தனி நபர் உரிமை மறுக்கப்பட்ட தேசம் – கியூபா : பகுதி -6 – ராமலிங்கம்
கியூபாவில் 2008 வரை பொதுமக்கள் மொபைல் போனை பயன்படுத்தத் தடை இருந்தது, இந்த காலக்கட்டங்களில் பொதுத் தொலைபேசி மற்றும் குறிப்பிட்ட அளவில் லேன்ட் லைன் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அனைத்து கணினி சம்பந்தப்பட்ட துறைகளும் இன்றும் அரசின் கடும் கண்காணிப்பில் உள்ளது. ஈமெயில்கள் நிறுவனங்களுடையதாக இருந்தாலும், தனி மனிதனுடையதாக இருந்தாலும் அரசின் கண்ணுக்குத் தெரிந்தே செல்லும். 2018 நிலவரப்படி 1.3 கோடி மக்கள் தொகையில், 5% மட்டுமே சொந்தமாக இணையசேவை பெற்றிருக்கிறார்கள். இன்றும் மொபைலில் இண்டர்நெட் என்பது ஆடம்பரம்.
இந்தியாவிலுள்ள கம்யுனிஸ்டுகள் பேசுவதைப் பார்க்கிற ஒருவனுக்கு , கம்யுனிஸ்டுகள் என்றால் கருத்துச் சுதந்திரப் போராளிகள் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டியமைத்துள்ளார்கள். குறிப்பாக தமிழக ஊடகங்கள் இவர்களை அப்படியான இடத்தில் அமர்த்தி பெருமை கொள்கிறார்கள். என் உடை, என் உணவு, என் சுதந்திரம் என அத்தனையையும் பேசித் திரிபவர்கள் தாங்கள் கடன் வாங்கிய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கம்யுனிஷ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் இணைய சேவையைக் கொடுப்பதில் கூட எப்படிப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது என்பதற்கு மேற்கூறிய விஷயமே ஒரு சான்று,
சிலையில் இருந்த கண்ணாடி திருடுபோவதைத் தடுக்க தனி பாதுகாவலரையே போட்டது அரசு. 2007 முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு பாலின மாற்று அறுவைசிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது ஆண் பெண்ணாக மாறுவதும், பெண் ஆணாக மாறவும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மாறலாம். இது சட்டப்படி அனுமதிக்கப்பட்டது. மேலும் இதற்கான சிகிச்சை செலவு கூட இலவசம் தான். தனிமனித நிகர வருமானம் என்பது சோமாலியாவுக்கு சமமாக 20 டாலர் மட்டுமே. கேட்டால் கல்வி, மருத்துவம் இலவசம் என்பார்கள். நமது ஊரில் பெண்குழந்தைகள் வயதுக்கு வருவதை உறவுகளை அழைத்து சடங்கு செய்வது போல், கியூபாவில் பெண்கள் 15 வயதைக் அடைந்துவிட்டால் விழாவாக கொண்டாடுகிறார்கள். இதற்கு அரசின் அனுமதி பூரணமாக உண்டு. இந்தியாவில் பெண் அடிமை முறையின் தொடர்ச்சி என்பவர்கள் கியூபாவின் இந்தச் சடங்குக்கு என்ன பெயர் வைப்பார்கள்?
அமெரிக்காவைப் போல் பன்றி இறைச்சி அதிகம் உட்கொள்ளும் நாடு. (இது வெறும் தகவலுக்காக மட்டுமே) மத வழிபாடுகள், சடங்குகள் அனைத்தும் இங்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிக கிறிஸ்தவர்களை உடைய நாட்டில் கிறிஸ்மஸ் விடுமுறையே 2010க்குப் பின்பு தான் அனுமதிக்கப்பட்டது எனில் இங்கு மைக்செட் கதறவிட்டு மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றுவது, ஐந்து வேலை தொழுகை எல்லாம் வேலைக்கு ஆகாது. பெரிய அளவில் கொலை போன்ற குற்றங்கள் குறைவு என்றாலும், திருட்டு, பிக்பாக்கெட்டிங், அடுத்தவர் உடமையை பறித்தல் மற்றும் பொது இடங்களில் தாக்கப்படுவது போன்ற அத்துமீறல்கள் இங்கு சகஜமாக நடைபெறுகிறது. இரண்டு வகை நாணயங்கள் பயன்படுத்தப்படுவதால் நாணய மோசடிகள் பொதுவாக பெருநகரம், சிறுநகரம் என்றில்லாமல் அனைத்து இடங்களிலும் உள்ளது. நோய் அதிகம் உள்ள இடத்தில தான் மருத்துவனுக்கு வேலை என்பதுபோல அதிக மருத்துவர்களை கொண்ட கியூபாவில் நோயாளிகளின் எண்ணிகையும் அதிகம் தான்.
இங்கு 80% உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. கியூபன்கள் அதிக கலோரி உள்ள உணவுகள் எடுத்துகொண்டாலும், மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு பெருமளவு உள்ளன. இதன் காரணமாக அதிக உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயாளிகள் வருகை நாளுக்கு நாள் அதிகமாவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மொத்தத்தில் சுலபமாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடந்த 60 வருடமாக நோய் உருவாகும் காரணம் அறிந்து அதைச் சரிசெய்தால் மக்கள் நோயாளிகள் ஆவது குறையும் என்பதை நோக்கி செயல்படாமல், நோய் பரப்பும் காரணிகளை அப்படியே இருப்பில் வைத்துக்கொண்டு மருத்துவர்கள் எண்ணிகையை மட்டுமே அதிகரித்து பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவம் மட்டுமே பார்த்துக்கொண்டிருகிறது கியூபா.
கம்யுனிஷம் புரட்சியின் விதை என்பார்கள். புரட்சியே மனித வாழ்க்கையில் சரித்திரத்தைப் புரட்டிப் போடும் வழிமுறை என்று தத்துவம் பேசும் கம்யுனிஷம். ஆனால் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த பின்னர், இதே கம்யுனிஷ நாடுகளில் அதன் தலைவர்கள் ஸ்டாலின் முதற்கொண்டு இன்றைய ஜின் பிங் வரையிலும் அதன் பிறகு அத்தகைய புரட்சி சிந்தனைகள் மக்களிடத்தில் வரவே கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதன் ஒருபகுதிதான் இணைய சேவையைக் கொடுப்பதிலும், மக்களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிப்பதிலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள் என்பது கண்முன் நாம் காணும் காட்சிக்கான சான்றுகள்.