மத்திய வளைகுடா நாடுகள் வெளிநாட்டினரை திருப்பி அனுப்புகிறது- அவர்களைக் கொடூரனாக சித்தரிக்கும் மனப்பாங்கு சரியானதா?
மத்திய வளைகுடா நாடுகளிலிருந்து, வெளிநாட்டினரை அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக பலரும் செய்திகளைப் பகிர்கின்றனர்.
தினமும் என்னுடைய மொபைலுக்கு ஒரு மெசெஜ் வருகிறது. Illegal Immigrants, Visa Expired Expatriates, No Passport Holders, Medical Insurance இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும் என மெசேஜ் வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரசுகள் இதைச் சொல்வதில் பொருள் உள்ளது. ஏனெனில் மேற்கூறிய விஷயங்களில் முறையின்றி இங்கு பணியாற்றி வரும் வெளிநாட்டினர் , தற்போதைக்கு உயிருக்குப் பயந்து மருத்துவமனை சென்றால், நோய் குணமானவுடன் நம்மை ஜெயிலில் போடுவார்களோ அல்லது சொந்த நாட்டிற்கு அனுப்பி விடுவார்களோ என்ற அச்சம் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் கொரோனாவால் நிறைய பேர் இறக்கவில்லை என்பதால், அச்சமின்றி இதை மருத்துவமனைக்குச் செல்லாமல் பாராசிட்டமால் போன்ற மருந்துகளை எடுத்துக் குணமடைகிறோமா என பார்க்கலாம். அத்தகைய ரிஸ்க் எடுக்கலாம். அதனால் அவர்கள் மருத்துவமனை வராமல் இருப்பதை இங்குள்ள அரசுகள் கண்டறிந்திருக்கலாம். இதற்குக் காரணம் பல தொழிலாளிகள் வசிக்குமிடங்களில், கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது உண்மை. இதன் மூலம் பலருக்கும் இது பரவும் அபாயமிருப்பதால் தான் இத்தகைய மெசேஜ்கள் அனைவரது மொபைல் எண்ணுக்கும் செல்கிறது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்து வெளிநாட்டினரையும் வெளியே தள்ளி விடுவார்கள் என்ற செய்தி பரப்பப்படுகிறது. அப்படி எவ்வாறு நடக்க இயலும்?
மத்திய வளைகுடா நாடுகளில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக வெளிநாட்டினர் இருக்கிறார்கள். சவூதி மற்றும் ஓமனில் வேண்டுமானால் உள்ளூர்வாசிகள் அதிகம் இருக்கலாம். மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை வெளிநாட்டினரே அதிகமாக இருப்பர். இப்போது மத்திய கிழக்கு நாடுகள் நினைத்தாலும் அத்தனை வெளிநாட்டினரையும் அனுப்ப இயலுமா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? நிச்சயம் வேலை வாய்ப்பை இழந்தவர்கள், முறையின்றி இங்கே வசிப்பவர்களை மத்திய வளைகுடா நாடுகள் திருப்பி அனுப்பவே செய்யும். ஏனெனில் நிறுவனங்கள் வேலையை விட்டுத் தூக்கினால் அவர்களை வைத்து , இங்குள்ள அரசுகள் என்ன செய்யும். அவர்களுக்கு உணவு வழங்குவதில் ஆரம்பித்து பல சிக்கல்களைத் தவிர்க்கவே வெளிநாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுமாதிரியான செய்திகளை அந்த நாடுகள் முன்னெடுக்கின்றன என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
அவர்கள் யாரை ஊருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள். அந்தப் பிரிவினரைப் பற்றி கீழே தருகிறேன்.
1. மத்திய வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்குத் தெரிந்த விஷயம் இது. ” சிலர் (அது லட்சங்களில் கூட இருக்க வாய்ப்புள்ளது) Resident ID Renewal செய்யாமல் , அப்படியே எங்கேயாவது பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.
2. சிலர் தன்னுடைய முதலாளி சம்பளம் ஒழுங்காக கொடுக்கவில்லை என்பதால், வேறு ஏதேனும் ஊர்களுக்குச் சென்று நண்பர்கள் மூலம் எங்காவது சென்று சேர்ந்து பணி செய்து வருபவர்கள். அவர்களிடம் சொந்த நாட்டிற்குத் திரும்ப பாஸ்போர்ட் கூட இல்லாமல் பழைய முதலாளியிடம் விட்டுவிட்டு வேறெங்காவது வேலை செய்து வருபவர்கள்.
3. House Driver ஆக வந்த சிலரை அவரது ஓனர்களே , தேவையில்லை என்று கருதும் போது ஊருக்கு வர விரும்பாத பல House Driver கள் வேறெங்காவது வேலை பார்த்துக் கொள்கிறேன், வருடத்திற்கோ/மாதத்திற்கோ உங்களுக்கான பணத்தைத் தருகிறேன் என குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள். அவர்களை நிறுவனங்கள் இந்த நேரத்தில் வேலையை விட்டுத் தூக்க நிறைய வாய்ப்புள்ளது.
4. சிலர் சுற்றுலா விசாவில் வந்துவிட்டு பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பாமல் பணியாற்றி வருபவர்கள்.
5. தற்போது பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தொழிலாளிகளுக்குப் பாதி சம்பளம் அல்லது Forced vacation கொடுத்துள்ளார்கள். அவர்களில் பணியாற்ற விருப்பமில்லாமல் Resign பண்ணி இருந்தால் , அவர்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் அவர்களும் திருப்பி அனுப்பப்படுவர்.
6. வயதானவர்கள் மற்றும் எமெர்ஜென்சி காரணமாக சொந்த நாடுகளுக்குப் பயணப்பட விரும்புபவர்கள் லிஸ்ட் நிறைய இருக்க வாய்ப்புள்ளது.
இவர்களை அனுப்பவே Flight Operate பண்ண ஆரம்பித்தலிருந்து அனுப்பி முடிக்க இரண்டு மாதங்கள் ஆகிவிடும். இதற்கு இடையில் பணியில் இருக்கும் பலரும் திருமணம், குழந்தை பிறந்ததைப் பார்க்க, சுப/துக்க நிகழ்வுகளில் பங்கெடுக்க என பலரும் செல்வார்கள். அப்படியானால் முறையற்று தங்கி இருப்பவர்களை அனுப்ப எத்தனை நாட்களாகும் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.