ஏப்ரல் 2 – விடுதலைப் போராட்ட வீரர் வவேசு ஐயர் பிறந்ததினம்
நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் வரிசையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் வராகநேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வவேசு ஐயர். வஉசி, பாரதியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து நாட்டு விடுதலைக்காகவும் சமுதாய சீர்திருத்தத்துக்காகவும் பாடுபட்டார்.
1881 ஏப்ரல் 2ஆம் நாள் திருச்சிக்கு அருகில் உள்ள வராஹநேரியில் பிறந்தார் சுப்பிரமணியம். ஆரம்பக் கல்வி முடித்த பிறகு திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அரசியல், வரலாறு, லத்தீன் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சியுடன் பிஏ பட்டம் பெற்றார். சட்டம் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிளீடராகத் தேர்ச்சி பெற்றார். திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் பிளீடராக பணிபுரிந்தார். அங்கிருந்து 1906ல் ரங்கூன் சென்று ஒரு ஆங்கிலேய பாரிஸ்டரின் அலுவலகத்தில் துணை வழக்கறிஞராக பணியாற்றினார். அங்கிருந்து 1907ல் லண்டன் சென்று லிங்கன்ஸ் இன் பயிற்சியகத்தில் பாரிஸ்டர் பட்டத்துக்குப் பயின்றார்.
லண்டனில் விநாயக தாமோதர சாவர்க்கருடன் நட்பு ஏற்பட்டது. இந்தியா ஹவுஸில் அவருடன் பழகிவந்தார். சாவர்க்கரின் நட்பால் இந்திய விடுதலையில் ஆர்வம் கொண்டு ஈடுபட்டார். 1910ல் இவரது விடுதலைப் போராட்டச் செயல்பாடுகளைக் காரணம் காட்டி ஆங்கிலேய அரசு இவரை லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் அரசுக்கு எதிராகச் சதி செய்த குற்றத்துக்காகக் கைது செய்ய உத்தரவிட்டது. பாரீஸிலேயே அரசியல் அகதி என்று தங்கிவிட முடிவு செய்த போதும் பின்னர் முடிவை மாற்றிக் கொண்டு இந்தியா வந்தார். ஒரு முஸ்லிம் போல வேடம் அணிந்து கைதாவதில் இருந்து தப்பி பாண்டிச்சேரி போனார்.
அங்கே சுப்பிரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், அரவிந்தர், வாஞ்சிநாதன் ஆகியோருடன் நட்புக் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.பாண்டிச்சேரியில் இவர் ஆங்கிலேய துணை கலெக்டர் ஆஷைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டியது ஆங்கிலேய அரசு. சுப்பிரமணிய ஐயருக்கும் சுப்பிரமணிய பாரதியாருக்கும் இது மிகவும் கவலைக்குரிய விஷயமானது. 1914ல் எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் சென்னையில் குண்டு வீசித் தாக்கியது பாண்டிச்சேரியில் வசித்த அரச விரோதிகளின் சதிச் செயல் என்று ஆங்கிலேய அரசு சொன்னது.
பிரெஞ்சு கவர்னரிடம் இந்த போராட்டக்காரர்களை ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்த கேட்டுக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால் பிரெஞ்சு அரசு வழக்குப் போட்டு இவர்கள் மீதான் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க இயலாமல் விடுதலை செய்தது. இந்த விசாரணைக் காலத்தில் சுப்பிரமணிய ஐயர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நாடு கடத்தப்பட்டால் நாட்டை விட்டுப் போகும் முன்பு ஏதாவது சாதிக்க விரும்பியதாக பின்னர் ஐயர் தெரிவித்தார்.
முதலாம் உலகப் போர் முடிந்த பிறகு சென்னை திரும்பிய சுப்பிரமணிய ஐயர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1921ல் அரசவிரோதக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் கம்பராமாயணம் பற்றி புத்தகம் எழுதினார். ஒரு எழுத்தாளராக தமிழில் சிறுகதை வடிவின் தந்தை என்று சுப்பிரமணிய ஐயர் அறியப்படுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மஹாதேவி என்ற ஊரில் பரத்வாஜ ஆசிரமம் தொடங்கினார். அதனை நடத்துவதில் சில சமூகச் சிக்கல்களைச் சந்தித்தார்.
1925 ஜூன் 3ஆம் தேதி பாபநாசம் அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி விழ இருந்த தன் மகள் சுபத்திராவைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்தவர் கரைசேரவில்லை. பாரத மாதாவிடம் ஐக்கியமானார்.