜரின் அந்தரங்க சிஷ்யர்களில் இவரும் ஒருவர்!” என்றார்.
அந்தப் பெண் தாசரை வணங்கி “அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!” என்றாள்.