ஆன்மிகம்

அவன் போனான் என்றேனோ மாருதி ஆண்டான் போலே !

“சாமி! ராமானுஜர் சோழ மன்னன் கொடுத்த தொல்லையினால் திருவரங்கத்தைவிட்டு மேலை நாட்டில் உள்ள மேல்கோட்டைக்கு சென்றார் என்று முன்பு பார்த்தோம்” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.

”ஆம் பெண்ணே! ராமானுஜர் திருநாராயணப் பெருமாள் கண்டு எடுத்தது, செல்லப் பிள்ளையை வட தேசத்திலிருந்து அழைத்து வந்தது எல்லாம் அழகாகச் சொன்னாயே!” என்றார் ஒரு சிஷ்யர்.

”ராமானுஜர் மேல் கோட்டையில் திருநாராயணப் பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருந்தாலும் அவர் திருவரங்கன் நினைவாகவே இருந்தார். சோழ அரசன் இருக்கும் வரை அங்கே செல்ல முடியாத சூழ்நிலை. எப்போது திருவரங்கத்துக்குப் போகலாம் என்று தினமும் ஏங்கிக்கொண்டு இருந்த சமயம் ஒரு நாள் வைணவ அடியார் ஒருவர் மேல்கோட்டைக்கு விஜயம் செய்தார்.

பெருமாளை அங்கே சேவித்துவிட்டு. ராமானுஜர் அங்கே இருக்கிறார் என்று தெரிந்து அவர் மடத்துக்குச் சென்று அவரை வணங்கி “நான் திருவரங்கத்திலிருந்து வருகிறேன்” என்ற சொன்னதுடன் ராமானுஜருக்கு மிகுந்த சந்தோஷம்.

திருவரங்கம் எப்படி இருக்கிறது. கூரத்தாழ்வானும் பெரிய நம்பிகளும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வைணவ அடியார் கண்களில் கண்ணீருடன் “உங்களுக்குப் பதிலாகக் கூரத்தாழ்வானும் கூடப் பெரிய நம்பிகளும் அரசவைக்குச் சென்றார்கள்.

அங்கே ஆழ்வானிடம் ‘சிவனே பரம் பொருள்’ என்று கையெழுத்திட அரசன் கட்டாயப்படுத்தினான். ஆழ்வான் முடியாது என்று மறுக்க, அரசன் அவர்களுடைய கண்களைப் பறிக்க ஆணையிட்டான். ஆழ்வான் “நீ என் கண்களைப் பறிக்க வேண்டாம், என்று தாமே பறித்துக் கொண்டார். முதிர்ந்த வயதுடைய பெரிய நம்பிகளின் கண்களைக் காவலாளிகள் கூர்மையான ஆயுதத்தால் பறித்தார்கள். அந்த வேதனையால் பெரிய நம்பி திருவரங்கம் திரும்பும் போதே வழியில் திருநாட்டை அடைந்தார்.

கூரத்தாழ்வான் உங்களையே நினைத்துக்கொண்டு திருவரங்கத்தில் இருக்கிறார்” என்று அந்த வைணவ அடியார் சொல்ல ராமானுஜர் கண்கலங்கி தன் சீடர் சிறியாண்டானை அழைத்தார் (சிறியாண்டான் ராமானுஜர் மடத்தில் கறிகாய், பால் நெய் முதலியவற்றை எல்லாம் ஏற்பாடு செய்பவர்).

”ஆண்டானே! உடனே திருவரங்கத்துக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை அறிந்து வாரும்” என்று சொல்லச் சிறியாண்டான் திருவரங்கம் புறப்பட்டார்.

திருவரங்கம் அடைந்த சிறியாண்டான் கூரத்தாழ்வான் இல்லத்துக்குச் சென்று அவரைச் சேவித்தார். ஆழ்வான் “ராமானுஜர் நலமாக இருக்கிறாரா ?” என்று கேட்க அதற்குச் சிறியாண்டான் ராமானுஜர் நலமாக இருக்கிறார் பெரிய நம்பிகள் பிரிவுக்கு வருந்தியதையும், ஆழ்வான் கண்கள் பறிபோனதற்குக் கதறி அழுதார். நிலைமையை அறிந்து வர என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

”உயிருக்கு உயிரான ராமானுஜர் மேல்கோட்டையில் நலமாக இருக்கிறார் என்று கேட்டு மனம் குளிர்ந்தது. என் கண்கள் மட்டும் தான் போயிற்று உலகிற்கே கண்ணாக விளங்கும் ராமானுஜர் நலமாக இருக்கிறார் என்ற இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன்!” என்றார் ஆழ்வான்.

