அபுதாபி: அபுதாபியில் நீதிமன்ற வழக்காடு மொழிகளாக ஆங்கிலமும் அரபியும் இருந்து வந்தது. தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்படும் என்று அபுதாபி நீதிமன்ற கமிட்டி தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் 9 மில்லியன் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் 30 % இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களே ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு சட்ட ரீதியாக விண்ணப்பப் படிவம், சட்ட திட்டங்கள் அறிந்து கொள்ள சிரமப் படுகிறார்கள். எனவே ஹிந்தி பயன்பாட்டில் இருக்குமேயானால், சட்ட ரீதியான உதவிகளை அவர்களால் எளிதாகப் பெற முடியும் என்பதால் ஹிந்தி மூன்றாவது மொழியாக இணைக்கப்படுகிறது.
இதை பிப்ரவரி 9 அன்று நீதிமன்ற கமிட்டி அறிவித்துள்ளது. ஹிந்தியைக் கொண்டு வருவதன் மூலம் மக்கள் சட்ட வழிமுறைகளை எளிதாகத் தெரிந்து கொள்ளவும், பின்பற்றவும் இயலும். மேலும் தங்கள் பிரச்சினைகளை அவர்கள் தீர்த்துக் கொள்ள நீதிமன்றமே முன்வந்துள்ளதை அங்கு வாழும் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.