இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுக நம்பியைப் போலே!
“சாமி! இது ராமானுஜருடைய சீடர் வடுக நம்பியைப் பற்றிய கதை. மதுரகவி ஆழ்வார் எப்படி நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒருவரையும் தெய்வமாகக் கொள்ளாமல் “’தேவு மற்று அறியேன்’ ” என்று இருந்தாரோ, அதுபோல வடுக நம்பியும் ராமானுஜரே என் தெய்வம் என்று இருக்கிறார்” என்றபோது ராமானுஜர் புன்முறுவலோடு தன் சிஷ்யர் ஒருவரைப் பார்த்தார்.
ராமானுஜர் ஏன் புன்னகை செய்கிறார் என்று புரியாமல் அந்தப் பெண் தொடர்ந்தாள்.
ஒரு முறை திருவெள்ளறைக்கு ராமானுஜரும் அவருடைய சீடர்களும் புறப்பட்டார்கள். ராமானுஜர் தன் தினமும் பூஜை செய்யும் வரதராஜ பெருமாளை வடுக நம்பியிடம் கொடுத்துக் கூடையில் வைக்கச் சொன்னார். ஒரு கூடையில் வடுக நம்பி பெருமாளுடன், உடையவர் திருவடிநிலைகளையும் ( பாதுகைகள் ) ஒன்றாகச் சேர்த்து வைத்தார். திருவெள்ளறையை அடைந்து ராமானுஜர் “வடுகா! பெருமாளைக் கொண்டு வா!” என்று கூற வடுக நம்பி கூடையைத் திறந்தார். முதலில் ராமானுஜருடைய திருவடிநிலைகளை வெளியே எடுத்தார். பிறகு பெருமாளை வெளியே எடுத்தார். இதைப் பார்த்த ராமானுஜர் திடுக்கிட்டு “வடுகா! என்னுடைய நிலைகளையும் பெருமாளையும் இப்படி ஒன்றாக வைப்பது தகுமோ?” என்று வருத்தப்பட்டார். இதற்கு வடுக நம்பி “அது உங்களுடைய பெருமாள், உங்கள் திருவடிநிலைகள் என்னுடைய பெருமாள்!” என்றார்
.சிஷ்யர்கள் எல்லோரும் அமைதியாக இருக்க அந்தப் பெண் “இன்னொரு சம்பவம் இருக்கிறது. ஒருமுறை வடுக நம்பி தன் சிஷ்யர் நாராயணா என்ற நான்கு எழுத்து எல்லாம் தரும் என்றார். பக்கத்தில் இருந்த வடுட நம்பி ராமானுஜர் என்ற நான்கு எழுத்து நாராயணனையே தரும். அதனால் அதற்குத் தான் மேன்மை என்றார். அது மட்டும் இல்லை சாமி! திருவரங்கத்தில் ஒரு முறை ராமானுஜருடன் பெரிய பெருமாளைச் சேவிக்க வடுக நம்பியும் கூடச் சென்றார்.
உடையவர் பெருமாளைப் பார்த்துத் திருப்பாணாழ்வார் பாசுரத்தைச் சேவித்து அனுபவித்தார். ஆனால் வடுக நம்பி ராமானுஜருடைய வடி வழகைச் சேவித்துக்கொண்டு இருந்தார். இதைக் கவனித்த ராமானுஜர் “பெருமாளுடைய கண்ணழகைப் பார்” என்றார். அதற்கு வடுக நம்பி “என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே.” என்று ராமானுஜரைப் பார்த்துச் சொன்னாராம்.
ஒரு சிஷ்யர் “பெண்ணே! வடுக நம்பியைப் பார்த்திருக்கிறாயா ?” என்றார் சிரித்துக்கொண்டே“இல்லையே சாமி! நான் ராமானுஜரையும் அவருடைய சிஷ்யர்களையும் ஒரு முறை சேவிக்க வேண்டும்! என்று அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ!” என்றாள்.
”கதைகள் முடிந்ததா இன்னும் இருக்கா ?” என்றார் ராமானுஜர்”இன்னொரு மிக அதிசயமான சம்பவம் இருக்கிறது கேளுங்கள்” என்று அந்தப் பெண் சொல்ல ஆரம்பித்தாள்.
ஒருமுறை ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மநாபனைச் சேவித்தார். அங்கே சில காலம் தங்கினார். கோயிலில் சில மாற்றங்களைச் செய்ய முற்பட்டபோது அங்கே இருந்த நம்பூதிரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாளிடம் முறையிட்டனர். பெருமாளும் நம்பூதிரிகள் நமக்குப் பல காலமாகத் தொண்டு புரிகிறார்கள் என்று அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டார்!.
