கழகக்கூடாரத்தில் கலவரம் – IV
தமிழக பாஜகவின் தலைவர் பதவிக்கு, கட்சியில் கடும்போட்டி நிலவியது என்பதும், போட்டியிலிருந்த ஒவ்வொருவரும் மத்திய தலைமைக்கு தங்களால் இயன்றளவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர் என்பதும் வெளிப்படை. இந்தப் பட்டியலில் இல்லாத சிலரும் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதையும், தூதுக்குழுக்களை அனுப்புவதுமாக இருந்ததும் மிகப்பெரிய ரகசியங்களுமல்ல. ஆனால், மதுரையைச் சேர்ந்த மகாலட்சுமி, தலைவர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக, பகீரங்கமாகத் தெரிவித்த காமெடியைத் தொடர்ந்து, மத்திய தலைமை ஒரு விஷயத்தைத் தெளிவாக்கியது. ஏற்கனவே, டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் இருமுறை தொடர்ச்சியாகத் தலைவராகப் பணியாற்றிவிட்டதால், அடுத்து தலைவராக வரவிருப்பவர் நிச்சயம் ஒரு பெண்மணியாக இருக்க மாட்டாரென்பதை மட்டும் போட்டியிலிருந்தவர்களுக்குத் தெளிவுபடுத்தியது. அதுவரையில், சற்று நம்பிக்கையுடன் இருந்த வானதி சீனிவாசன் போன்றவர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக விழுந்தது.
வலம்வந்து கொண்டிருந்த பல பெயர்களில், இறுதியாக ஏ.பி.முருகானந்தம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரின் பெயர்கள் மட்டுமே பரிசீலனையில் இருப்பதாகக் கட்சிவட்டாரங்களுக்குத் தெரியவே, சிலரின் உற்சாகம் காற்றோடு காற்றாகக் கலந்தது. சங்க்-பரிவாரைச் சேர்ந்தவர்; இளைஞர்; துடிப்பாகப் பணியாற்றுகிறவர் என்பதால் முருகானந்தம் பெயரையும், அதிமுகவில் பல முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட ஏற்று நடத்தியவர், பல தேர்தல்களின் வழிகாட்டுதல் குழுக்களுக்குத் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர் என்பதாலும், முக்குலத்தோர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்குடையவர் என்பதாலும் நயினார் நாகேந்திரனின் பெயரையும் பரிசீலனைக்கு வைத்திருந்தார்கள். ஆனால், 2021- சட்டமன்றத் தேர்தலை விரைவில் எதிர்கொள்ள வேண்டுமென்பதால், தேர்தல் அனுபவம் மிக்கவர்; அதிமுகவிலும் கணிசமான செல்வாக்குடையவர்; கூட்டணிக்கட்சிகளை அரவணைத்துச் செல்லுகிற தேர்தல் உத்தி தெரிந்தவர் என்பதால், நயினார் நாகேந்திரனையே மாநிலத் தலைவராக நியமிப்பது என்று டெல்லி பாஜக கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கே வந்துவிட்டிருந்தது. இது குறித்து ஊடகங்கள் சிலவற்றில் செய்திகளும் வரத்தொடங்கின என்பது நினைவுகூரத் தக்கது.
ஆனால், மற்றவர்கள் விக்கிரமாதித்தர்களைப்போல விடாமுயற்சியுடன் மத்திய தலைமையுடன் மல்லுக்கட்டி வந்தனர். சாம,பேத,தான,தண்டம் எனப்படும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு மத்திய தலைமையை வழிக்குக் கொண்டுவர முயன்றனர். அதிகாரபூர்வமான அறிவிப்பு வருவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, எச்.ராஜா தலையில் கிரீடம் அணிந்திருப்பதுபோல ஒரு படத்தை எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதும், எச்.ராஜா நியமிக்கப்பட்டு விட்டாரென்று பாராட்டுத்தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வேகவேகமாகப் பரவிய தகவலும், டெல்லியை மூக்குக்கு மேல் கோபப்பட வைத்தது. விளைவு? எல்.முருகன் நியமிக்கப்பட்டார்.
தமிழக பாஜக பிரமுகர்களுக்கு மட்டுமின்றி, தனித்தனிக்குழுக்களாய்ப் பிரிந்து, மாநிலத் தலைவர் நியமனத்தைக் கேலிக்குரியதாக்கிய பாஜக சமூகவலைத்தள ஆதரவாளர்களுக்கும் டெல்லி ஒரு அதிரடியான செய்தியை அறிவித்தது. ‘எங்களுக்குத் தெரியும் எப்படிக் கட்சியை நடத்துவதென்று!’
எல்.முருகன் அவர்களுக்கு முந்தைய தமிழக பாஜக, அந்தக் கட்சிக்காரர்களின் விமர்சனங்களுக்கே அதிகம் இலக்காக இருந்து வந்திருக்கிறது. மோடி ஆதரவு என்ற நிலையில் உறுதியாக இருந்தவர்களும், இருப்பவர்களும் தமிழக பாஜகவின் செயல்பாடுகளை மிகமிகக் கடுமையாக விமர்சித்து வந்ததையும், வருவதையும் காண முடிகிறது. எனவே, பிற மாநிலங்களைப் போன்று, தமிழக பாஜகவில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியாத முந்தைய தலைமைகளின் இயலாமையை எளிதில் மறைத்துவிட முடியாது. அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டு, பிற விஷயங்களில் முரண்படுகிற வினோதமான போக்கு, சமூகவலைத்தளங்களில் மட்டுமின்றி, தமிழக பாஜகவின் தலைமை நிர்வாகிகள் மத்தியிலும் காணப்பட்டது வேதனையான உண்மை. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடங்கி, 2019 பாராளுமன்றத் தேர்தல்வரையிலும், தமிழக பாஜக பெரும்பாலும் அவிழ்த்துப்போட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போலவே இயங்கி வந்திருக்கிறது.
கீழ்ப்படிதல் என்ற அருங்குணம், தமிழக பாஜகவில் காணக்கிடைக்காத அபூர்வமாகவே கருதப்பட்டு வந்தது. இதற்கு முக்கியமான காரணம், பிற மாநிலங்களைப் போல சங்க் பரிவாருக்கு உரிய அதிகாரம் மற்றும் மரியாதையை தமிழக பாஜகவின் தலைமை அளிக்கத் தவறியது. ஒருங்கிணைந்து பணியாற்றுகிற திறனுக்கு தமிழக பாஜவில் கண்ணுக்கெட்டிய வரையில் எந்த உதாரணமும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர், நெல்லை கண்ணனைக் கைது செய்யக்கோரி தமிழக பாஜகவினர் நடத்திய போராட்டம், பல வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளை மிஞ்சத்தக்கது. பாஜகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் பங்கேற்ற அந்தப் போராட்டத்தின்போதே, கட்சியைப் பீடித்திருந்த கோஷ்டிப்பூசல்கள், தொண்டர்களுக்கு மத்தியிலிருந்த விருப்பு வெறுப்பு அடிப்படையிலான பிளவுகள் ஆகியவை தெள்ளத்தெளிவாகக் காணக்கிடைத்தன.