கழகக்கூடாரத்தில் கலவரம் – VII
திமுகவை ஒரு பெருந்துயரம் ஆட்கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்தப் பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது. திரு. ஜே.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பலியானது, கட்சிகளையும் கடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல், வெறும் சம்பிரதாயமானது என்று கருதுவதற்கில்லை; உண்மையிலேயே, ஜே.அன்பழகனின் மறைவு, திமுகவுக்கு பெருத்த இழப்பு என்பதை மறுக்கவியலாது. மறைந்த ஜே.அன்பழகனுக்கு, பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளும் இரங்கல் தெரிவித்திருப்பதையும் வெறும் சடங்காகவோ, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாகவோ கடந்து செல்லக்கூடாது. திருவல்லிக்கேணி தொகுதியில் அவரது வெற்றிக்கு, கட்சி அபிமானம் கடந்தும் பரவலான ஆதரவு கிடைத்திருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதற்கொப்ப, அவரும் சில விழாக்களில் பங்கேற்றதையும், விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்ததால் எழுந்த சர்ச்சையின்போது விளக்கமளித்ததையும் மறந்து விடுவதற்கில்லை.
குறிப்பாக, பாஜக கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஜே.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருப்பது, அரசியல் நாகரீகத்துக்கு உரமேற்றுவதாகவும், தமிழக அரசியலில் கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பாலும், ஒரு கட்சியின் இழப்பின்போது அந்தத் துயரத்தில் பங்கேற்கின்ற ஆரோக்கியமான சூழலை வளர்க்கத்தக்கதாகவும் காணுதல் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும். இவ்விஷயத்தில், சமூக வலைத்தளங்களில், பாஜக அனுதாபிகள் பரவலாக வெளிப்படுத்தி வருகின்ற காழ்ப்புணர்ச்சி மிகுந்த கருத்துகள் வருந்தத்தக்கவை. இதற்கு முன்பு, சில பாஜக தலைவர்கள் காலமானபோதும் சரி; பிரதமர் மோடி ஒரு முறை தடுமாறியபோதும் சரி; தமிழகத்தில் பல வன்மம் நிறைந்த கருத்துக்கள் வெளிப்பட்டன என்பது உண்மைதான். ஆயினும், அதற்குப் பழிதீர்ப்பதற்கு திமுகவின் ஒரு முக்கிய பிரமுகரின் மறைவைப் பயன்படுத்துவது ஒரு தேசியக்கட்சிக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்காது.
பிரதமர் மோடியே கூட, நோய்வாய்ப்பட்டிருந்த கலைஞரை நேரில் வந்து சந்தித்த்தையும், தன்னோடு டெல்லிக்கு வருமாறு அழைத்ததையும், கலைஞர் மறைந்ததும் அஞ்சலி செலுத்த நேரில் வந்ததையும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியதையும் தமிழக பாஜக அனுதாபிகள் நினைவுகூர வேண்டியது அவசியமாகும். அத்தகைய அணுகுமுறை இல்லாமலிருப்பது, மத்திய தலைமைக்கும், தமிழக பாஜகவுக்கும், தமிழக பாஜக அனுதாபிகளுக்கும் நடுவில் இருக்கிற மிகப்பெரிய இடைவெளியையே குறிப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது.
வாஜ்பாயின் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்ததை அவ்வப்போது தமிழக பாஜக மற்றும் திமுக இரு கட்சியினருமே நினைவுபடுத்திப் பார்த்தல் மிகவும் அவசியமாகும். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற காலகட்டத்தில், தொண்டர்களின் ஆர்வக்கோளாறு அரசியல் சாத்தியங்களுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டியதே காலத்தின் கட்டாயமாகும். வி.பி.துரைசாமி பாஜக-வில் இணைந்தது தமிழக அரசியலில், சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை பாஜக மாநிலத் தலைமை நன்கு அறிந்து வைத்திருக்கிறது. இதை தமிழக பாஜக அனுதாபிகளில் பலர் விமர்சித்து வருவதும் அவர்கள் அறியாததல்ல. ஆனால், மேலும் பலர் திமுகவிலிருந்து, வேறு கட்சிகளுக்குச் செல்லாமல், பாஜக-வுக்கு வருவது, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால், இவ்விஷயத்தில் பாஜகவுக்குள் ஏற்படக்கூடிய சலசலப்புகள் குறித்து மத்திய தலைமையோ, மாநில தலைமையோ அதிகம் கவலைப்படாமல், அலட்சியப்படுத்தவே அதிகம் வாய்ப்புகள் உள்ளன.