ராமானுஜர் இரவு படுத்துறங்கும்போது இரவோடு இரவாக அவரைக் கருடாழ்வார் திருவனந்தபுரத்திலிருந்து திருக்குறுங்குடியில் ஒரு சிறு கற்பாறையின் மீது கிடத்திவிட, காலை விழித்தெழுந்த ராமானுஜர் இடம் மாறியதைக் கண்டு “வடுகா! வடுகா!” என்று அழைத்தார். உடனே திருக்குறுங்குடி பெருமாள் திருக்குறுங்குடி நம்பி, வடுக நம்பியாய் உருவெடுத்துக் கைக்கட்டி வாய் பொதித்து, குனிந்து ”அடியேன்! தாசன்” என்று வடுக நம்பிபோலப் பணிவன்புடன் வந்து நின்றார்.
“திருவனந்தபுரம் பெருமாளுக்கு நாம் செய்யும் மாற்றங்கள் பிடிக்கவில்லை போலும்! பெருமாளின் ஆசை அப்படி என்றால் நாம் என்ன செய்ய முடியும்” என்று அங்கே இருக்கும் ஆற்றில் குளித்து முடித்துவிட்டு திருமண்காப்பு தரித்துக்கொண்டார்.
”வடுகா ! இங்கே வா!” என்று வடுக நம்பிக்கும் தன் கையால் திருமண்காப்பு சாத்தினார். ( ராமானுஜர் தினமும் தரித்துக்கொண்ட பின் தினமும் அவர் கையால் வடுக நம்பிக்கும் இட்டுவிடுவார்) . ஆனால் வடுக நம்பிபோல வந்திருப்பவர் திருக்குறுங்குடி நம்பி ஆயிற்றே.ராமானுஜர் குளித்து முடித்தபின் ராமானுஜரின் காவி வஸ்திரங்களை வடுக நம்பி தான் தினமும் துவைத்து ஆறப்போடுவார். வடுக நம்பி போல வந்த திருக்குறுங்குடி நம்பி அன்று அந்த வேலைகளையும் செய்தார்.
ராமானுஜரும் வடுக நம்பிபோல வந்திருக்கும் திருக்குறுங்குடி நம்பியுடன் கோயிலுக்குப் பெருமாள் சேவிக்கச் சென்றபோது பக்கத்தில் இருந்த வடுக நம்பியைக் காணாமல் இங்கும் அங்கும் தேடியபோது பெருமாள் நெற்றியில் ராமானுஜர் சாத்திய திருமண் காப்பு ஈரமாக இருக்க ராமானுஜர் புரிந்துகொண்டார். அன்று திருக்குறுங்குடி நம்பி ராமானுஜர் சாத்திய திருமண்காப்பினால் ‘அழகிய நம்பி’யாகக் காட்சி அளித்தார்.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் தன் குருவான ராமானுஜரைக் காணாமல் வடுக நம்பியும் மற்ற சிஷ்யர்களும் பதட்டமாக இருக்க, திருக்குறுங்குடியில் உடையவர் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே நடையாய் நடந்து, நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். ராமானுஜர் தான் திருக்குறுங்குடி பெருமாளுக்கே ஆசாரியன் அதனால் திருக்குறுங்குடி நம்பிக்கு ’ஸ்ரீ வைஷ்ணவ நம்பி’ என்ற பெயரும் வந்தது.
ஒரு முறை திருவரங்கத்தில் உற்சவம். நம்பெருமாள் வீதியில் உலா வந்தார். ராமானுஜர் தங்கியிருந்த மடத்தின் வாசலில் பெருமாள் வந்தபோது எல்லோரும் வீதியில் வந்து பெருமாளைத் தரிசித்தார்கள்.
வடுக நம்பியை மட்டும் அங்கே காணோம். ராமானுஜர் “வடுகா! பெருமாளைச் சேவிக்க வா” என்று அழைக்க, உள்ளிருந்து வடுகநம்பி “நான் என் பெருமாள் ராமானுஜருக்காகப் பால்காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். உம்முடைய பெருமாளைச் சேவிக்கவந்தால், என்னுடைய பெருமாளுக்குப் பால் பொங்கிவிடுமே!” என்று உள்ளிருந்து பதில் சொன்னார்.
“சாமி! வடுக நம்பிபோல ஆசாரிய அபிமானம் எனக்கு இல்லையே ! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்.
”பிள்ளாய்! ! உங்கள் ஊர் ஆழ்வாருக்குச் சளைத்தவர் இல்லை வடுக நம்பி !” என்றார் ஒரு சிஷ்யர் சிரித்துக்கொண்டே“ஏன் சாமி ?” என்றாள் அந்தப் பெண் புரியாமல்.
“பெண்ணே! உங்கள் ஊர் ஆழ்வார் மதுரகவிகள் ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்கு வரும்போது நேராகப் பெருமாள் இருக்க அவர் எங்கே பெருமாளை முதலில் பார்த்துவிடப் போகிறோமோ என்று ஓரமாக வந்து முதலில் நம்மாழ்வார் சந்நிதிக்கு தான் போவார்!” என்றார்,
அப்போது ஒரு சிஷ்யர் “ஆசாரியன் திருவடியைப் பிடித்துக்கொண்டால், நாம் பெருமாளைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் பெருமாளே நம்மைப் பிடித்துக்கொள்வார்!” என்றார்.
அந்தப் பெண் “இருமிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே!” என்றாள்.