செப்டம்பர் 25 – தேசியச் சிந்தனையாளர் பண்டித தீன் தயாள் உபாத்யாயா பிறந்த தினம்
நம் நாட்டுக்காகவும் மக்களின் மேன்மைக்காகவும் சிந்திப்போர் பலர். அந்தச் சிந்தனைக்குக் கோர்வையான திட்டவடிவம் கொடுத்து அதனைச் செயல்படுத்தும் நிலைக்கு எடுத்துச் செல்வோர் சிலர். அந்த சிந்தனையின் அடிப்படையையும் திட்ட வடிவத்தின் போக்கையும் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்துவோர் வெகுசிலர். அத்தகைய அரிய மனிதர்களில் ஒருவர் பண்டித தீன் தயாள் உபாத்யாயா. இவரது முழுமையான மனிதநலக்கோட்பாடு இவரது சிந்தனைக்கும் செயலுக்கும் சான்றுரைக்கும்.
1916ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் ராஜஸ்தானில் மதுராவுக்கு அருகே உள்ள சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார் தீன் தயாள். இவரது தந்தை பகவதி பிரசாத் உபாத்யாயா ஒரு சிறந்த ஜோதிடர். தீன் தயாளின் பெற்றோர் அவருக்கு 8 வயதாகும் போது இறைவனடி சேர்ந்தனர். அதனால் தன் தாய் மாமாவிடம் வளர்ந்தார். பிலானி ஜுன்ஜுனுவில் பள்ளிப்படிப்பை முடித்த தீந்தயாள் கான்பூரில் உள்ள சநாதன தர்மக் கல்லூரியில் பிஏ படிக்கச் சேர்ந்தார்.
சிகர் என்ற என்ற பகுதியின் மன்னர் இவரது திறமையைப் பாராட்டி ஒரு தங்கப் பதக்கமும் அளித்து மேல்படிப்பு முடிக்கும் வரை புத்தகங்கள் வாங்கிக் கொள்ளும் செலவுக்காக 250 ரூபாயும் ஒதுக்கித் தந்தார். புத்தகம் தேவை என்றால் மஹாராஜாவின் அணுக்கரிடம் சொல்லவேண்டும் அவர் பணம் கொடுத்துவிட்டுக் கணக்கு வைத்துக் கொள்வார். 1939ல் பிஏ தேர்ச்சி பெற்றபின் ஆக்ராவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் எம் ஏ ஆங்கில இலக்கியம் கற்கச் சேர்ந்தார். மஹாராஜாவின் உதவியுடன் , தொழிலதிபர் பிர்லா இவர் ஆக்ராவில் தங்கிப் படிக்க ஆகும் செலவுக்காக மாதம் பத்து ரூபாய் கொடுத்து வந்தார்.
ஆனால் அவரது நோயுற்ற சகோதரி 1940ல் இறந்து போனதால் மனமுடைந்த தீன் தயாள் ஆங்கில மேல் படிப்பைத் தொடர இயலாமல் தவித்தார். மஹாராஜாவிடமும் பிர்லாவிடமும் போய் தன் நிலையை விளக்கி படிப்பைத் தொடர இயலவில்லை உதவித் தொகைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டார். அரசுப் பணிக்கான தேர்வு ஒன்றை எழுத தன் மாமியின் ஆலோசனைப்படி சென்றார். தேர்வு மையத்தில் இவர் மட்டுமே வேட்டி குர்தா உடையில் சென்றார். மற்ற அனைவரும் மேற்கத்திய உடையில் வந்திருந்தனர். இவரை அங்கிருந்தவர்கள் பண்டிட்ஜி என்று கிண்டலாக அழைத்தனர். பிற்காலத்தில் அப்பெயரே இவரது அடையாளம் ஆனது. தேர்ச்சி பெற்ற போதும் அரசுப் பணியை ஏற்க இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
சநாதன தர்மக் கல்லூரியில் இவருடன் படித்த பாலுஜி மஹாஷப்தே என்ற மாணவரின் மூலம் 1937ல் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அறிமுகம் கிட்டியது. அப்போதில் இருந்து அவ்வமைப்பின் பயிற்சிகளுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் தீன் தயாள். அங்கு நடந்த விவாதங்களிலும் பங்குகொண்டார். சுந்தர் சிங் பண்டாரி என்ற மாணவரும் இவருடன் படித்தார். பண்டாரி பின்னாளில் ஆர்எஸ்எஸ், ஜன சங்கம், பாஜக என்று பல தளங்களில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.