திமுகவிலிருந்து மேலும் பல பெரும்புள்ளிகள், பாஜக-வுக்குத் தாவுவார்கள் என்ற ஊகங்களும், அவற்றுக்கு உரமூட்டுவதுபோல, சில திமுக பெருந்தலைகள் பாஜக மத்தியத் தலைமையுடன் ரகசியமாகச் சந்தித்த செய்திகளும், அலட்சியப்படுத்தத் தக்கவையல்ல. கடந்த சில வாரங்களாகவே, திமுக-வுக்கும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்த செய்திகள் வெளிவந்தபோதும், திமுக அனுதாபிகள் சமூக வலைத்தளங்களில் ஆணித்தரமாக மறுத்து வந்திருப்பதையும், தற்போது வெகுஜன ஊடகங்களிலேயே கூட, பிரசாந்த் கிஷோர் விஷயம் வெளிப்படையாகப் பேசப்படுவதையும் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.
பிரசாந்த் கிஷோருடனான விஷப்பரீட்சை, திமுகவின் பலவீனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியதுடன், கட்சியை ஒரு கேலிப்பொருளாக்கியிருக்கிறது என்பதே உண்மை. சமூக வலைத்தளங்களை முன்னிலைப்படுத்தித் துவங்கிய இந்தப் பரப்புரைகள், பிரசாந்த் கிஷோரின் உத்திகளில் உள்ள அடிப்படைக்கோளாறுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. வட மாநிலங்களிலுள்ள தங்களது நிறுவனத்தின் பயனாளிகளைக் கொண்டு, தமிழகத்தில் திமுகவை ஒரு சிங்கமாகச் சித்தரிக்க முயன்ற பிரசாந்த் கிஷோரின் தந்திரங்கள் பரிதாபமாகத் தோல்வியடைந்திருப்பது, அறிவாலயத்துக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படை. ‘வேலியில் போகிற ஓணான்’ பழமொழியோடு ஒப்பிடுமளவுக்கு, பெருந்தொகையைச் செலவிட்டு திமுக முன்னெடுத்த இந்த முயற்சிகள், திமுக அனுதாபிகளுக்கே மிகுந்த சங்கடத்தை விளைவித்துள்ளன.
திமுகவின் மிகப்பெரிய பலம் என்பது, கட்சித்தலைமைக்குக் கட்டுப்பட்டு, உத்தரவுகளை அப்படியே நிறைவேற்றுகின்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்பதை மாற்றுக்கட்சியினர்கூட மறுப்பதற்கில்லை. ஆனால், கலைஞரின் மறைவுக்குப் பிறகு, கட்சித்தலைமை சற்றே வலுவிழந்திருப்பதை உணர்த்துவதுபோன்ற சில நிகழ்வுகள் நடந்திருப்பதையும் ஒட்டுமொத்தமாக பூசிமெழுகுவதற்கும் வாய்ப்பில்லை. கலைஞர் மறைவுக்குப் பிறகு, திமுக தலைமையின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள், கட்சியிலுள்ள சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு சற்றே புதிராக இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ‘இந்து விரோதி’ என்ற பிம்பத்தை உடைப்பதற்கு திமுக முன்னெடுத்திருக்கிற நடவடிக்கைகளை, கூட்டணியிலுள்ள சில கட்சிகளே வரவேற்பதாகத் தெரியவில்லை. கட்சியின் அதிகாரப்பகிர்வுகளில் தலைமை தொடர்ந்து காட்டி வருகின்ற பாரபட்சமும், பரவலான முணுமுணுப்புகளை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு.
வழக்கம்போல, திமுக குறித்த விமர்சனங்களை மறுப்புக்குரியதாகவோ, நகைப்புக்குரியதாகவோ கருதுகிற உரிமை கட்சியினருக்கு உண்டு. ஆனால், நீறுபூத்த நெருப்புபோல, சில முரண்பாடுகள் தென்படுகின்றபோது அவற்றை அலட்சியம் செய்வது அரசியலில் மிகவும் அபாயகரமானது என்பதையும் அனுபவத்தில் திமுக அறிந்திருப்பதுபோல வேறு கட்சிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒருபுறம், பாஜக-வையும், பிரதமரையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டு, இன்னொரு புறம் பாஜகவின் மத்தியத் தலைமையை சில திமுகவினர் அவ்வப்போது தொடர்புகொண்டு வருவதெல்லாம் மிகப்பழமையான ராஜதந்திரம் என்பதை அரசியல் விமர்சகர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் தேசமே திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலிலும், பல மாநிலங்களில் அரசியல் நிகழ்வுகள் விறுவிறுப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ராஜ்ய சபா தேர்தல்கள் நடைபெறவுள்ள, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவை மிஞ்சிய அரசியல் ஜுரம் பற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களை விடுதிகளில் ஒளித்து வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மகாராஷ்ட்ரா அரசியலிலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, இயற்கைப் பேரிடர்கள் போன்ற சூழல்களிலும்கூட, அரசியல் சூடு தணிந்து காணப்படுவதில்லை; மாறாக, அத்தகைய காலகட்டங்களும்கூட அரசியலுக்கு மிகவும் சாதகமாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பது கண்கூடு.
அரசியலில் நிரந்தர எதிரியோ நண்பரோ இல்லை என்பதை பல அரசியல் கட்சிகள் அறிந்து வைத்துள்ளனர். சிலர், காலம்கடந்தே புரிந்து கொள்கின்றனர்.
(முற்றும்)