தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்தநாள் – ஏப்ரல் 19
இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரும், உலகளவில் பெரும் செல்வந்தருமாகிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திரு முகேஷ் அம்பானி பிறந்தநாள் இன்று.
அந்தக் கனவின் தொடக்கப்புள்ளி இன்றய ஏமன் நாட்டின் ஏடன் துறைமுக நகரில் தொடங்குகிறது. குஜராத்தைச் சார்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த திருபாய் அம்பானி தனது இளம் மனைவியோடு பொருளீட்ட கடல் கடந்து ஏடன் நகருக்கு குடியேறினார். அங்கிருந்து சொற்ப பணத்தோடு மீண்டும் 1958ஆம் ஆண்டு தொழில் செய்யும் கனவோடு மும்பாய் நகருக்கு வந்தார். அப்போது அவர் குடும்பத்தில் ஒரு புதிய வரவு. ஒரு வயதே ஆன முகேஷ் அம்பானியைக் கையில் ஏந்தி திருபாய் இந்தியா வந்திறங்கினார்.
இளைய சகோதரர் அனில் மற்றும் இரண்டு சகோதரிகளோடு மும்பை நகரில் முகேஷின் இளமைப் பருவம் கழிந்தது. பிள்ளைகள் வளருகின்ற காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழிலதிபராக திருபாய் உருவாக்கிக்கொண்டு இருந்தார். மிகப்பெரும் அளவிலான தொழில்சாலைகளைத் தொடங்க அவர் முயற்சி செய்யும்போது, இந்தியாவின் கட்டுப்பாடான தவறான தொழில்கொள்கைகள் அவரது முயற்சிகளுக்கு தடையாக இருந்தது. வங்கிகளை நம்பாது, நேரடியாகப் பொதுமக்களிடம் பங்குகள் அளிப்பதின் மூலம் பணம் திரட்டி, இந்தியாவில் பங்கு வர்த்தகத்தின் புதிய அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டு இருந்தார். சட்டங்களை தனக்கு சாதகமாக வளைத்தார் என்றும் முறையற்ற வழிகளில் தனது குறிக்கோளை அவர் அடைந்துகொண்டு இருந்தார் என்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கிக்கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் தனது பொறியியல் பட்டத்தை ரசாயனத் துறையில் பெற்ற முகேஷ் தனது மேற்படிப்புக்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். ஆனால் ஏட்டுப் படிப்பு போதும், நேரடியாக தொழிலில் இறங்கி கற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணிய திருபாய், முகேஷை மேலான்மைப் பாடத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மீண்டும் இந்தியா திரும்பச் சொன்னார்.
1980ஆம் ஆண்டு பாலிஸ்டர் இழைகளைத் தயாரிக்கும் தொழிலுக்கான அனுமதியைப் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆலையை நிறுவ பணிக்கப்பட்ட முகேஷ், குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக, எதிர்பார்க்கப்பட்ட முதலீட்டுக்குளாக ஆலையை வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டினார். உயர் ரத்த அழுத்தத்தாலும் பக்கவாதத்தாலும் 1986ஆம் ஆண்டு திருபாய் அம்பானி பாதிக்கப்பட்ட பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதுகெலும்பாக முகேஷ் உருவானார். நிறுவனத்தின் முகமாக அனில் அம்பானியும் அச்சாணியாக முகேஷும் தங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். பாலிஸ்டர் இழைக்களுக்கான மூலப்பொருள் பெட்ரோலியம். அதனால் குஜராத் ஜாம்நகரில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையையும் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவியது. அதன் பின்னர் தொலைதொடர்பு துறையிலும் கால் வைத்தது. எந்தத் தொழிலில் இறங்கினாலும் மிகப் பெரும் அளவில் மட்டுமே சிந்தித்து செயல்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அளவில் மிகப் பெரும் நிறுவனமாக உருவானது.
இதனிடையில் 2002ஆம் ஆண்டு திருபாய் அம்பானி காலமானார். மிகக் குறுகிய காலத்தில் முகேஷும் அனிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தை தங்களுக்குள்ளாக பிரித்துக்கொண்டனர். புதுயுகத் தொழில்களான பங்கு வர்த்தகம், காப்பீடு, பரஸ்பர நிதி, தொலைதொடர்பு ஆகியவை அனிலுக்கும் பெட்ரோல் சுத்திகரிப்பு, பாலிஸ்டர் இழை தயாரிப்பு போன்ற துறைகள் முகேஷுக்கும் என்று பிரிக்கப்பட்டன. ஆனால் காலம் இளைய சகோதர் அணிலுக்கு சாதகமானதாக இருக்கவில்லை. பெரும் பொருள்நஷ்டத்தை எதிர்கொண்ட அனில் குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும் தொகையை திருப்பிச் செலுத்தாவிட்டால் சிறைக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. பொறுப்பான மூத்த சகோதரராக முகேஷ் தனது தம்பியின் கடனை அடைத்தார். இதற்கு நடுவில் தொலைதொடர்பு, சில்லறை வணிகம் போன்றவற்றில் முகேஷ் தனது திறமையைக் காட்டி அதிலும் முத்திரை பதித்தார்.
பல லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலமும், பல நூறு கோடி ரூபாய்களை அரசுக்கு வரியாகச் செலுத்துவதன் மூலமும், அதனைத் தாண்டி வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 450 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சமுதாய சேவைக்கும் முகேஷ் அம்பானி அளித்து வருகிறார்.
செய்க பொருளை என்று வள்ளுவம் கூறுவது போல, இந்தியாவின் பல்வேறு தொழிலதிபர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வரும் முகேஷ் அம்பானிக்கு நமது நல்வாழ்த்துகள்.