1942ல் முழுநேர ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் (முழுநேர ஊழியர்) ஆனார். அவ்வாண்டு நாக்பூரில் நடைபெற்ற 40 நாள் சிக்ஷா வர்க்க எனப்படும் பயிற்சிகளில் முதலாண்டு பயிற்சியில் பங்குபெற்றார். தனது பிரச்சாரக் பணியைத் தொடர்ந்து செய்துவந்தார் தீன் தயாள் உபாத்யாயா. பின்னர் இரண்டாமாண்டு பயிற்சி முடித்த பிறகு லக்ஷ்மிபூர் என்ற இடத்துக்கு பிரச்சாரக்காக அனுப்பப்பட்டார். அங்கே குழந்தைகள் முதல் பெரியொர் வரை நம் பாரம்பரியம், பண்பாட்டுப் பயிற்சி, தேச ஒற்றுமை ஆகியன குறித்து வகுப்புகள் நடத்தியும் விவாதித்தும் வந்தார்.
இவர் ஒரு மாதிரி ஸ்வயம்சேவக் என்று குருஜி கோல்வால்கரால் அடையாளம் காணப்பட்டார். உபாத்யாயாவின் பேச்சும் எழுத்தும் செயலும் சங்கத்தின் எண்ணவோட்டத்தை பிரதிபலிப்பதாகவே இருப்பதாக குருஜி பாராட்டினார். இந்நிலையில் 1943ல் ராஷ்டிர தர்மா என்ற பத்திரிகையை உபாத்யாயா லக்னௌவில் ஆரம்பித்தார். விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் தேசப்பிரிவினை குறித்து பேச்சுகள் வந்த போது ஹிந்துத்வ தேசிய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தப் பத்திரிகை பயன்பட்டது. பாஞ்சஜன்யா இதழை 1948ல் லக்னௌவில் தொடங்கினார். இதன் முதல் ஆசிரியராக அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களை நியமித்தார்.
1951ல் டாக்டர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜி பாரதீய ஜன சங்கத்தைத் தொடங்கிய போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பாக ஜனசங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார் உபாத்யாயா. அவரது குறிக்கோள் தேசிய சிந்தனை சிறிதும் மாறிவிடாத ஹிந்துத்வத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சங்க பரிவாரத்தின் இயக்கமாக ஜன சங்கம் மிளிர வேண்டும் என்பதே. உத்தரப் பிரதேசத்தில் ஜன சங்கப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். பின்னர் அகில இந்திய பொதுச் செயலராக பணியாற்றினார். 15 ஆண்டுகள் ஜனசங்கத்தை கட்டியெழுப்பினார் உபாத்யாயா. அப்போதே ஸ்வதேஷ் என்ற தினப் பத்திரிகையையும் தொடங்கி ஆசிரியராகவும் இருந்தார்.
ஹிந்தியில் சந்திரகுப்த மௌரியரின் கதையை நாடகமாக எழுதினார். ஆதி சங்கரரின் கதையை எளிய ஹிந்தியில் எழுதி வெளியிட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்தாபகர் டாக்டர்ஜியின் வரலாற்றை மராத்தியில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.
இவரது கொள்கையான Integral Humanism என்பதே ஜனசங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கையாக 1965ல் அறிவிக்கப்பட்டது. தேசியம், கிராம மேம்பாடு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கைகள் நம் பாரம்பரியம் என்பதை அறியாத ஆங்கிலேயர் சிலரும் மேற்கத்திய கல்வி கற்ற இந்தியர் சிலரும் உபாத்யாயாவின் கொள்கைகள் கம்யூனிசம், காந்தியம், ராணுவக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கூட்டஞ்சோறு என்று விமர்சித்தனர். பாரத பாரம்பரியத்தைத் தான் காந்திஜி முன்னெடுத்தார் என்ற வாதத்தை அவர்கள் புறந்தள்ளி தங்கள் கருத்தையே மீள மீளச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தேசியம் என்பதே காந்தியம் என்று புரிந்து கொள்வோரிடம் பேசிப்பயனில்லை என்று உபாத்யாயாவும் குருஜி கோல்வால்கரும் விட்டுவிட்டனர். பாரதீய பண்பாடு என்பதை ஹிந்தி பேசும் இந்திய மக்களின் பண்பாடு என்று மொழிபெயர்த்துவிட்டு அப்படி இல்லை என்பதற்கு ஆதாரம் கேட்டார் ரிச்சர்டு ஃபாக்ஸ் என்ற பெருமகனார். காந்தியக் கொள்கைகள் சற்றே மாற்றப்பட்டு ஹிந்து தேசியம் எனப்படுகிறது என்றார் இவர். காந்திஜி பேசியதே ஹிந்து தேசியம் தான், போகப் போக கொள்கை நீர்த்துப் போனது என்பதை காந்திக்கான அவமானம் என்று பேசினர் இந்தக் கனவான்கள்.