கண் இல்லை என்றாலும் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அப்போது ஒருவர் வந்து வைணவர்களைக் கொடுமைப்படுத்திய சோழ மன்னன் கழுத்தில் ஒரு பெரிய கட்டி வந்து இறந்தான் என்ற செய்தியைச் சொன்னார். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள சிறியாண்டான் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

சோழ அரசன் மாண்டான் என்ற செய்தியை நிச்சயித்துக் கொண்டு மேல்கோட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில் அம்மங்கியம்மாளை சந்தித்து, இருவரும் விரைவாக மேல்கோட்டை வந்தடைந்தார்கள்.

ராமானுஜர் மேல்கோட்டையில் கல்யாணிப் புஷ்கரணியில் தன் சீடர்களுடன் காலை நீராடிவிட்டு அங்கே அநுஷ்டானம் முடிக்கும்போது சிறியாண்டானும், அம்மாளும் ராமானுஜர் திருவடிகளில் விழுந்து சேவித்து ”திருவரங்கம் திரும்பலாம் !” என்று கூறி பெரிய நம்பிகளுக்கும், கூரத்தாழ்வானுக்கும் அபராதம் செய்த சோழன் கழுத்தில் புண் புழுத்துப் புரண்டு போனான் என்ற செய்தியைக் கூறினார்கள்.

உடையவர் இந்தச் செய்தியைக் கேட்டு ஆனந்தப்பட்டு “சிறியாண்டானே !” என்று அவரை வாரியெடுத்து அணைத்துக் கொண்டு ”நீர் எமக்கு மற்றொன்றில்லாத மாருதி சிறியாண்டான் !” என்றார். அன்று அனுமார் கொண்டு வந்த நல்ல செய்தியைக் கேட்ட சீதை ‘அனுமாரே நீ கொண்டு வந்த நல்ல செய்திக்கு என்னால் கைமாறு செய்ய முடியாது’ என்று சொன்னாள்.

அதுபோல ராமானுஜர் சிறியாண்டானை ‘மாறொன்றில்லா மாருதி சிறியாண்டான் ‘ என்று கூறி என்னிடம் உமக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை அதனால் மீண்டும் உமக்கு த்வயத்தை உபதேசிக்கிறேன்” என்று ராமானுஜர் மாருதி சிறியாண்டானுக்கு மீண்டும் த்வயத்தையே பரிசாக அருளினார்.

”சாமி ! நான் மாருதி சிறியாண்டான் போலச் சோழ அரசன் இறந்தான் என்ற நல்ல செய்தியைக் கூறினேனா ? இல்லையே! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் கண்களில் கண்ணீருடன் “பிள்ளாய் ! இந்தக் கதையைக் கேட்கும் போது எல்லாம் நான் சன்னியாசியாக இருந்தாலும் என் மனம் சஞ்சலம் அடைகிறது. நீ சொல்லியதில் ஒரு தவறு இருக்கிறது. அதைத் திருத்த எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் “ என்றார்.

“என்ன சாமி! நீங்க உங்களைப் பார்த்தாலே மகான் என்று தோன்றுகிறது நீங்க என்னிடம் அனுமதி எல்லாம் கேட்கலாமா ?” என்றாள். “’சோழ மன்னன் இறந்தான் என்ற நல்ல செய்தி’ என்று கூறினாய். அது தவறு குழந்தாய். எவ்வளவு கொடிய கொடியவான இருந்தாலும், வைணவர்கள் என்றுமே ஒருவன் இறக்க வேண்டும் என்றோ அவன் இறந்தான் என்றோ சந்தோஷப்பட மாட்டார்கள். எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்பதே வைணவத்தின் ஆதாரமான கருத்து.

ஆழ்வார் பாசுரங்களிலும், நமது ஆசாரியர்களின் வாழ்க்கை குறிப்பிலும் அவர்கள் யாருக்கும் கெடுதலே நினைத்ததில்லை. ஐந்து வயது பெண் ஆண்டாள் ”வையத்து வாழ்வீர்காள்” என்று எல்லோரும் வாழ வேண்டும் என்கிறாள். ”தீங்கின்றி நாடு எல்லாம்” பாண்டிய நாடு மட்டும் இல்லை எல்லா நாடுகளிலும் மழை பெய்ய வேண்டும் என்று தானே வேண்டிக்கொள்கிறாள் அந்தச் சிறுமி !

மாருதி சிறியாண்டான் கூறிய நல்ல செய்தி ராமானுஜர் மறுபடியும் திருவரங்கம் வரலாம். தாய்ப்பசுவை நோக்கிக் கன்று ஓடுவது போல ராமானுஜர் அரங்கனை நோக்கிப் போகலாம் என்ற பேரானந்தம் தான்!” என்றார்.

“இந்த அறியா சிறுமியை மன்னிக்க வேண்டும்!” என்றாள் “இதில் மன்னிக்க ஒன்றும் இல்லை குழந்தாய்! மாருதியாண்டனையும், கூரத்தாழ்வானையும் நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது!” என்றார் “அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

(Visited 283 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close