ஆன்மிகம்

மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே!

இந்திரத்யும்னன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். சிறந்த திருமால் பக்தன். தினமும் காலைப் பூஜை முடித்துவிட்டுத் தான் மற்ற காரியங்களில் ஈடுபடுவான். ஒரு நாள் அகத்திய முனிவர் அரசனைப் பார்க்க வந்தார். அப்போது அரசன் பூஜையிலிருந்தான். முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. தன்னை வரவேற்கவில்லை, கவனிக்கவில்லை என்று முனிவர் தப்பாகப் புரிந்துகொண்டு ‘யானையாகப் பிறப்பாய்’ என்று அரசனைச் சபித்தார்.

அரசன் ஒன்றும் சொல்லாமல் சாபத்தை ஏற்றுக்கொண்டான். கஜேந்திரன் என்ற யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தாலும் திருமாலிடம் இருந்த பக்தி குறையவில்லை. தினமும் மலை அடிவாரத்தில் இருக்கும் தாமரைக் குளத்தில் இறங்கி அங்கே அழகாகப் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு அர்ப்பணித்து வந்தான்.

ஒரு நாள் பூப்பறிப்பதற்காகத் தாமரைக்குளத்தில் இறங்கியது. அப்போது யானையின் காலை முதலை கவ்வியது என்று பெண் கதையை நிறுத்தினாள்.

“பிள்ளாய்! ஏன் கதையை நிறுத்துவிட்டாய் ?” என்றார் ராமானுஜர்”சாமி! யானைக் காலைக் கவ்விய முதலைப் பற்றி ஒரு கதை இருக்கிறது” என்று அந்தப் பெண் முதலை கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’ஹுஹு’ என்ற கந்தர்வன் மேல் உலகத்தில் வாழ்ந்துவந்தான். ஒரு சமயம் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தான். அதே குளத்தில் தேவலர் என்ற முனிவர் ஒற்றைக் காலால் தவம் செய்துகொண்டு இருந்தார். ஹுஹு தண்ணீருக்குள் சென்று முனிவரின் காலை விளையாட்டுக்காகப் பிடித்து இழுத்தான். முனிவரின் தவம் கலைந்தது. கோபம் வந்தது. உடனே ஹுஹு “தண்ணீருக்குள் முதலை மாதிரி வந்து காலை இழுத்தாய் அதனால் நீ முதலையாகப் போ!” என்று சாபம் கொடுத்தார்.

ஹுஹு முதலையாகப் பிறந்தான்.இந்த முதலை தான் யானையின் காலைக் கவ்வியது. யானை தன் பலத்தை எல்லாம் உபயோகித்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தது. முடியவில்லை. கூட இருந்த யானைகள் எல்லாம் கஜேந்திரனைக் கரைக்கு இழுத்தும் பயன் இல்லை. யானைக்குத் தரையில் பலம், முதலைக்குத் தண்ணீரில் பலம். யானைக்கும் முதலைக்கும் இழுபறி நீடித்தது.கூட இருந்த யானைகள் ஒன்றும் செய்ய முடியாமல் வருத்தத்துடன் சென்றன.

கஜேந்திரன் தன்னை தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் பல ஆண்டுகள் போராடியது. இறுதியில் சோர்வு ஏற்பட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றியது.

யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் “நாராயணா ! ஓ மணிவண்ணா வாராய் என் துன்பத்தை நீக்க வா!” என்று ஈனக்குரலில் அலறியது. ”ஆதிமூலமே! என்னைக் காக்க வா!” என்று அலறியது. அந்தச் சமயத்தில் பெருமாள் வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது படுத்துக்கொண்டு இருந்தான். கூடப் பெருமாளின் தேவியர்கள் பாதத்தின் பக்கம் வீற்றிருந்தார்கள். யானை குரல் மெல்லியதாகக் கேட்டவுடன், பெருமாள் சடக்கென எழுந்தான். ஏன் இப்படிப் பதறுகிறார் என்று தேவியர்களுக்குப் புரியவில்லை.பெருமாள் புறப்பட்டார்.

பெருமாள் புறப்படும் சமயம் விஷ்வக்சேனர் பெருமாளுக்கு கைக்கொடுத்து அழைத்துச் செல்வது வழக்கம். அதனால் அவர் கையை கொடுக்கப் பெருமாள் அதைக் கவனிக்காமல் அவசரமாகக் கருடன் இருக்கும் இடத்துக்கு ஓடினார். பெருமாள் வழக்கமாக அணியும் பாதுகை இல்லாமல் ஓடுகிறாரே என்று விஷ்வக் சேனரும் ஒன்றும் புரியாமல் முழித்தார்.