1967 டிசம்பரில் தீன் தயாள் உபாத்யாயா ஜனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறப்பாகப் பணியாற்றி வந்த அவர் பிப்ரவரி 10, 1968 அன்று பிஹாரில் பட்னா செல்வதற்காக லக்னௌவில் சியால்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணப்பட்டார். பிப்ரவரி 11, அதிகாலை 2.10 மணிக்கு முகல்சராய் என்ற ரயில் நிலையத்துக்கு வண்டி வந்த போது இவரைக் காணவில்லை என்று டிடிஆர் புகார் செய்தார். ரயில் நிலையத்தில் இருந்து 750 அடிகள் தொலைவில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கையில் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பிடித்தபடி உயிர்விட்டிருந்தார் உபாத்யாயா. இவர் கொண்டு வந்திருந்த பெட்டி, படுக்கையும் கோப்புகளும் திருடு போயிருந்தன.
அரசு சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் இவரது முதல்வகுப்பு படுக்கைக்கு அன்றிரவு இரு அடையாளம் தெரியாத மனிதர்கள் சென்றதாக தெரியவந்தது. பின்னர் அவர்கள் அடையாளம் காணப்பட்டு ராம் அவத், பரத் லால் என்று தெரியவந்தது. இவர்கள் உள்ளூர் கொள்ளையர்கள் என்றும் அவரது பையைத் திருட வந்து அங்கே அவரைத் தள்ளிவிட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தனர் என்றும் சிபிஐ சொன்னது.
வழக்குப் பதிந்தது சிபிஐ. நீதிமன்றத்தில் கொலைக்கான ஆதாரம் சரியாக இல்லை என்று இருவரும் விடுவிக்கப்பட்டனர். பரத் லால் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை தரப்பட்டது. ஆனால் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அதிலிருந்தும் அவன் விடுதலை பெற்றான்.
பாராளுமன்றம் கொந்தளித்தது. 70 எம்பிக்கள் தீன் தயாள் உபாத்யாயாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோபத்தில் பேசினர். அரசு உடனடியாக பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிட்டி அமைத்தது. நீதிபதி தன் அறிக்கையில் “உபாத்யாயா அவர்கள் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கம்பம் ஒன்றில் தலை முட்டியதால் உடனடியாக உயிரிழந்தார். ஆனால் உடலில் உள்ள காயங்கள் அதற்கு முன்பே ஏற்பட்டவை. கொலையும் அதைத் தொடர்ந்த திருட்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. என் முன்னே வந்த சாட்சிகள் ஆதாரங்களைக் கொண்டு இக்கொலையில் அரசியல் இல்லை என்று நான் ஓரளவுக்கு நம்பிக்கையோடு சொல்வேன். கொல்லப்பட்டவருக்கு அரசியல் எதிரிகள் உள்ளனர் என்பதும் உண்மை, ஆனால் அவரது கொலை அரசியல் கொலை என்ற குற்றச்சாட்டுக்கு வலுவில்லை” என்றார்.
1978ல் அரசு இவரது உருவம் பொதித்த தபால் தலை வெளியிட்டது.
2016ல் தொடங்கி பல அரசு நலத்திட்டங்களுக்கு பாரத அரசு தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பெயரை வைத்துள்ளது. இளைஞர் முன்னேற்றம், கிராம முன்னேற்றம், மின்னொளித்திட்டம், மருத்துவ உதவி என்று உபாத்யாயா கனவு கண்டு திட்டமிட்ட பல திட்டங்கள் இவர் பெயரில் செயல்படுகின்றன.
வந்தே மாதரம்!