பெருமாளைப் பார்த்த கருடனுக்கு ஆச்சரியம். பெருமாள் அணிந்த ஆடைகள். மாலைகள் எல்லாம் கலைந்து இருந்தன. ராவணனை யுத்தத்தில் கூட ஆடைகள் கலையவில்லையே என்று கருடன் நினைக்க “பெருமாள் சீக்கிரம் சீக்கிரம்” என்று கருடன் மீது ஏறி அமர்ந்தார். ”எங்கே என்று சொன்னால் தானே அங்கே போக முடியும் ?” கருடனும் புரியாமல் முழிக்க.

பெருமாள் பொறுமை இழந்து கருடனை இடுப்பில் கைக்குழந்தை போல இடுக்கிக்கொண்டு ஓடினார். முனிவர்களும், தேவர்களும் இந்த காட்சியைப் பிரம்மிப்புடம் பார்த்தார்கள். தன்னைவிடப் பெருமாள் வேகமாக ஓடுகிறாரே என்று கருடனுக்கு வெட்கமாக இருந்தது.

பெருமாள் விரைந்து வந்து, ஆகாசத்திலிருந்து யானையைப் பார்த்தார். சக்கரத்தை ஏவினார். முதலை வாயைப் பிளந்தார், யானையை விடுவித்தார். யானைக்கு அப்போதும் மகிழ்ச்சி ஏற்படவில்லை. யானை தன் துதிக்கையில் வைத்திருந்த அந்த ஒற்றை தாமரை மலரைப் பெருமாளின் திருவடியில் சமர்ப்பித்தது, வணங்கியபின் தான் அதற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

யானையின் அன்பைப் பார்த்த பெருமாளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் பட்டு மேல்துண்டை உருவினான். வாயில் வைத்து ஊதி இளம் சூட்டில் யானையின் கால் புண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தான்.“சாமி! நீங்களே சொல்லுங்கள் ஒரு விலங்கான யானைக்கு இருந்த பக்தி கூட என்னிடம் இல்லையே ! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள் அந்தக் குட்டிப் பெண்

ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார். “சாமி ! என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள் அந்தச் சுட்டிப் பெண்ராமானுஜர் “பெண்ணே நீ சொன்ன கதையைக் கேட்டுக் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அட்டபுயகரம் பெருமாள் நினைவுக்கு வந்தார்” என்றார்.

“ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்“அங்கே இருக்கும் பெருமாளுக்கு எட்டு கை. எட்டு கைகளிலும் எட்டு ஆயுதங்களை வைத்திருப்பான். யானைக்கு என்ன தீங்கு ஏற்பட்டதோ என்று பரபரப்பில் கையில் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு போனானாம்”

“அருமை சாமி!” என்றாள் அந்த சின்னப் பெண். ராமானுஜர் ”ஏன் யானை ஆதிமூலமே!” என்று கூப்பிட்டது ? தெரியுமா ?”“நீங்க சொல்லுங்க சாமி !” என்றாள் அந்த சின்னப் பெண்.

“சொல்லுகிறேன். உன் தாய் தந்தையர் மூலம் நீ பிறந்தாய். உனக்கு அவர்கள் மூலம். அவர்களுக்கும் மூலம் உண்டு. எனக்கும் உண்டு. இங்கே இருக்கும் என் சிஷ்யர்களுக்கும் உண்டு. நமக்கு நிழல் கொடுக்கும் இந்த மரத்துக்கும் உண்டு… மற்ற தேவதைகள், தேவர்கள், முனிவர்கள் எல்லோருக்கும் ஒரு மூலம் உண்டு. ஆனால் திருமாலுக்கு மட்டும் மூலமும் இல்லை முடிவும் இல்லை!” என்றார்.

அப்போது ஒரு சிஷ்யர் “ஒரு சந்தேகம் கேட்கலாமா ?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார். “பெருமாள் ஏன் பரபரப்பாக ஓட வேண்டும் ? அவர் நினைத்தால் இருந்த இடத்திலிருந்தே முதலையைக் கொன்றிருக்கலாமே ?” என்றார்.

ராமானுஜர் குட்டிப் பெண்ணைப் பார்த்தார்.அவளும் அதைப் புரிந்துகொண்டு புன்னகையுடன் ”பெருமாள் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் யானை தன் உயிரைக் காத்துக்கொள்ளப் பெருமாளைக் கூப்பிடவில்லையே! பெருமாளைச் சேவித்து அவன் பாதங்களில் பூவை அர்ப்பணிக்க யானை ஆசைப்பட்டது. அந்த ஆசையை நிறைவேற்றத் தான் பெருமாள் வேகமாக நேரில் வந்தார்!” என்றாள்.

ராமானுஜர் “குழந்தாய்! என்ன அருமையாகக் கதையைப் புரிந்து வைத்திருக்கிறாய்! பெருமாள் சூடாக ஒத்திடம் கொடுத்தாலும், சந்தனம் பூசியது போலக் குளிர்ச்சியாக இருந்தது யானைக்கு!” என்றார்.

உடனே அந்தப் பெண் “பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!” என்றாள்ராமானுஜர் புன்னகையுடன் அடுத்த கதையைக் கேட்கத் தயாரானார்.

(Visited 132 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close